கண்ணிற் பட்டதும் கருத்திற் பட்டதும்

தமிழ்நாடு காங்கிரசின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினருமான தமிழருவி மணியன் (இ) ராணிகிழமை இதழுக்கு (13-7-2008 - பக்கம் 8,9) அளித்த நேர்காணலில் சிலபகுதிகள்!

1. விடுதலைப் புலிகளை எதிர்க்கும் தமிழ்நாட்டுக் காங்கிரசார் அப்பாவித் தமிழர்கள் வதைக்கப்படுவதையும், சிதைக்கப்படுவதையும் பற்றிக் கவலைப்படாமல் "வாய்மூடி மவுனி"களாக இருக்கிறார்களே?...." என்ற வினாவிற்கு அளித்த விடையில்......

"பதவி நாற்காலியை எப்படிப் பிடிப்பது என்ற சிந்தனையைத் தவிர வேறெந்தச் சமூக அக்கறையும் இல்லாதவர்களிடம் இன, மொழி உணர்வை எதிர்பார்க்க இயலுமா? விடுதலைப் புலிகளை விமர்சிப்பது என்பது வேறு, ஈழத்தமிழரின் இன்னலைத் தீர்ப்பது வேறு என்ற புரிதல் காங்கிரசில் யாருக்கும் இல்லை, இந்த இனச்சிக்கலுக்குத் தீர்வுகாண முதல்வர் கலைஞர் தலைமையில் தமிழர் அனைவரும் ஒன்றுபடக் காங்கிரசு முன்முயற்சி எடுக்க வேண்டும். 'யார் செத்தால் நமக்கென்ன?' என்றிருந்தால் காங்கிரசு அழிந்தால் நமக்கென்ன என்று தமிழகம் ஒருநாள் கைவிரித்துவிடும்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 1965 இல் நடந்த மொழிப் போருக்குப்பின் 1967 இல் நடந்த பொதுத்தேர்தலில் விழுந்த பேராயக்கட்சி இன்னும் எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ளது. தமிழருவி மணியன் கூறியதுபோல இலங்கையில் யார் இறந்தால் நமக்கென்ன? என்றிருந்தால் காங்கிரசை மட்டுமல்ல, காங்கிரசுடன் துணை நிற்பவர்களையும் தமிழர்கள் ஒருநாள் (வரும் தேர்தலில்) கைவிரித்து விடுவர் என்பது உறுதி.

2. "ஆயுள் தண்டனை முடிந்தும் நளினி சிறைவாசம் அனுபவிப்பது நியாயமா?" என்ற வினாவிக்கு அளித்த விடை "எந்த வகையிலும் நியாயாமில்லை! ஆயுள் முழுவதும் அனுபவிக்கும் தண்டனை என்று ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தாலும், 14 ஆண்டுகளுக்குமேல் ஒருவரைச் சிறைக் கம்பிகளுக்குள் அடைத்து வைப்பது மனித நேயத்திற்கு மாறானது. தவறு செய்தவரைத் திருத்துவது தான் சட்டத்தின் நோக்கம். முற்றாகச் சீரழிப்பதன்று. 17 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நளினியை அண்ணா நூற்றாண்டு விழாத் தருணத்திலாவது தமிழக அரசு விடுதலை செய்தால் நல்லது"

புறங்கூறி அரசியல் நடத்திவரும் இந்நாளில் அறங்கூறி அரசியல் நடத்திவரும் பேராயக்கட்சியின் தமிழ்நாட்டுப் பொதுச்செயலர் திரு தமிழருவி மணியன் கருத்தை ஏற்க விருப்பம் இல்லாமல் போனாலும், மாந்தநேய நோக்கில் அண்ணா நூற்றாண்டு விழாவையயாட்டி 14 ஆண்டுகளுக்குமேல் 17 ஆண்டுகளாய்ச் சிறையிருந்து வரும் நளினியை விடுதலை செய்வதற்குத் தமிழினத் தலைவர் கலைஞரின் தமிழக அரசு முன்வருமா என்று எதிர்பார்ப்போம்.

