வினாதலும் விடுத்தலும்

1. உரைநடைக்கு வித்திட்டவர் வீரமா முனிவர் (பெஸ்கிபாதிரியார்) என்கிறோம். (காலம் 1730) அதற்கு முன்பு 'பா' நடையிலா எழுதிவந்தனர்?
- த. கருணைச்சாமி, தேனீ.

அதற்கு முன்பு உரைநடையில் இலக்கியம் எதுவும் எழுதப்படவில்லை. பாவடிவில் அமைந்த நூல்கட்கு உரையாசிரியர்கன் தந்த விளக்கங்களே உரை நடையில் அமைந்திருந்தன. வீரமா முனிவர்க்குப் பின்பாகவே கதை கட்டுரை போன்றவற்றை எழுத உரை நடை பயன்படுத்தப்பட்டது - ம.இலெ.தங்கப்பா.

2. Offset என்பதற்கு மறுதோன்றி என்று மொழி பெயர்த் தெழுதுகிறார்கள். மறுதோன்றி என்றால் என்னவென்று புரியவில்லை. அதைப் போலவே, எலிகாப்டர் என்பதற்குத் திருகிறக்கையூர்தி யெனப் பாவாணரும், உலங்கூர்தி (ஒலிப்புச் சரியாகப் புரியவில்லை) என மக்கள் தொலைக்காட்சியும், துனைச்சிறகி என அருளியும் கூறுகின்றனர். மூன்றுக்கும் காரணத்தைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- சிலம்பூர்க்கிழான்.

ஒரு பரப்பில் உள்ள மைப்பதிவை ஒற்றுதலின் வாயிலாக மற்றொரு பரப்புக்கு மாற்றும் முறையினையே இன்று மறுதோன்றி என அழைக்கின்றனர். மறு என்பது பதிவு. தாளில் தோன்றும் பதிவு. திருகிறக்கை ஊர்தி - திருகி வரும் (சுழலும்) இறக்கை உடைய ஊர்தி : உலங்கூர்தி அல்லது ஒலுங்குஊர்தி - கொசுவினைப் போன்ற (உலங்கு அல்லது ஒலுங்கு பெருங்கொசுவைக் குறிக்கும்) வடிவமுடைய ஊர்தி. துனைச் சிறகி - விரைந்து சுழலும் சிறகினை உடையது. தமிழ் சொல் வளமும் நெகழ்வுத் தன்மையும் கொண்ட மொழியாதலால் இவ்வாறு ஒரு பொருளுக்குப் பல பெயர்கள் அமைகின்றன. தகுதிவாய்ந்த வல்லுநர்குழு அமைக்கப்பட்டுப் பொருட்பெயர்கன் வரையறுக்கப் படாதவரை தமிழில் இதனைத் தவிர்த்தல் இயலாது.
- ம.இலெ.தங்கப்பா.

3. அ) ஆறாவது இலக்கணம் 'புலவர் இலக்கணம்' என்று 8.4.08 மக்கள் தொலைக்காட்சி மூலம் அறிந்தேன். இப்படி ஓர் இலக்கணம் உண்டா? அதை வகுத்தவர் யார்?

ஆ) அட்டதிக்குப் பாலகரை எண்திசைப் பாலகர், (அ) எண்திசை இளையர் என்று தமிழ்ப் படுத்தலாமா?

இ) சமயம், மதம், இரண்டும் ஒன்றா? வெவ்வேறானவையா?

ஈ) உலக்கைக் கொழுந்துகள், குந்தாணி வேர்கள்-இவை அறிவற்றவர்களைத் தானே குறிக்கின்றன?

உ) அறு சமயங்களில் புத்தம், சமணம் தெரிகிறது, உலகயாதம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பட்ட சாரியம், இவை எவற்றைப் பற்றியலை?

