ஆண்பிள்ளைப் பெருமாள் - சிறுகதை
புலவர் தி. நா. அறிவுஒளி, மறைமலை நகர்.

வானம் இருண்டு வந்தது. காற்று வீசவில்லை. வெளியே புழுங்குவது போலப் புழுக்கம். மேலே போட்டிருக்கும் போர்வையையும் எடுத்துப் போட்டுவிட்டு மக்கள் காற்றை விரும்பி வயல் வரப்பு, ஏரிக்கரை, தோப்பு, குளக்கரை என்று போயிருந்தனர்.

மாரி இருபதே அகவையுள்ள இளம்பருவச் சிட்டு. காரி இருபத்தைந்து அகவையுள்ள பரவமொட்டு.

ஆறு திங்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் ஆகியிருந்தது. புது மணமக்களுக்குக் குடிசை வீட்டுப் புழுக்கம் தாளவில்லை. வீட்டைச் சுற்றி மாமரம், தென்னைமரம் எல்லாம் இருந்தும் ஓரிலை அசையவில்லை. அதனால் காலார நடந்து சோளக் கொல்லைப் பக்கம் சென்றனர்.

சோளக்கொல்லை வரப்பில் அமர்ந்து பேசியிருந்தனர்,

"அத்தான்" நீங்கள் கடத்தூர்ப் பகுதி ஆட்சியாளர் ஆரோதன் இருகன் பெருமாள் அரண்மனைக்குப் போனீர்களாமே! செல்லி சொன்னாள். எனக்குச் சொல்லாமல் போனது என்ன?

மாரி, உன்னிடம் சொல்லாமலா? சொன்னால் தடுப்பாயோ என்றெண்ணினேன். அதனால் சொல்லவில்லை.

உக்கும். நீங்கள் எதைச் சொல்லி நான் மறுத்தேனாம்?

சினம் கொள்ளாதே. கடத்தூர் நாட்டு நாயகம் செய்வான், 'ஆராதன் இருகன் பெருமாள்' நிலைப்படைக்கு ஆள் எடுக்கிறார். என்று செய்தி கேட்டேன். நம் சோளக்கொல்லையின் வருமானம் போதவில்லையே படையில் சேர்ந்தால் போர் வரும் போது மட்டும் போரிட வேண்டும். போர்ப்பயிற்சி பெற்றிருந்தால் எந்தநாட்டு ஆள் பவரும் 'கூலிப்படை மறவனாக' நம்மைக் கூப்பிடுவான் போய்வந்தால் செல்வம் கிடைக்கும் அல்லவா!

ஏன் அத்தான் படையில் சேர்வது நல்லதா? எனக்குப் பிடிக்கவில்லை.

போசளமன்னன் வீர ராமனாத தேவர் ஆட்சியேற்று முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆயின. அந்த அரசனுக்கடங்கி இருகன் பெருமாள் ஆட்சியில் நம் கடத்தூர் நாடு இருக்கிறது. இந்த முப்பத்து முன்று பெரும் போர் எத்தனை வந்தது கண்ணே

"மாரி", ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்னும் பழமொழியை ஏன் சொன்னார்கள்? பிறந்த அந்தக்கணமே இறப்பும் நம்மோடு பிறந்துவிடுகிறது. வாழ்வதுதான் வியப்பே தவிர சாவது வியப்பன்று.

இருந்தாலும் போருக்குப் போய்ப் பொருளீட்ட வேண்டுமா?

கருப்பு நிறத்திலும் பளபளப்பாயிருக்கும் என் 'மாரி'க்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமல்லவா?

நீங்கள் என்னோடு நல்லபடி இருந்தால் போதும் அத்தான்.

என் கண்மணி! காரி சொல்லி முடிக்கும் முன் 'ஆ! ஐயோ' என்னும் கூக்குரல் மாரியிடமிருந்து அவலக் குரலாக வெளியிட்டது.

ஒரு வேங்கைப்புலி சோளக்காட்டிலிருந்து பாய்ந்தது மாரியின் மேல். ஒரே அறையில் மாரி மாய்ந்து போனாள். அடுத்த பாய்ச்சலில் காரியை அறைந்தது புலி.

கடும்போர் புரியத் திட்டமிட்டிருந்த காரி சுருண்டு விழுந்தான். அவன் கழுத்தைக் கடித்த புலி செங்குருதியை உறிஞ்சிக் குடித்தது.

இருவர் உடலையும் சோளக் காட்டிற்குள் இழுத்துக் சென்றது புலி.

அன்றிரவு இருவரும் குடிசைக்குத் திரும்பாததைக் கண்டவர் தேடலாயினர்.

கோடி வீட்டுக்கு முன் சோளக்கொல்லையில் கடித்துக் குதறி, தசைகள் பிடுங்கப்பட்ட நிலையிலே கிடந்த காரியின் பிணத்தைக் கண்டு ஓடிச் சென்று ஊரில் புலியடித்துக் காரி இறந்த செய்தியைக் கூறினான்.

ஊரார் பத்துப் பேர் கூடி வாள், வேல், குறுவாள், கடப்பாறை இவற்றோடு சோளக்கொல்லை முழுவதும் சுற்றிப்பார்த்த பின் ஒரு குட்டையின் அருகில் மாரியின் சிதைந்த உடல் கிடக்கக் கண்டு மனம் பதறினர். கணவன் - மனைவி இருவரையும் ஒரே புலி தாக்கிச் சென்ற செய்தி ஊர் ஊராகப் பரவியது. சிற்றூர்க் கணக்கன் இச்செய்தியைக் குறித்து ஓலையயழுதிக் கடத்தூர் நாட்டு நாயகம் செய்வான் ஆரோதன் இருகன் பெருமானுக்கு விடுத்தான்.

