பாவலர் பரிசுதிட்டம்-38இல் பரிசு பெற்றவர்
 |
| பெயர்: | வே. இரா. சிவஞானவள்ளல் |
| பிறந்த நாள்: | 01.09.1936 |
| தந்தையார்: | வே.ப. இராசகோபால் |
| தாயார்: | பாக்கியம் அம்மாள் |
| படிப்பு: | பள்ளி இறுதி வகுப்பு |
|
| பணி: | தொடக்கப்பள்ளி ஆசிரியர் (ஓய்வு) |
| படைப்புகள்: | பாடல் நூல்கள் - 39 |
| மனைவி: | சந்திரா |
| மக்கள்: | இரா. பாவேந்தன், இரா. இளங்கோவன்,
இரா. வெண்ணிலா, இரா. அன்பரசி,
இரா. அருளரசி |
| விருப்பம்: | முத்தமிழை மூச்சாகக் கொள்ளும் மூதறிஞர் யாவர்?
அவர் வழியே தித்திக்கும் செவ்வழியாம்!
அந்தத் திருவாளர் செல்வழியே செல்வேன்! |
| முகவரி: | 4/6, கலைஞர் தெரு, புலவர் நகர், அரங்காபுரம், வேலூர் - 632 009. |
பாவலர் பரிசு திட்டம்-39இல்
உரூபா 500 பரிசு பெறும் பாடல் :
1.நீரி லாதபைங் கூழென ஏழையர்
நெளிந்திடும் வேளையிலே
பாரை ஆண்டிட லாமெனும் வேட்கையால்
பரிவுடன் அரசியலார்
ஊரி லுள்ளவர் உழைப்பினில் வந்திடும்
ஒண்பொருள் தமையயல்லாம்
வாரி ஈகிறார்; வஞ்சகர், சிற்சிலர்
வாழ்வினில் உயர்ந்திடவே!
- பைந்தமிழ்ப்பாவலர் புலவர். சி. பெருந்தேவன், தவளக்குப்பம்.
வெளியீட்டுக்குத் தேர்வு பெற்ற பாடல்கள் (வரிசைப்படி) :
2.சோழ னென்றுனைச் சொல்லினர் ஐயகோ
சொத்தையென் றிருந்தாயே!
வேழ மென்றனர் வீரனென் றார்த்தனர்
வெளிறனென் றிருந்தாயே!
காழ முற்றசெவ் வுணர்வின னென்றனர்
கரவனென் றிருந்தாயே!
ஈழ வீழ்வினை எண்ணவும் பொறையிலேம்!
எத்தனென் றிருப்பாயோ?
- தழலெழில், விழுப்புரம்.
3.மாளு கின்றனர் சிங்கள நாட்டிலே
மறத்தமிழ் மக்கயளல்லாம்
மூளும் போரிலே இளைஞரும் சிறுவரும்
மோதியே மடிகின்றார்
நாளு மிப்படி நம்மினம் நம்முனே
நசிவதைப் பொறுப்போமா?
தோளு யர்த்தியே சிங்கள நாய்களைத்
தோற்றிடச் செய்வோமே!
- ப. வனிதா, நெய்வேலி.
4.தீங்கு நல்கிடும் வெம்பகை ஓட்டியே
சீர்வரச் செய்யாமல்
பாங்கு டன்தொழில் மேவிட மக்களும்
பயனுறச் செய்யாமல்
ஏங்கு கின்றநம் தமிழ்வழிக் கற்கவே
ஏதுமே செய்யாமல்
ஆங்கி லேயரின் போக்கிலே இன்னமும்
அடிமையாய் உய்வாயோ!
- புலவர். திருக்குறள் நாவை. சிவம், மணற்பாறை.
5.வாழ வைத்திடும் வள்ளுவர் வழியிலே
வந்திடு; பேரன்பில்
ஆழ வைத்திடும் அருந்தமிழ் இலக்கியம்
அறிந்திடு; நல்லின்பம்
சூழ வைத்திடும் இன்னிசை கேட்டதைச்
சுவைத்திடு; பொல்லாமை
தாழ வைத்திடும் தவறுகள் நீக்கிடு;
சால்புடன் வாழ்வோம்வா!