ஊ) வேறு வகை அறு சமயங்களில் சைவம், வைணவம் தெரிகிறது. சாக்தம், சௌரம் காணாபத்தியம், கௌமாரம் இவை எவற்றை (எத்தெய்வங்களை) வழிபடுவன?
- ம. பாலன், கலிதீர்த்தாள்குப்பம்.

அ) ஆறாவது இலக்கணம் என்பது புலமை இலக்கணம். அதை வகுத்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார், இவர் தாம் வண்ணப் பாடல்களுக்கு "வண்ணத்தியல்' என்ற பெயரில் இலக்கணம் படைத்தவர்.- இரா. தி.

ஆ) பாலகர் என்பது இங்குக் காக்குநர் என்ற பொருளில் வந்துள்ளது. எனவே, எண்திசை காக்குநர் என்று தமிழ்ப்படுத்தலாம். (பாலித்தல் - காத்தல்)

இ) இன்று இருசொல்லும் ஒரே பொருளில் வழங்குகின்றன. சில அகராதிகளும் இவை இரண்டும் ஒன்றெனக் குறிக்கின்றன. ஆயினும் மதம், கொள்கை, கோட்பாடு என்ற பொருளிலும் வழங்கும். ஒரே சமயத்தினுள் வேறுபட்ட கோட்பாடுகள் மதங்கள் எனப்படும். மேலும் சமயம் உணர்வு சாராதது. மதம் உணர்வு சார்ந்தது. அதனைச் சமயவெறி எனலாம். அதனால் தான் வள்ளலார் மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார்.- ம.இலெ. தங்கப்பா.

ஈ) ஆம்

உ) உலகாயதம் - கடவுள், வினைப்பயன், ஆன்மா என்பவை இல்லை என்னும் கொள்கை, மீமாம்சை துறக்கம் நரகங்கள், ஆன்மா, மறுபிறவி ஆகியன உண்டு என்னும் கொள்கை, பாஞ்சராத்திரம் - வைணவ ஆகமத்தில் ஒன்று, வைணவ ஆலய அமைப்புக்குரிய விதி, இதனைப்பின்பற்றுவது. பட்டசாரியம் என்ற சொல்வடிவத்துக்கு விளக்கம் கிடைக்கவில்லை.

ஊ) சாக்தம் கொற்றவையை வணங்குவது. சௌரம் - கதிரவனை வணங்குவது. காணபத்தியம் : பிள்ளையாரை வணங்குவது. கௌமாரம் - முருகனை வணங்குவது.- இரா. தி

4. மாணாக்கர் பக்கம் 133க்கான விடை 5இல் 'கண்ணில் தெரியவரும்' என்பதைக் 'கண்ணிற்றெரிய வரும்' எனப் புணர்த்து எழுதி விட்டு 'அண்ணல் திருமுகம்' என்பதை 'அண்ணறிருமுகம்' என எழுதியிருப்பதற்கு விளக்கம் தருக.
- புலவர். ந. ஞானசேகரன், திருலோக்கி.

கண்ணில்+தெரியவரும் என்பதில், ல முன்வரும் த-ற ஆகத் திரியும் (னல முன்றனவும்-நன். 237) என்ற விதிப்படி ல் முன் தெ-றெ எனத் திரிந்து நின்றது-வேற்றுமையில் வல்லெழுத்துவரின் ல்-ற் ஆகத்திரியும் ("லள வேற்றுமையிற் றடவும்'-நன்.227) என்ற விதிப்படி தெ என்ற வல்லெழுத்து வந்ததால் ல் என்றமெய் ற் எனத் திரிந்து நின்றது.

