
|
மனம் திறந்த மடல்கள்
புலவர் ஞானசேகரன், திருலோக்கி.
தமிழைச் சிதைப்பதற்கும் தப்பாக எழுதுவதற்கும் தனக்குக்கட்டுப்பாடற்ற உரிமை வேண்டுகின்ற மாந்த இனப் பகைவர்களைத் தமிழர்க்கு எதிராக இயங்குகின்ற பன்றிகள், கழுதைகள், பேய்கள் என்றும் எங்கிருந்தோ இங்கு ஒண்டவந்த, உறிஞ்சவந்த, நக்கவந்த நாய்கள் என்றும் சாடி இவர்கள் வெறுங் கயவர்கள், கழிசடைகள் நூற்றுக்குநூறு தமிழ்ப்பகைவர்கள் என மனம்புழுங்கி ஆசிரியர் கடுஞ்சொற்களைப் பெய்து எழுதியிருந்தது அவர் வேதனையைக் கொட்டித்தீர்த்ததாய்த் தெரிந்தது. ச. கலியாணராமனின் தமிழன்தானே! கருத்துக்கதை கதையாக இல்லாமல் ஈழத்தமிழருக்கு இரண்டகம் செய்யும் இந்திய அரசை வறுத்தெடுக்கும் வார்த்தைப் புனைவுகளாய்த் தெரிந்தது. 'அடப்பாவி' எனும் தலைப்பில் செம்பியனார் அவர்கள் தெய்வமாகிவிட்ட தில்லையாடி வள்ளியம்மையைச் சீண்டிய பாவலரை 'எடு செருப்பை', 'மடப்பயல்', 'விளக்குமாறு', 'நாய்' எனும் கடுஞ்சொற்களை மொழிந்து, முக்கியத்துவம் கொடுத்து வேதனையை வெளிக்காட்டியிருந்தது சற்று மிகையாகவே நெஞ்சத்தைச் சுட்டது. ஆறு. தமிழ்நிதிவேந்தன்
மொழி அறிஞர், உணர்வாளர் சொற்கள் மன்றம் ஏறுவதில்லை. அவர்களை நாம் நமக்காகத் தேர்ந்தெடுக்கும் அரசும் கண்டு கொள்வதில்லை! இந்நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது! மொழி உணர்வாளர் அறிஞரனைவரும் ஒருங்குகூடி சுற்றறிக்கை விடுத்துப் பொது மக்களிடையே பரப்புரை செய்து தேர்தலைக் கட்டாயம் புறக்கணித்தல் வேண்டும். நம்மை, நம் உயிரினும் மேலான தாய் மொழியாகிய தமிழை மதிக்காத ஒரு பேயரசு வாழவே கூடாது. சிலம்பூர்க்கிழான், கள்ளக்குறிச்சி
தும்பைவிட்டு வாலைத் துரத்திப் பிடிக்கின்ற அர. செல்வமணி, சத்தியமங்கலம்.
பாவலர் பரிசுதிட்டம் 41இல் பரிசுபெற்ற செல்வி தமிழொளி அவர்கள் சிறுவயதிலேயே தமிழார்வம் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரைப் பாராட்டும் முகத்தான் நாங்கள் அவருக்கு உரூ. 200/- அனுப்புகிறோம். புலவர் ச. மு. விமலானந்தன், திருப்பத்தூர்.
பாலவர் இரா. செம்பியனார் தம் துணைவியாருக்குத்தம் இல்ல வளாகத்திலேயே நினைவு மண்டபம் அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. (இவ்வாறே மறைந்த அரியபுத்திரனாரும் தம் துணைவியாருக்கு மண்டபம் அமைத்துள்ளார்) பாவலரின் கையறு நிலைப்பாடல் உள்ளத்தை உருக்குவதாய் உள்ளது. 'கள்ளோ காவியமோ?' என்ற தலைப்பிலுள்ள இசைப்பாடல் சிறப்பாயுள்ளது. பாவலர் இரா. செம்பியனாருக்குப் பாராட்டுகள். பொறிஞர் அகன், புதுக்கோட்டை.