- வேங்கடேசபாரதி.
6.காடு மேடெலாம் திருத்திய நம்இனம்
கலங்கியே வாழ்கின்றார்;
வீடு பிள்ளைகள் உறவுகள் அனைத்தையும்
விட்டிழந் துழல்கின்றார்
வாடு கின்றவர் இன்னலும் நீங்கிட
வழிமுறை காண்போமேல்
நாடு போற்றிடப் பீடுடன் அன்னவர்
நலமுடன் வாழ்வாரே!
- த. கருணைச்சாமி, தேனி.
7.பாடு கின்றனர் பாட்டென நந்தமிழ்ப்
பண்ணிசை பாழ்படவே
ஆடு கின்றனர் நாட்டியம் அரைகுறை
ஆடையும விழ்ந்துவிழக்
கூடு கின்றனர் கூத்தரின் உளறலை
மிக்குயர் கொள்கையென
ஓடு கின்றனர் யாரொடும் தன்னறி
வின்றியே ஒருப்படவோ?...
- ப. சக்திவேலன், கொட்டப்பட்டு.
8.ஆவின் பாலினுஞ் சுவைமிகும் அமுதெது?
குறுமுனிப் பொதிகையைத்
தாவி வீசிடுந் தென்றலின் இனிதெது?
தையலார் உவந்திறங்கும்
வாவி நீரிடை வளர்தரு தாமரை
மணத்தினைப் பழிப்பதெது?
நாவல் பாவலர் மதுரையில் நடாத்திய
முத்திறத் தமிழன்றோ?
- மு. இராம. கனகராசன்.
9.வான மேபிறக் கும்முனம் தோன்றியே
வாழ்தமிழ்ச் செம்மொழிதான்
நானி லந்தனில் மெலமெல வேயினி
நலிந்திடுங் காணெனவே
கோண லாயுளம் கொண்டவர் கூறுவர்
கூற்றுப்பொய்! தோன்றுபுதி
தான எக்கலை யாயினும் வல்லவ
ளாந்தமிழ்க் கேதழிவே!
- மு. திருவாணன், திண்டுக்கல்.
10.ஒண்ட வீடிலா மக்களுக் குறுமனை
உதவிகள் புரிந்தீரே!
வண்டு நேர்விழி மங்கையர் பயனுற
வளம்பல சேர்த்தீரே!
கண்டு நேர்மொழி கன்னியர்க் கூர்திகள்
களிப்புற ஈந்தீரே!
உண்டி ஈந்தெமக் குடைகளும் ஈந்தீரே
ஒருதொழில் ஈவீரோ!
- வே. ச. திருமாளவன், புதுவை.
11.வாரி வாரியே செல்வமும் பொன்னையும்
வந்தவர்க் கீந்தனரே!
காரி ஓரியாய் வள்ளலார் நாட்டினைத்
கண்டவர்க் கீந்தனரே
பாரி தேரினை முல்லையம் கொடிக்கெனப்
பரிவுடன் ஈந்தனரே!
வாரித் தந்தகை கொட்டிடும் வறுமையால்
வாடியே நீட்டுதையோ!
- வேலூர்த்தமிழரசி.
12.வாழ வேண்டியே வாட்டிடும் வறுமையால்
வண்டமிழ் மாந்தரெலாம்
தாழ நின்றுமே பற்பல நாடெலாம்
தாளினைப் பதியவிட்டார்!
ஆழச் செல்வமும் ஆழ்ந்தபேர் உழைப்பினால்
ஆக்கினர் பொன்னிலமாய்!
ஏழை மையிவர் வாழ்வினில் இன்றுமேன்
எட்டியே போகவிலை?
- புலவர் அழகரசன், வேலூர்.
13.செய்த நன்மையை மட்டுமே சொல்லுக!
செய்திடா தொன்றினையே
செய்த தாகவே பறையறைந் திடுவது
சீரிய செயலலவே!
செய்த தீமையை மறைத்திட முயல்வது
சிறியவர் செய்கையதே!
உய்ய வேண்டிடின் செய்தஅத் தீமையை
உரைத்திடத் தயங்காதே!
- து. ஆதிநாராயணமூர்த்தி.
