விறலியர் பயிலகம்

'குசுப்பிசம்'என் றோதுகின்ற இசமின் றைக்குக்
கொடிகட்டிப் பறக்கிறதாம் நாட்டி லெங்கும்
மசக்கையாகிப் போகாமல் இருந்தால் போதும்
மற்றெந்தத் தப்புமிதி லில்லை யாமே!
உசத்தியான தத்துவமே இதற்கு மேலே
ஒன்றுண்டா உலகத்தில் என்கின் றாராம்!
தசைதானே துப்புரவு செய்தால் போதும்
தவறொன்று மிதிலில்லை என்கின் றாராம்!

ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி முடிவா லிந்த
அருமையான தத்துவமே உருவாச் சாமே!
வாழ்ந்தாலும் இதுபோன்ற வரைமு றையில்
வாழ்வதென வாழ்ந்துகாட்டி வருகின் றாராம்
தாழ்ந்துவரும் தமிழ்ப்பண்பைத் தலைக்கு மேலோர்
சாணுயர்த்தி விடமுடியு மென்கின் றாராம்
ஏழ்பிறவி எடுத்தாலும் இவரைப் போலே
இளைற்களை வழிநடத்த யாரால் கூடும்?

விறலியர்க்குப் பயிலகமொன் றமைத்து மூக்கில்
விரல்வைத்து வியந்திடவே நடத்து வாராம்
இறைத்தொண்டை விடமிகவும் சிறந்த தென்றே
இருந்துவரும் திரைத்துறையை விட்ட கன்று
குறைசொல்லக் கூடாதே எவரு மென்ற
கொள்கையிலே உறுதியுட னிருக்கின் றாராம்
திறமையினை முழுவதுமாய் வெளியே காட்டித்
திகைக்கவைப்பேன் தமிழகத்தை என்கின் றாராம்!

ஆத்தாடி எனமகளிர் வியக்கு மாறே
அடுத்தடுத்துத் திட்டமெலாம் அமையு மாமே.
பார்த்தாயா தம்பிஇங்குத் தமிழ்ப்பண் பாடு
படும்பாட்டை? உருப்படுமா நமது நாடு?
தீர்த்துவரும் திரைப்படத்தைப் பார்த்துக் கெட்டாய்
தீமைகளை அரங்கேற்றி உலவ விட்டாய்
கூத்தாடிக் கும்பலையுன் தலையில் வைத்துக்
கொண்டாடு முனக்கிதுவோர் பாட மாகும்.

-இரா. செம்பியன்

தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம்
மேட்டுப்பாளையம் சாலை, கொங்கம்பட்டு,
விழுப்புரம் மாவட்டம்-605105. பேசி 2699485