கருத்து மேடை
மா. சின்னு, வேலூர், நாமக்கல்.

1. சென்ற இதழில் புதுமனை புகுவிழா என இயல்பாக வருவதே சரியென்று நன். 257 நூற்பா விளக்கவுரை மேற்கோளைக் காட்டியுள்ளீர்கள். அது புறனடை நூற்பா. 'வரைபாய் வருடை' என்று காட்டிய மேற்கோள், இவ்வாறும் சிறுபான்மை வருகிறது என்பதற்காகக் காட்டியதாகும். மனைக்கோழி, தினைக்கவர- பொருந : 222, மனைப்பூங்கா - பெருங். மகத:7. 13, பெருமனைக்கிழத்தி -சிலப் புறஞ்:57, உடைப்பெருஞ்செல்வர் மனைப்புகும் அளவும் - சிலப் அடைக்கலக் : 129, காண்க. எனவே புதுமனைப் புகுவிழா என்று எழுதுவதே சரி.

2. மேலும் எங்கள் + தமிழ் = எங்கடமிழ் என்றே புணரும் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். தாம் வீழ்வார் மென்றோட்டுயிலின் - குறள் : 1103, புலவியுட்டோன்றும் குறள் : 1324, முட்டாட்டாமரை - திருமுரு: 73 எனப் புணர்ந்தது காண்க. ஒப்பிலாமணிப் புலவர் பாடலில் வரும் எங்கடனம் கண்டேன். எங்கள் +தனம். தனம் என்ற வடசொல்லைப் புணர்த்து எழுதியது நம் தமிழுக்குப் பொருந்தாது. எனவே எங்கள் தமிழ் என்பதனைப் புணர்த்து எழுத வேண்டின், எங்கட்டமிழ் என்றே எழுதுதல் வேண்டும்.

1. வேற்றுமைப் புணர்ச்சிகளில் வலிமிகும் என்ற விதிக்கு மாறாக, இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் வலி இயல்பாவதும் 'உண்டு' என்கிறது- 'இயல்பின் விகாரமும்' (நன். 255) என்ற வேற்றுமைக்குப் புணர்ச்சிக்குப் புறனடையாக வரும் நூற்பா. 'இவ்வியல்பு வருமொழி வினையாய விடத்து' என்கிறார் இதன் உரையில் நாவலர். அதன்படி, கனிக்கூடை (= கனியை உடையகூடை) -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. இதில் வருமொழி (கூடை) பெயர். இங்கே வலிமிகுந்தது. கனிதின்றான் (கனியைத் தின்றான்) - இரண்டாம் வேற்றுமைத் தொகை. இதில் வருமொழி (தின்றான்) வினை. இங்கே வலிமிகவில்லை.

இதே தன்மையை ஏழாம் வேற்றுமைப் புணர்ச்சியிலும் காணலாம். இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொன்னதுபோல் ஏழாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கும் நன்னூலார் புறனடை சொல்லாமையால் ஆறுமுக நாவலர் 'இதற்கிது' (நான். 257) என்றும் அதிகாரப் புறனடை நூற்பாவில் இதனைக் கூறினார். ஏழாம் வேற்றுமைப் புணர்ச்சியில் மலைக்குறவன் (மலைக்கண் வாழும் குறவன்) என வருமொழி பெயராயின் வலிமிகும் என்றும், வரைபாய்ந்தான் (=வரைக்கண் பாய்ந்தான்) என் வருமொழி வினையாயின் இயல்பாக வரும் என்றும் கொள்க என்கிறார். நீங்கள் எடுத்துக்காட்டிய 'மனைக் கோழி' 'மனைப்பூங்கா' 'மனைக் கிழத்தி' என்பவற்றில் வருமொழிகள் பெயர்களாக உள்ளன. எனவே தான் 'புதுமனை புகுவிழா' என்று இயல்பாக எழுதுவதே சரி என்றேன். 'மனைப்புகும் அளவும்' என்பதில் பகரம் தொடை நோக்கி விரிந்தது. இவ்விதழ் 'வினாதலும் விடுத்தலும்' பகுதியில் திரு செ. ஞானசம்பந்தன் வினாவுக்களிக்கப்பட்ட விடையில் இதுபற்றிய என் கருத்தைக் கூறியிருக்கிறேன்.

2. யாங்கள் என்ற உயர்திணைப் பெயர் வேற்றுமை யேற்றால் 'எங்கள்' ஆகும். எனவே 'எங்கள் தமிழ்' என்பதில் உள்ள நிலை மொழி உயர் திணைப்பெயர். ள்+த என்ற மயங்கா எழுத்துகள் அடுத்துவரும் இவ் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழித் தகரம் ' ட' எனத் திரிந்தது; நிலைமொழி ள கரம் கெட்டது. அதனால் இது 'எங்கடமிழ்' ஆயிற்று. இவ்விதியை (வேள்+தோள்=) 'வேடோள்' நிலைமொழி உயர்திணைப் பெயராயின் வேற்றுமையிலும் தகரம் திரியுமிடத்துக் கெடுதலும்' என்று (நன். 229 உரையில்) நாவலர் கூறுகிறார். எனவே 'எங்கட்டமிழ்' என ளகர தகரங்கள் திரிந்து நில்லாமல், ளகரம் கெட்டு 'எங்கடமிழ்' என்றானது. இங்கனமன்றித் தாங்கள் காட்டும் 'தோட்டுயிலின்' 'புலவியுட் டோன்றும்; 'முட்டாட்டாமரை' ஆகியவற்றில் நிலைமொழிகள் உயர்திணைப் பெயர்களல்ல. எனவே 'எங்கடமிழ்' என்று புணர்த்தெழுதுவதே முறை. மேலும் எங்கள் +துகில் என்ற சொற்கள் 'எங்கடுகில்' (கலிங்கத்துப்பரணி, கடைதிறப்பு-25) என்று வருவதும் காண்க. இவற்றில் வடசொல் ஏதும் இன்மை நோக்கத்தக்கது.

புலவர் வி. திருவேங்கடம், செல்லான்நகர்.

தெளிதமிழ் 16-07-2008இல் 19ஆம் பக்கத்தின் அடியில் துணையாசிரியர் அரங்க. பணிக்குன்றன் 'நாள்தோறும் சரி' என்று தந்துள்ளார். 'நாடோறும்' என்பதே சரி என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இலக்கணப் பிழைகளை நுட்பமாக நோக்கியுணர்த்த முயன்றமைக்கு நன்றி. இலக்கணப் புலவராகிய தங்கள் மடல்களில், 'தாங்கள் தந்துள்ள', 'பிறிதாதல் திரிபை', 'குன்றல் திரிபை', 'பதில் தந்துள்ளீர்கள்', 'முன்னோர்கள் தந்த' என்று தாங்கள் எழுதியுள்ளமைக்கு என்ன இலக்கணமோ அதையே 'நாள்தோறும்' என்பதற்கும் இலக்கணமாகக் கொள்க.
- இரா.திருமுருகன்.