
|
தமிழ்த்தவம்
தமிழ்நலம் காக்கும் அறப்போர்ப்படை அணிவகுப்பு தன்னார்வத் தமிழ்ப்பணி முனைவர் தமிழண்ணல் 1. நூறு தமிழ்த்துணை இயக்குநர்கள் உடனே சேர்க என அழைக்கின்றோம். தமிழுக்கு இன்று ஒரு மாபெரும் மறுமலர்ச்சி ஏற்படவுளது. மாண்புமிகு கலைஞர் அவர்களாலும் கூட்டணியாட்சியினாலும் தமிழ் ஒரு 'செவ்விலக்கியச் செம்மொழி' என அறிவிக்கப் பெற்றதால் தமிழர்களிடையே, அனைவரிடமும் ஒரு புத்தெழுச்சியும் புத்துணர்ச்சியும் ஏற்பட்டுள்ளன. இடைக்காலத்தே ஏற்பட்ட, சோழர்கால மறுமலர்ச்சிக்கு இதை ஒப்பிடலாம். இதனை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்; காக்கவேண்டும்; வளர்க்க வேண்டும். 2. நூறு தமிழமைப்புக்கள் இதில் இணைக்கப்பட வேண்டும். ஓர் அமைப்பில் குறைந்தது 50 முதல் 100 உறுப்பினர் சேர்க்கவேண்டும். 3. ஒரு கருத்துள்ள 'சிற்றிதழ்களும்' இதில் இணைதல் வேண்டும். 4. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக் கட்டணமாக ரூ. 100/- செலுத்துதல் வேண்டும். செலவு ரூ. 200க்குமேல் ஆகும் என்றாலும் நூறு மட்டுமே கட்டணமாகப் பெறப்படும். அவர்களுக்குப் பன்னிரண்டு திங்களுக்கு, இதழ் அனுப்பப்பெறும். இயக்குநர்களுக்கு, அவர்கள் படம், முகவரியுடன் பணிவிவரமும் எழுதி வெளியிடப்படும். சிறந்த பணி செய்யும் தமிழமைப்புக்கள் இதழ்வழியே, படத்துடன் அனைவர்க்கும் தெரியுமாறு வெளியிடப்படும். 5. தமிழர் ஒருங்கிணைப்புப் பேரியக்கம் இது. இதில் சாதி, குலம், இனம் சமயம், நாடு என எவ்வேறுபாடும் கருதப்படமாட்டாது. 6. இயக்குநர்களுக்குப் பயிற்சிதந்து 'செந்தமிழ்ச் சுடர்' அல்லது 'செந்தமிழ்க் குரிசில்' என்பது போன்ற பட்டம் தரப்படும். கையேடுகள் தந்து பணிசெய்ய வழிகாட்டப்படும். 7. 'செவ்விலக்கியம்' பற்றிய அறிமுகப் பயிற்சிகள் உருவாக்கி, நடத்தப்பெறும். 8. தமிழ் பயிலும் மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் அனைத்துதவியும் தந்து அவர்களைத் தமிழுணர்வும் தமிழறிவும் உடையவர்களாக்க ஆவன செய்யப்படும். 9. வெளிநாடுவாழ் தமிழர்களும் இதில் இணையுமாறு தொடர்புபடுத்தப்படும். 10. நன்கொடைகளால் ஈடுகட்டி, ஓராண்டு முழுவதும் முயன்று, வெற்றிதருமாயின், இதனை ஓர் ஆலென வளர்க்க வாய்ப்புள்ளது. பணி விவரம்
1. இன்றைய தமிழின் தாழ்வுநிலைகள், தீங்குகள் யாவரும் அறிந்தனவே. இவைபற்றி 21 தமிழறிஞர் குழுவைக் கூட்டி முடிவுகள் எடுத்துச் செயற்படுத்தல். 2. ஆயிரம் பேருக்கு இலவயமாக இதழ் ஒன்று அனுப்பும் செலவுக்கு, ஒவ்வோர் இதழிலும் அறிக்கை விடுத்து, நன்கொடை பெறுதல். வசதி உடையோர் தரும் நிதியில், அனைவர்க்கும் அனுப்புவதை ஈடு செய்ய முயலுதல். தமிழக வள்ளல்களிடம் நன்கொடை பெறுதல். இது ஓராண்டுத் திட்டமே. ஓராண்டில் வெற்றி பெறுவதைப் பார்த்து, இவ் இயக்கம் தொடரும் எனத் தொடங்கும் போதே அறிவித்தல். இவ் இதழ் வழி, 1. உலகினரால் அறியப்படாது அரும்பணியாற்றும் தூய, நல்ல தமிழ்த்தொண்டர்களைப் படம், முகவரி பணி மூன்றையும் உலகம் அறியச்செய்தல். 