இதுபோல் கன்னல்+சுவை, அண்ணல்+சொல் என்பன இரண்டும் வேற்றுமைப் புணர்ச்சியே ஆயினும், முன்னது கன்னற்சுவை என லகரம் திரிந்து நிற்கும். பின்னது அண்ணல் சொல் என்று இயல்பாகவே நிற்கும். காரணம் கன்னல் அஃறிணைப் பெயர். அண்ணல் உயர்திணைப் பெயர். உயர்திணைப் பெயர்ப் புணர்ச்சிகள் இயல்பாகவே இருக்கும் ('பொதுப்பெயர் உயர்திணை'-நன். 159) என்ற விதிப்படி, அதன்படி அண்ணல்+திருமுகம் என்பதும் இயல்பாகவே இருக்க வேண்டும் என்றாலும், ல்த என்ற எழுத்துகள் பகையயழுத்துகளாதலான் அடுத்தடுத்து இயல்பாக நிற்க முடியாமல் றி என்று திரிந்தன.- இரா. தி.

5. அ) சரி, பாதை, வாடகை, ஒத்தி(வை), விரோதி, பலம், தகவல், அனுமதி, சந்தர்ப்பம், சமூகம், ஆகியவை தமிழ்ச்சொற்களா?

ஆ) முந்நூறு எப்படி முன்னூறாகும்? கிருட்ணை தமிழ்வடிவம், கிருட்ணா வடவடிவமா? தமிழ் புத்தாண்டா? தமிழ்ப்புத்தாண்டா? பொறியலா? பொரியலா? வேண்டாமா? வேண்டாவா?
- நா. தண்டபாணி, அம்பல்.

அ) இச்சொற்களில் ஒத்தி என்பது தமிழ்ச்சொல், தள்ளிப் போடுதல் என்றும் பொருளது. ஒற்றி என்பது ஒத்தி என மருவியது. சரி என்பது பழந்தமிழ் வழக்கில் இல்லை. சரி சமானம், சரியாசனம், சரிவயது என்ற வழக்குகளில் உள்ள சரி, sara என்ற சமற்கிருதச் சொல்லிலிருந்து வந்தது என்பர். சரிக்கட்டுதல், சரிபார்த்தல், சரிப்படுத்தல், சரிவர, சரியாயிருக்கிறது முதலிய வழக்குகள் தமிழாக உள்ளன, சகர முதன்மொழிகளே ஐயத்துக்குரியன. அவற்றுட்பெரும்பாலான பிறமொழிச் சொல்லாயிருக்கலாம் அல்லது பிற்காலத்துப் புதிய வழக்காயிருக்கலாம். பாதை, வாடகை, விரோதி, பலம், தகவல், அனுமதி, சந்தர்ப்பம், சமூகம் ஆகியவை தமிழ்ச் சொற்களல்ல.

ஆ) மூன்று+நூறு=முந்நூறு என்றாகும். முன்+நூறு=முன்னூறாகும். கிருட்ணை, கிருட்ணா-இரண்டுமே தமிழ் வடிவங்களல்ல. சீதா-சீதை என்று ஆவீறு ஐயீறு ஆவது தமிழ் வடிவம் பெறும் வடசொற்களின் இயல்பே. எனினும் ட்ண என்ற எழுத்து மயக்கம் தமிழில் இல்லை. கிருஷ்ண என்பது சமற்கிருதச் சொல். கிருட்டினன் என்பது வடசொல். கருப்பன் என்பது அப்பொருள் தரும் தமிழ்ச்சொல். மாயோன் என்றும் சொல்லலாம். தமிழ்ப்புத்தாண்டு எனபதே சரி. வறுவல், பொரியல் என்பன சமைத்த உணவு வகைகள். பொறியல் என்னும் மரபு இல்லை. பொறித்தல் என்பது மரபு. அது எழுத்தைப் பொறித்தல் என்ற பொருளில் வரும். வேண்டாமா? வேண்டாவா? என்பதற்கு விளக்கம் 16.12.07 தெளிதமிழ் 27 ஆம் பக். பார்க்க.- இரா.தி.

6. அ) பி.லிட். (B.Lit.) என்ற பட்டத்திற்கான தமிழாக்கம் என்ன?