முன்னரே பரிசு பெற்றறோரின் பாடல்கள் :
1.இன்னல் தந்திடும் ஏழ்மையால் நலிகிறேன்
என்றுரைத் தழலாமோ?
உன்னி னும்பலர் உலகினில் துயருறும்
உண்மையை உணராயோ?
பொன்னும் செந்தழல் சுடவொளி தருமெனும்
பொருளுரை தேராயோ?
உன்னை நம்பியே ஊக்கமாய் உழைத்திடின்
உறுபயன் பெறுவாயே!
- புலவர். மா. சு. மணி, திருக்கழுக்குன்றம்.
2.ஆட்சிக் கட்டிலில் ஏறிடச் சூழ்ச்சிகள்
அனைத்தையும் செய்கின்றார்!
கூட்டுக் கொள்ளையில் ஆட்சியர் அலுவலர்
கூடியே கொள்கின்றார்.
நாட்டு மக்களின் நன்மையைக் கருதியே
நல்லவர் குரல்கொடுத்தால்
ஆட்சி பொங்கியே தடியடி என்றுமே
ஆட்டியும் படைக்கிறதே!
- வே. இரா. சிவஞானவள்ளல், வேலூர்.
கருத்தூன்றுக
சென்ற பரிசுதிட்டத்தில் கேட்டிருந்த பாடல் அறுசீர்மண்டிலத்தில் ஒருவகை. திருவாசகம் திருச்சதகத்தில் ஆன்மசுத்தி, அதிசயப் பத்து, அற்புதப்பத்து என்னும் பகுதிகளில் வரும் வகை அது. அதன் இலக்கணத்தை,
குறிய ஈற்றுமாக் கூவிளம் முவ்விளம்
காயயாடும் குறிக்கொள்ளே (1-4)
என்று விருத்தப்பாவியல் கூறுகிறது. இதன் உரையாசிரியர், 'குறிலையோ குறிலொற்றையே இறுதியாகக் கொண்ட மாச்சீர் ஒன்றும், கூவிளச்சீர் ஒன்றும், விளச்சீர் மூன்றும், காய்ச்சிர், ஒன்றும் வரும்' என்கிறார். அந்தக் காய்ச்சீரும் மாங்காய் என அறிக என்கிறார். இதற்குக் காட்டாக அவர் காட்டிய திருவாசகப்பாடலில் அடியிறுதி களில் 'என்புருகி', 'பாதமலர்' என விளச்சீர்களும் வருகின்றன. பாவலர் பண்ணை முதற்பதிப்பு 55ஆம் பக்கத்திலும் இதன் இலக்கணம் உள்ளது. மோனை 5 அல்லது 6 ஆம் சீர்களில் வருகிறது.
அனுப்பப்பட்ட பாடல்களில்
1. இரண்டாம் சீராக நினைவுகள், எதுவுமே என்பன போன்ற கருவிளச்சீர்களையும் கவர்ச்சி என்பதுபோன்ற மாச்சீர்களையும் சிலர் சேர்த்திருந்தனர்.
2. விளச்சீர் வரும் இடங்களில் சிலர் தலைமை, உணவை, அருந்தி என்பன போன்ற மாச்சீர்களைப் பெய்திருந்தனர்.
3. நல முண்டு + ஓடும் - இவை புணர்ந்தால் சீர் சிதையும்.
4. உளுத்தர் என்பது உலுத்தர் என்பதன் பிழைவடிவென்று கருதுகிறேன். அங்ஙனமாயின் அது வடசொல்.
5. அயற்சொற்கள் : ஈசன் (இறைவன்), சிந்தை (மனம்), நாதி (பேணுநர்), மது (கள்), குணம் (பண்பு), சுகம் (நலம்).
பாவலர் பரிசு திட்டம் - 40
அன்னைநிலந் தன்னை அடைந்தீழ நாட்டார்கள்
நன்னிலையைக் காணலெந்த நாள்? - இரா. தி.
இச் செய்யுளின் அமைப்பில் விரும்பிய பொருளமைய ஒரு பாடல் படைத்து, வரும் மீனம் உ0 (2.4.2008) க்குள் விடுக்க.