ஆட்சியரின் கூறுகெட்ட செயலைக் குத்தீட்டியாகக் கிழிக்கின்றது அட்டைப் பாடல். அரசியல் அறிவும் மக்கள் நேயமும் கடுகளவுமற்ற கயவர்கள் அரசியலைப் பொருள் சுருட்டும் கருவியாக்கிக் கொண்டனர்! பொருள் குவித்தலே வாழ்வின் நோக்கமெனத் தறிகெட்டுத் தவிக்கும் மாணாக்கரும் தாய்மொழி அறிவே அற்றுக் கெட்டுவருகின்றனர் என்னும் ஆசிரியஉரை மிகச்சரியான கணிப்பாம். தமிழ்ப்பகைவர் மட்டுமல்லர்; மாந்த இனப் பகைவரும் ஆவர். இவர்கள் முகத்தில் காறிஉமிழ்வோம்' - என்று தங்கப்பா ஐயா அறச்சின முறுவது சரியே! பாவலர் மா. வரதராசன், சென்னை.
'மாந்த இனத்தின் பகைவர்கள்' - இலெ. தங்கப்பாவின் கட்டுரையில் அனல் பறந்தது. பகைவர்கள் உயர்திணையாயினும், அஃறிணைச் சொல்லாட்சிகளால் சாடியது நேர்த்தி. கருத்துமேடையும், வினாதலும் விடுத்தலும் பகுதியும் மிக்க பயனுள்ளனவாயிருந்தன. பாவலர் பரிசுதிட்டம் - 43இல் சி. பெருந்தேவன் அவர்களின் வெண்பாவில் தனிச்சீர் "மந்திரம்போல் எனவந்துள்ளது. ஙகர எதுகைக்கு நகரம் எதுகையாகுமா? தெரியவில்லை, தவிர 'மந்திரி' போல் மந்திரம் வடசொல் தானே? (ஙகர மெய்க்கு நகரமெய் எதுகையாகும். இதை மெல்லின எதுகை என்பர். எனினும் சிறப்பில்லை. மந்திரி வடசொல்தான் - ஆசிரியர்) புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர்.
மாணாக்கரை ஆண்டுக்கொருமுறைதான் அவர்தம் தேர்வு அச்சுறுத்தும். ஆனால் தெளிதமிழில், பாலவர் பரிசு திட்டத்தில் பங்குபெறும் பாவலரை அது ஒவ்வொரு திங்களும் அச்சுறுத்துகிறது. பரிசில்லையயன்றாலும் பாடல் இடம் பெற்றாலே உள்ளத்தில் இன்பம் தோன்றுகிறது. பாடல் இடம்பெறவில்லையயனில் அதற்குரிய கரணியத்தைப் பாவலர்க்குக் கருத்தூன்றுக என்னும் பகுதி மிகவும் தெளிவாக விளக்குகிறது. பாவலர் பரிசு திட்டத்தில் பாடல் இடம் பெற்றிருந்தாலே போதும் புணரியல் இலக்கணத்திலும், யாப்பிலக்கணத்திலும், தனித்தமிழிலும் பயிற்சியுண்டு என்னும் நற்சான்றிதழை அடைந்ததைப் போன்ற பெருமகிழ்ச்சி உண்டாகிறது. வளர்க, வாழ்க நும் தமிழ்த்தொண்டு. பி. இராமநாதன், வழக்கறிஞர், சென்னை-16..
தெளிதமிழ் 15-06-2007 பக் 28இல், 'தமிழ் செம்மொழியானதால் தமிழின் தொன்மைக்காலம் 1500 ஆண்டுகள் என்று குறைக்கப்பட்டுவிட்டது. இது நம் தமிழுக்கு ஏற்படுத்திய இழுக்கு' என்று உள்ளது. '1500 ஆண்டுக்குக் குறையாத தொன்மையுடைய' என்றுதான் அனைத்து அரசு அறிவிக்கைகள் முதலியவற்றிலும் உள்ளது. (தெலுங்கு, கன்னடம் போன்றவற்றைப் பின்னர்ச் செம்மொழிகளாகச் சேர்த்திட விரகாக இப்படி எழுதப்பட்டது என்க! எனினும் இவ்வாசகம் தமிழின் தொன்மையைக் குறைத்து விட்டதாகக் கருதுவது சரியன்று.) தமிழ் இலக்கிய இதழ்களில் தரமான நாலைந்து இதழ்களில் ஒன்றான தெளிதமிழ் இப்படிப்பட்ட அடிப்படையற்ற கருத்துகளை வெளியிடுவது நல்லதன்று. |