3. "ஒகேனக்கல், காவிரி, முல்லைப் பெரியாறு, சிக்கல்களில் காங்கிரசு உள்ளிட்ட அண்டை மாநில அரசியல்வாதிகள் குழப்பத்தை உண்டாக்குவது நியாயமற்றது தானே?" எனும் வினாவுக்கு அளித்திருக்கும் சாட்டையடி விடை வருமாறு:

"தேசநலன் சார்ந்த தேசிய அரசியல் நடத்த இன்று எந்தக் கட்சியும் தயாராக இல்லை. கடலில் வீணாய்க் கலக்கும் நதி நீரை நமக்குத் தருவதற்குக் கேரளம் தயாராக இல்லை. வெள்ளம் பெருக்கெடுத்தால் தமிழகத்தை வடிகாலாகப் பயன்படுத்த மட்டுமே கர்நாடகம் முன்வருகிறது. பாலாற்றில் பாயும் சொற்ப நீரையும் தடுப்பணை மூலம் தடுத்து நிறுத்த ஆந்திரம் துடிக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகம் இன்னொரு இராசத்தானாகத்தான் மாறும். இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பதில் காங்கிரசுக்குக் கூடுதல் பொறுப் பிருக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக மாநிலத்துக்கு மாநிலம் காங்கிரசு மாறுவேடம் போடுவதை மகாத்மாவும் நேருவும் மன்னிக்க மாட்டார்கள்."

தமிழ் மண்ணின் செழிப்பைப் பாரதியார் "காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருநைநதி - என, மேவிய யாறு பலவோடத் - திருமேனி செழித்த தமிழ்நாடு" என்று பாடிச்சிறப்பித்த நம் தமிழ்மண்ணில் இன்றைக்கு நம்மைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்கள் நமக்குரிய நீரைத் தர மறுத்து ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதை நடுவணரசு வேடிக்கை பார்ப்பதும், கூட்டணிக்காகவே. தமிழர் நலனில் அக்கறை உள்ளதுபோல் தமிழ்நாட்டரசு காட்டிக்கொள்வதும், தமிழினத்தை ஒப்போலை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவதாகவே என்று கருதத் தோன்றுகிறது.

இந்நிலையில் நம் உரிமைகள் மறுக்கப்படும்போது ஒருமைப்பாடு சீர்குலைந்து பிரிவினை எண்ணம் இயல்பாகவே மேலோங்கும், ஒருமைப்பாட்டைப் பற்றிப் பேசி ஓலமிடுவோர் இவற்றை உணரவேண்டும். "செய்தக்க செய்யாமை யானும் கெடும்" எனும் வள்ளுவர் சொல்லும் பொய்க்குமோ?

4. "ஆந்திர முதலமைச்சர் இராசசேகர ரெட்டி 22-6-08 அன்று நடுவணரசின் பண்பாட்டுத்துறை அமைச்சர் அம்பிகா சோனியைச் சந்தித்தபோது, கன்னடமும், தெலுங்கும் செம்மொழிகள் என்னும் ஆய்வறிக்கை உயர்மட்டக் குழுவிடமிருந்து பெறப்பட்டு அவ்விரு மொழிகளுக்கும் செம்மொழித் தகுதி விரைவில் வழங்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்தார்"- தகவல் : ந. தமிழ்மறவன், பெங்களூர்-8. "எழுகதிர்" கடகம் (2008-சூலை) பக்கம் 32)

அறிஞர்க்கும், அறியார்க்கும் ஒத்த விருதுகள் வழங்கி மேலோரைக் கீழ்மைப்படுத்துவது போலுள்ளது மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி வழங்குவது. அரிமாவுக்கு நரிமாவா நிகராகும்!? குயிலுக்குக் காக்கைகளும் கூகைகளுமா ஒப்பாகும்!? - செ. இராமலிங்கன்.