2. மூலையில் முடங்கிக் கிடக்கும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்களை உலகிற்கு அறிமுகப்படுத்துதல். 3. தமிழுணர்வூட்டும் நல்ல தமிழ் நூல்களை, நாமே வாங்கி விளம்பரப்படுமாறு மதிப்புரை எழுதி, யாவரும் தெரிந்துகொள்ள வகை செய்தல். 4. உலகெங்கும் நடக்கும் பயனுள்ள தமிழ் நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் பற்றிச் செய்தி தருதல். 5. சிறந்த சொற்பொழிவுப் பகுதிகளை மட்டும் வெளியிடுதல். 6. தொல் பொருள்ஆய்வுத்துறை, கல்வெட்டுச்செய்தி போல்வன வெளிவரின், அவற்றை யாவரும் அறியப் பதிவு செய்தல் 7. குறும் படங்கள் பல எடுக்கவும் பரப்பவும் செய்தல். 8. சிறந்த தமிழமைப்புக்கள் வரலாறு, பணிவிவரம் வெளியிடல். 9. கலைகள் வழி, பட்டிமன்றம் வழி, பயிற்சிக்களை வழி - பிறவாறு தமிழைப் பொதுமக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல வழிகாட்டுதல். 10. தமிழாய்வுகள், ஆய்வாளர்களை அறிமுகம் செய்தல். ஐயங்களுக்கு விடைதந்து ஊக்கப்படுத்துதல். 11. மக்கள் கேட்கும் தமிழ்பற்றிய வினாக்களுக்கு விடைதருதல் (கேள்வி அரங்கம்) பொதுவாக, இவ்விதழினை நடத்தும் முறையிலேயே நம் வெற்றி இருக்கிறது. ஆசிரியப்பொறுப்பேற்று எம்மால் அதனைக் கொண்டு, ஒரு அறப்புரட்சியை ஏற்படுத்த முடியும். தமிழ் செம்மொழி - செவ்வியல் மொழி என அறிவிக்கப்பட்டது போதாது. அது தொடர்பாகச் செயற்பணிகளில் ஈடுபடாமல் 'தாழ்ச்சியுள் தங்குதல் தீது'. பாராட்டு விழாக்கள் பயன்தரா. புகழ் வேண்டாப் பெருமிதமே பயன்தரும். இந்தியப் பெரு மொழிகள் என ஒன்பது உள, ஆங்கிலம் உட்பட. வடக்கே இந்தி, வங்காளம், குசராத்தி, மராத்தி, இம்மொழிகளில் தமிழிலக்கியம் - தமிழ் மொழியின் தொன்மை உட்பட, செவ்வியக்கியச் சிறப்புக்களை அனைத்து மொழிகளிலும் சிறிய, பெரிய நூல்களை வெளியிட்டுப் பரப்ப வேண்டும். இதற்கு அவ்வம் மொழி சார்ந்த அறிஞர்கள், அமைப்புக்கள், பல்கலைக்கழகங்கள், பதிப்பாளர்கள், ஆர்வலர்களைத் தேடி, இணைத்து, பணிசெய்யச் சிறு முயற்சியாவது தொடங்க வேண்டும். உலகப் பெருமொழிகளில் பரப்பவும், உலக நாடுகளில் எல்லாம் தமிழின் பெருமை பரவவும் ஆவன செய்ய வேண்டும். இவை இங்குக் 'குறிப்பு' அளவிலேயே தரப்பட்டுள்ளன. மாதம் ஒருமுறை அறிஞர் குழுக் கூடி, மேன்மேலும் திட்டமிட வேண்டும். மேடைகளில் அனைவரையும் விளிப்பது, பிறகு புகழ்வது, இம்மியளவும் கூடாது, எந்த ஒரு சொற்பொழிவும் (வகுப்பறை, பயிற்சி வகுப்புத்தவிர) கால்மணி முதல் அரைமணிக்குள் முடிக்கும் பழக்கம் வேண்டும். தலைவராயினும் 'இன்னார் பேசுவார்' என்பது போன்ற நடைமுறை வேண்டும்; அது போதும். வேறு ஆரவார, ஆடம்பர நிகழ்வுகளை மிகவும் மட்டுப்படுத்த வேண்டும், கூடியவரை பயன்பெறவே கருத வேண்டும், தமிழர் ஒருங்கிணைப்புப் பேரியக்கம் - கட்சி, சாதி சமயம் கடந்ததாதலின், அதில் இடம் பெறும் அனைத்துத் தமிழ்ச் சுடரொளியினர்க்கும் இது தான் அடையாளம், இவ்வாறுதான் பண்புடன் நடப்பார்கள் என்ற ஒரு தன்மையை வளர்க்க வேண்டும். ஆயிரம் திட்டங்களைச் செயற்படுத்தும், 'தமிழ்த் தவம்' என்பதே, இவ் அமைப்பின் உயிர்மூச்சாகும். |