ஆண்டு : க௪
இதழ் : க௨
தி. ஆ. உ0௩௯, மீனம்,
14 - 03 - 2008
உதைப்பதற்கே ஒரு காலைத் தூக்கி நின்றேன்!

"செந்தமிழால் பாடு கென்று நீகேட்ட
படிநின்றன் திருமுன் நின்று
நந்தமிழர் பாடுதற்குத் தடைசெய்து
குரைத்திட்ட நாய்கள் தம்மை,
முந்திஅந்தக் கூற்றுவனை உதைத்ததுபோல்
உதைத்தொழிக்க முயன்றி டாமல்,
எந்தவகை பொறுத்திருந்தாய் அம்பலத்தில்
ஆடுகின்ற இறைவா சொல்லாய்!"

"விருப்புடனே தமிழ்கேட்டு மகிழஅந்தச்
சொறிநாய்கள் விடாமை கண்டேன்,
உருத்தெழுந்தேன்; ஒருகாலைத் தூக்கிவிட்டேன்;
உதைக்கமனம் ஒப்ப வில்லை.
தெருப்பொறுக்கி நாய்களைஎன் வெறுங்காலால்
உதைப்பதுவும் சிறப்பே; காலிற்
செருப்பிருந்தால் ஆர்க்காட்டுச் செருப்பிருந்தால்
உதைத்திருப்பேன் செம்மை யாக!"

-இரா. திருமுருகன்.