
|
'தோள் கண்டார் தோளே கண்டார்'
(கட்டமைப்பு ஆய்வு) முனைவர். செ. வை. சண்முகம் தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார். (கம்பராயணம், பாலகாண்டம், உலாவியற் படலம் : 19)
முன்னுரை : பாடல் ஒரு சொற்கலை ஆக்கம் என்பதில் மூன்று உண்மைகள் புதைந்துள்ளன. 1. பாடலுக்கு அடிப்படை அலகு சொல் என்பது. 'சொல்' என்பது மொழிக்கும் அடிப்படை அலகே. சொல்லால் தொடரும் தொடரால் வாக்கியமும் வாக்கியங்களால் கருத்தனு. கருத்தன்களால் பாடலும் உருப்பெறுகின்றன. சொல்லுக்கு அடிப்படை ஒலி ஆனாலும் சொற்கள் ஒலியைக் கொண்டிருக்கின்றன என்று கூறப்படுமே தவிர ஒலியால் ஆக்கப்பட்டிருக்கின்றன என்று விளக்கப்படுவது இல்லை. அது ஒரு நுண்ணிய மொழியியல் கோட்பாடு ஏனெனில் ஒரு மொழியில் வழங்கும் ஒலிகளைக் கொண்டு நம் விருப்பத்துக்குச் சொற்களை உண்டாக்க முடியாது. சொற்கள் பல எழுத்துக்களால் ஆக்கப்பட்டு, அந்தச் சொற்கள் என்னென்ன ஒலியால் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று விளக்கப்படும். 2. கலை என்பது பலவகைப்படும். அது இங்குப் பாடற்கலையையே குறிக்கிறது. பாடல் என்றால் 'யாப்பு'ச் சிறப்பிடம் பெறும், யாப்பில் அடிப்படையானது சீர், அடி என்பவையே, 'சீர்' என்பது அசையால் ஆனது, மொழிக்குச் 'சொல்' அடிப்படைபோலப் பாடலுக்கு அடிப்படை சீர். ஆகையால் அசையில் சொல்லை அடிப் படையாகக் கொண்டே சீர் அமைக்கப்படுவதால் சீரின் சிறிய உறுப்பு என்ற முறையில் 'அசை'யும் யாப்பு உறுப்பாகக் கருதப்படுகிறது. இரண்டு சீர் சேரும் போது அமைவது தளை. தளையின் அமைப்புச் சீரின் அசை அமைப்போடு தொடர்பு உடையது. தமிழ்ப்பாவில் வெண்பாவுக்குத் தளை கட்டுப்பாடு இன்றியமையாதது. பாடல் வாசிப்பு நோக்கில் சீரின் உயர் அலகாகப் 'பிணை' என்ற உறுப்பு இப்போது பேசப்பட்டு வருகிறது. ஓர் அடியில் எந்தச் சீருக்குப் பிறகு ஒலி நிறுத்தம் செய்கிறோம் என்ற உண்மையைப் பிணை அமைப்புத் தெளிவுபடுத்தும். அடித்தொடை நோக்கில் தமிழில் ஒருவிகற்பப்பாடல், இருவிகற்பப்பாடல் என்று அழைக் கப்படும். ஒரூஉ, பொழிப்பு என்பவைகளைத் தொடைவிகற்பம் என்று யாப்பருங்கல விருத்தி குறிப்பிடுவதால் ஒருவிகற்பப்பாடல் என்பதை ஒரு தொடைக்கட்டு என்று குறிப்படலாம் என்று கருத்து முன் வைக்கப்படுகிறது. எனவே அடிக்கு உயர் அலகாகத் 'தொடைக்கட்டு' என்பதைக் கொள்ளலாம். 3. ஆக்கம் என்பது கட்டமைப்பு என்று இன்று அழைக்கப்படுகிறது. அது பொருளை ஓரளவு தெளிவுபடுத்துவதாக உள்ளது. மேலும் கட்டமைப்பு என்பது இன்று மொழியியல் கோட்பாடாகவும், இலக்கியக் கோட்பாடாகவும் உருப்பெற்று வளர்ச்சி பெற்றுள்ளதால் கட்டமைப்பு என்ற சொல்லே இன்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கட்டமைப்பு என்பதில் 'வடிவ அழகு' என்ற உண்மையும் புதைந்துள்ளது. ஒரு நிலையில் கட்டமைப்பை உணர்வதே அழகுணர்வு என்ற கருத்து உண்டு. அதற்கு மேலாக வண்ணமே சொல் திருப்புரையும் கட்டமைப்பு ஒழுங்கமைவும் (Pattern) உணர்வது அழகியல் உணர்வை ஏற்படுத்தும். இது புறநிலை அழகுணர்வு என்பது சுட்டிக்காட்டத் தகுந்தது. கவிதை : இது கம்பராமாயணம் பாலகாண்டம் உலாவியற்படலத்தில் உள்ளை ஒரு பாடல். இராமன் மிதிலை நகர் வழியாகச் செல்லும்போது பார்த்த பெண்கள் மனநிலை விளக்கப்பட்டுள்ளது. இராமனுடைய அழகு அங்குள்ள பெண்களைக் கவர்ந்தது என்பதை விளக்குகிறது. தனிநிலையில் இராமன் பெண்களைக் கவரும் அழகு உடையவன் என்று நேரடியாகக் கூறாமல் இராமனைப் பார்த்தவர்கள் அவன் அழகில் மயங்கினார்கள் என்ற முறையில் வருணித்துள்ளது ஒரு கருத்தாடல் உத்தி. ஒரு பொருளின் சிறப்பை நேடியாக வருணிக்காமல் அதைக் கண்டவர்கள் உணர்ச்சி மூலம் விளக்குவது ஒரு கருத்தாடல் உத்தி. அது சாட்சிப்படுத்தும் உத்தியும் ஆகும். இங்குக் 'கண்டார்' என்பது திருப்புரையாக ஏழு தடவை வந்து பல பொருள் ஒரு சொல்லாக அமைந்துள்ளது. வடிவு, உரு என்பவை ஒரு பொருள் பல சொல். 