தலையாரி கொண்டு வந்த செய்தியால் மனம் வருந்தினார் இருகன் பெருமாள். அப்போது அங்கே வந்தான் அவர் மகன் ஆண்பிள்ளைப் பெருமாள்.

என்னப்பா வருத்தமாக இருக்கிறீர்?

இந்த ஓலையைப் பார் - செய்தி தெரியும் என்று சொல்லி ஓலையைக் கொடுத்தார். ஓலையை வாங்கிப்படித்த ஆண்பிள்ளை கண்கள் சிவந்தன.

அப்பா, அந்தப் புலியை நான் கொன்று வருகிறேன். நம் நாட்டுக்குடிமக்கள் ஒரு காட்டுவிலங்கால் இறப்பது நம் ஆட்சிக்கு மானக்கேடு. ஒரு சிற்றுயிர்க்கும் கேடு நேராமல் காப்பதே ஆட்சிக்கு மானம். அவர் பெரியவர் இவர் சிறியவர் என்று எண்ணாது நாடு செய்பவனே ஆள்வோனுக்கு அழகு. நம் ஆளுகையில் ஓரிளம் பெண்ணும் ஆடவனொருவனும் மாளலாமா? இன்றே இப்பழி துடைத்து விடுவேன். வந்த பின்னல்லது சோறும் உண்ணேன். இது திண்ணம். என்று வஞ்சினம் (சூளுரை) சொன்னான்.

தன் வட்டுடையை இறுக்கி இடையில் கட்டினான். இடதுபக்கம் குறுவாள் செருகிக்கொண்டான். தலையில் இளவரசனுக்குரிய துகில் முடிசூடிக் கொண்டான், கையிலே வேலும் இடைக்கச்சையில் வாளும் பூண்டான். வேட்டைப் போர்க்குரிய கோலம் பூண்டு புறப்பட்டான்.

ஆரோதன் இருகன் பெருமாள், "மகனே, உன் துணைக்கு நம் படை மறவர்களை அழைத்துக் கொண்டு போகலாமே?" என்றான்.

ஆண்பிள்ளைப் பெருமாள், "அப்பா என் ஆண்மையை ஐயப்படுகிறீர்களா? ஒரு காட்டுப்புலிக்கா அஞ்சுவேன்? நாள் ஒருவனாகவே சென்று புலியைக் குத்தி வருகிறேன். இதென்ன படையயடுப்பா? போரா? பகைவர் மீது படை எடுக்க? என் வலிமை தாங்கள் அறியாததா?"

"மகனே உன் ஆண்மையை அறிந்துதான் நீ குழந்தையாக இருக்கும்போதே ஆண்பிள்ளைப் பெருமாள் என்று பெயரிட்டேன். உன்னைத் தனியாக அனுப்பினால் உன் அம்மாவுக்கு நான் என்ன அமைதி சொல்ல முடியும்?"

அம்மாவுக்கு நான் வந்து சொல்லுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். சென்று வருகிறேன். புலியைக் கொன்று வருகிறேன் என்ற பிள்ளைப் பெருமாள் திடுமெனப் புறப்பட்டுச் சோளக்கொல்லையை நோக்கிச் சென்றான். செய்வதறியாமல் ஆரோதன் இருகன் பெருமாள் பேசாமல் கற்சிலை போல் நின்றான்.

தோளில் தொற்றிக் கழுத்தைக் கட்டி விளையாடிய சிறு பையனா இந்த ஆண்பிள்ளைப் பெருமாள்? தனி ஒருவனாகப் புலி வேட்டைக்குப் புறப்பட்டவன்? என எண்ணி எண்ணிப் பெருமிதமுற்றான்.

"ஐயோ! அரசே தங்கள் மகன் இறந்துபட்டான். புலி தாக்கி வீழ்ந்து விட்டான்'' என அலறிய படி காவலன் ஒருவன் அரசனிடம் சொன்னான். ஆற்றாது அழுத அரசன் சோளக்கொல்லைக் காடு நோக்கிச் சென்றான். குடிக்கொரு மகனை இனிக் காண முடியுமா? என்று அழுதபடி சென்றான்.

அங்கே - புலியோடு போரிட்டுப் புலியைக் குத்திக் கொன்றான் பிள்ளைப் பெருமாள். ஆனால் சாகுமுன் அவனை அடித்துவிட்டுப் புலி உயிரை விட்டது. மண்டையில் தாக்குண்டு மடிந்த மகனைக் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டழுத ஆரோதன் இருகன் பெருமாள், படைவீரர்களால் தேற்றப்பட்டு ஒருவாறு தேறினான்.

மாய்ந்த மாமறவனை நடுகல் நட்டு நாட்டுமக்கள் தொழுதனர். நாட்டுக்காகத் துஞ்சிய பிள்ளைப் பெருமாள் ஆண்மைக்கோர் எடுத்துக்கட்டானான். நடுகல் முன் அவன் பெற்றோர் கண்ணீர் மலரினைக் காணிக்கை யாக்கினர்.

(பின் குறிப்பு : த.நா.தொ. ஆய்வுத்துறை தொடர் எண் 1973/10 : தகடூர் (தருமபுரி) மாவட்டம் அரூர் வட்டம் கடத்தூர் வீரராமனாதன் கால ஊர்க்கல்வெட்டு)

சீபோசள வீரராமனாத தேவற்கு யாண்டு 313ஆவது ஆடி மாதம் பதினேழாந்தியதி மகத்தி னன்று கடத்தூர் நாட்டு நாயகஞ் செய்வான் ஆரோதன் இருகன் பெருமாள் மகன் ஆண்பிள்ளைப் பெருமாள் புலியைக் கொன்று வீடு.... பெற்றான்... என்பது கல்வெட்டுச் சான்று.