
|
தலையின் இழிந்த மயிரனையர்
ஒழுக்க நெறி பிறழாத ஒருபெண் தூய்மையின் வடிவம்; தாய்மையின் அடையாளம். பண்பின் நிறைகுடம். அவள் எங்குச் சென்றாலும், யாருடன் பழகினாலும் அவளின் கள்ளங் கவடற்ற முகத்தைப் பார்த்த அளவிலேயே ஆடவர் அவளைக் கையயடுத்து வணங்குவர்; அவள் மீது உடன்பிறப்பு அன்பு செலுத்துவர். கீழோரும் கூட அவளைக் கண்டு ஒதுங்கிச் செல்வர். அவள் வேண்டினால் அவளுக்கு அன்போடு பணிவிடை செய்யவும் முன் வருவர். ஆயினும் அடக்க வரம்பிலிருந்து அவள் கடுகளவு பிறழ்வாளாயினும், உணர்வில் சிறிது தூய்மை குன்றி, விழிகளும் இதழ்களும் சற்றே தவறான நோக்கத்துடன் அலைபாயுமாயினும் அவளைச் சுற்றியிருந்த காப்பரண் சிதைந்து விடும். வணங்கும் தன்மையைத் தூக்கி எறிந்து ஆடவர் அவளிடம் வம்பு செய்யத் தொடங்கி விடுவர். பண்பின் நிலைக்களனாக இருந்த அவள் பாலினக் கவர்ச்சிப் பொருளாகக் கருதப்பட்டு அத்தனைப் பேராலும் கொத்தி அலைக்கழிக்கப்படுவாள். இன்று, தமிழினம் அப்பெண்ணின் சீரழிந்த நிலையிலேயே உள்ளது. இனமொழி உணர்வாம் காப்பரண் சிதைந்த அளவிலேயே தமிழன் எல்லாருக்கும் கிள்ளு கீரையாகவும் மிதிபடு பொருளாகவும் மாறிவிட்டான். சுற்றியுள்ள ஆந்திரத்தானும் கன்னடத்தானும். கேரளத்தானும் அவனிட மிருந்து தங்களுக்கு வேண்டிய வற்றைப் பிடுங்கிக் கொண்டு, கொடுக்க வேண்டிய வற்றைக் கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர். காவிரிச் சிக்கல், முல்லைப்பெரியாற்று அணை, பாலாற்றில் அணை, சேலம் தொடர் வண்டிக் கோட்டம் போன்ற அத்தனைச் சிக்கலிலும் தமிழன் முகத்தில் கரி பூசப்படுகின்றது. மார்வாரியும் குசராத்தியும் தமிழகத்தை வாணிக வேட்டைக்காடாக்கி வளமனைத்தும் சுரண்டுகின்றனர். தமிழன் பிறமாநிலங்களில் எங்குப் போனாலும் பிழைப்பு மறுக்கப்பட்டுப் பிறரால் எள்ளவும் இகழவும் படுகின்றான். ஆனால் பிற மாநிலத்தவன் எவன் வந்தாலும் இங்கு அதிகார வாழ்வு நடத்துகின்றான். தமிழன் மீது குதிரை ஏறுகிறான். எந்த நாட்டிலும் நடக்காத கொடுமை, இங்கு அப்பாவித் தமிழ் மீனவர் நூற்றுக்கு நூறு இந்தியக் குடிகளாயிருந்தும் சிங்களன் அவர்களைக் கொல்லவிட்டு இந்திய அரசு பார்த்துகொண்டு சும்மா இருப்பதுதான். தமிழரல்லாத மீனவர்க்கு இந்தக் கொடுமை நடக்குமா? தமிழகத் தமிழன் இனவுணர் வோடிருந்தால் சிங்கள வெறியர்களும் தில்லி நரிகளும் ஈழத்தமிழர் மேல் கைவைக்க முடிந்திருக்குமா? இன்று? சிங்கள வெறியர் எல்லா வகையிலும் தமிழரை அழிக்கின்றனர். தில்லி அரசு அவர்களுடன் கூடிக்கொண்டு அவர்களை மேலும் அழிக்கப் பணமும் படைக்கலமும் கொடுத்து உதவுகின்றது. அதுமட்டுமா, கூடங்குளம் அணுவுலை செயற்படுமாயின் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் சிங்கள னுக்கும் ஒரு பங்கு வழங்கத் தில்லி அரசு, திட்டமிட்டிருக்கிறதாம்! என்ன கயவாளித்தனம்! தமிழன் தமிழ்மண்ணிலேயே எல்லாருக்கும் இளக்காரமாய்ப் போனதால் தானே பார்ப்பனரும் பார்ப்பன இதழ்களும் இங்கிருந்து கொண்டே தமிழருக்கு எதிரான எல்லாக் கீழறுப்பிலும் ஈடுபடுகின்றன. எடுத்துக் காட்டு, இந்துப் பார்ப்பான் இராம். இவன் சிங்களரிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு தமிழரைப் பழித் தெழுதுவதே வேலையாயிருக்கின்றான். இராம கோபாலப் பார்ப்பான் சேதுக் கால்வாய்த் திட்டத்தின் குறுக்கே போய்ப் படுத்துக் கொள்கின்றான், உலகமே தமிழனைப் பார்த்துச் சிரிக்கின்றது. இப்படி இன்னும் ஆயிரம் சொல்லலாம். தமிழன் தமிழ் மண்ணிலேயே இழிக்கவும் பழிக்கவும்படுகின்றான். அவன் உரிமைகயளல்லாம் பறிக்கப்படுகின்றன. அவன் பண்பாடு சீரழிக்கப்படுகின்றது. உலகில் வேறு எந்த மொழிக்காரனுக்கும் இல்லாத இந்த அவலநிலை தமிழனுக்கு மட்டும் இருக்கிறதே, ஏன்? ஏன்? தமிழன் தமிழ் என்னும் காப்பு அரணைத் தானே அகற்றி எறிந்ததுதான் காரணம். எப்படி ஒருபெண் அடக்க வரம்பிலிருந்து சிறிதே பிறழ்ந்தாலும் கீழ்மைமிக்க ஆணுலகம் அவளைச் சிதைத்துச் சீர் குலைக்குமோ அப்படித் தானே இன்று சுற்றியிருக்கும் எல்லாப் பயல்களும் அவனவன் பங்குக்குத் தமிழனைச் சீரழிக்கின்றனர். ஏசல், எள்ளல், இழித்தல், பழித்தல், உரிமை பறித்தல் எல்லாத் தீமைகட்கும் தமிழன் ஆளாக்கப்படுகின்றான். மொழி உணர்வை, இனவுணர்வை அவன் தூக்கி எறிந்ததுதான் காரணம். தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் |