'கண்டார்' என்பது வினைமுற்றாகவும் விளையாலணையும் பெயராகவும் அமைந்துள்ளது. வினைமுற்று வடிவமே தொடர் நிகர்வு (Durative) வினையாகவும் (பார்த்துக் கொண்டிருந்தார்) எதிர்மறை வினையாகவும் (பார்க்கவில்லை) என்று பொருள் வரும்படி அமைந்துள்ளது. முதல் இரண்டு அடிகளில் முதல் சீராக அமைந்துள்ள 'கண்டார்' எழுவாய் என்ற முறையில் வினையாலணையும் பெயராக (கண்டவர்கள் என ) அமைந்து மூன்றாம் சீராக அமைந்துள்ளது; வினைமுற்றாகத் தொடர் நிகழ்வுப்பொருளை உணர்த்துகிறது. மூன்றாவது அடியின் கடைசிச்சீராக அமைந்துள்ளது 'யாரே' என்பதை எழுவாய்த் தொடரில் பெற்றுள்ளதால் (யாரே...கண்டார்) பலரும் / ஒருவரும் காணவில்லை என்ற எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது. கண்டாரும், கண்டாரை என்ற வடிவங்கள் வினையாலணையும் பெயராக அமைந்துள்ளன. 'வடிவு' என்பது மானிட உறுப்பு வருணையிலும் 'உருவு' என்பது முழுத்தோற்றம் என்ற முறையில் கடவுள் வருணையிலும் காணப்படுகிறது. தாள் (அடி / பாதம்) வருணனையில் புறநிலை அழகும் அடி நிலை அழகும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 'கழல்' என்பது ஆண்கள் / வீரர்கள் அணியும் ஒருவகை அணிகலன்; வில்லோன் காலன கழலே' என்பது குறுந்தொகை அடி (7). 'தொடு' என்ற சொல் அணி, தொடுதல் என்ற இரண்டு பொருள் உடையது. அழகான கழல், காலைத் தொடும்படி அணியப்பட்டிருக்கிறது என்று இரண்டு வகையிலும் விளக்கலாம். 'கமலம்' என்பதே இந்தப் பாடலில் உள்ள ஒரே பிறமொழிச்சொல், வடசொல், கமலம் என்பது தாமரை என்ற பொருளை உடையது. இது அடியின் மென்மையை விளக்குவது. 'தாமரை புரையும் காமர் சேவடி' என்பது குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து முதல் அடி, எனவே வீரம், மென்மை என்று இரண்டு மாறுபட்ட பண்புகள் உடையவன் இராமன் என்று பண்பாகுபெயராய் / சுட்டியாய் உணர்த்துவதாகவும் கொள்ளலாம். தொடர்க்கட்டு : இங்கு நான்கு வாக்கியங்கள் உள்ளன. எழுவாய் (எழு) + செயப்படுபொருள் (செ.பொ) + வினைமுற்று (வி.மு) என்பது. முதல் இரண்டு வாக்கியத்தின் (முதல் அடியும் இரண்டாவது அடியின் முதல்வினையும்) அமைப்பு. மூன்றாவது வாக்கியம், பெயர் + பெயர் என்ற பெயர்ப் பயனிலை வாக்கியம், ஆனால் அதன் பொருள் அமைப்பும், அதனால் புதை நிலை அமைப்பும் சிக்கலானதாக அமைந்துள்ளது. தடக்கை கண்டவர்களும் அஃதே என்றால் தடக்கை கண்டவர்களும் அந்தக் காரியத்தை / தொழிலை செய் தார்கள் என்று பொருள். அதாவது தடக்கை கண்டவர்களும் கையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று பொருள். அந்தப் புதைநிலை அமைப்பே, தடக்கை கண்டவர்களும் அதே தொழிலைச் செய்தார்கள் என்ற வினைமுற்று வாக்கியமாக அமைந்து, தடக்கை கண்டார் செய்தது அதே தொழிலே என்று மாறி, தடக்கை கண்டாரும் அஃதே என்று பெயர் + பெயர் வாக்கியமாக அமைந்து விட்டது. கடைசி இரண்டு அடியும் ஒரு வாக்கியம். எழு + செ. பொ + வி.மு என்ற அமைப்பை உடையது. ஆனாலும் மூன்றாவது அடி எழுவாயே ஒரு தனி வாக்கியமாகவும் எழு + செ. பொ + விமு என்று கருதும்படி அமைந்துள்ளது. அப்படியானால் 'அவர்கள்' என்பது அடுத்த அடியில் புதைநிலையில் இருந்து மறைந்துள்ளதாகக் கருதினால், இரண்டு தனிவாக்கியமாகவும் அமையும். முதல் வாக்கியத்தில் 'கண்டார்யாரே' என்பது தான் எழுவாய். இங்கு வி.மு உடன்பாட்டில் இருந்தாலும் பொருள் நிலையில் எதிர்மறையே. (தொடரும்) |