ஆ) 'நானிலம்' என்ற சொல்லிற் குறிக்கப்பட்டவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்கள் மட்டுமே. பாலையுடன் சேர்த்து ஐவகை நிலமும் அடங்குமாறு 'முழுமையான் நிலம்' என்ற பொருளில் 'நாணிலம்' (காட்டு : நாண்மதியம்-முழுநிலை) என்ற சொல்லை ஆள்வது பொருத்தமுடையதாகுமா?
- ஆ. இராமலிங்கம், வேளாங்கண்ணி.

அ) (B.Lit.) என்பதற்கான தமிழ் 'இலக்கிய இளைஞர்' (இல. இ) என்பது.

ஆ) நாண் என்பதற்கோ நாள் என்பதற்கோ முழுமையான என்ற பொருள் இல்லை. நாண்மீன் என்பது அந்நாளுக்குரிய விண்மீன் (நட்சத்திரம்) என்ற பொருளில் வரும். இதனை நாள்+மீன் என்று பிரிக்க வேண்டும். ஐந்து நிலம் என்று உலகத்தைக் குறிக்கும் வழக்கு இல்லை. நிலங்கள் குறிப்பிட்ட நான்கு நிலங்களே நிலையானவை. பாலை என்பது தற்காலிகமாகத் தோன்றி மறையும் நிலம். முல்லையும் குறிஞ்சியும் வெப்பமிகுதியால் பாலை நிலம்போல் ஆகும். மழைபெய்து நீர்வளம் பெருகின் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும்.

வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் (சிலம்பு. காடுகண். 62-66)

என்பது காண்க. - இரா. தி.

7. அ) கன்னட மொழியின் யாப்புறுப்புகளுள் யதி என்றால் ஒரு பாடலடியைப் படிக்கும்போது இந்தச் சீரில்தான் சொற்றொடர் பொருளுடன் முற்றுப்பெறவேண்டும் என்னும் விதிப்படி எந்த இடத்தில் படிப்பதை நிறுத்துகின்றோமோ அந்த இடத்திற்குத்தான் யதி என்று பெயராம். இந்த யதிக்குக் கூறும் விதிக்குட்பட்ட - இணையான செய்யுளுறுப்புத் தமிழ் யாப்பில் உண்டா? - விளக்குவீரா?

ஆ) ஒரு வெண்பாவில் வகையுளி வந்தும் இன்னொரு வெண்பாவில் வகையுளி வாராதும் உள்ளன. இவ்விரண்டுப் பாக்களுள் எதற்கு மதிப்பெண் மிகுதியாகக் கொடுப்பீர்:
- புலவர் வீ. வில்வநாதன். க.மு., வெங்காலூர்.

அ) யதி என்பது செய்யுள் உறுப்பாகத் தமிழில் கூறப்படவில்லை. இது வடசொல். சீர்ஓசை முடியும் இடம் என்ற பொருளில் தண்டியலங்காரத்தில் வழுக்களின் வகைகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

113. யதி வழு வென்பது ஓசை அறுவழி
நெறிப்பட வாரா நிலைமைய தென்ப.

காட்டு : 'காடு அரிதாம்' என்ற சொற்களை வெண்பாவில் இரண்டு தனித்தனிச் சீராகக் கொண்டால், உயிர்முன்னே குற்றுகரத்தை அறுத்து இசைக்க வேண்டிவரும். அப்படி இசைப்பது முறையன்று. ஆதலின் காடரிதாம் என்று இசைக்கவேண்டிவரும். அப்படி இசைத்தால், 'கா டரிதாம்' எனச் சீர்சிதையும். இப்படி ஏற்படும் வழுவே யதிவழு எனப்படும். ஆனால் இசைத்தமிழ் இலக்கணத்தில் சில இடங்களில் உயிர் முன் குற்றுகரம் அறுத்து இசைப்பதுண்டு குற்றுகரம் இசைக்காக நீண்டிசைக்கும் இடங்களில் அது குற்றமாகக் கொள்ளப்படாது காட்டு :

"ஒதத்தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு" (திருநீற்றுப்பதிகம் -2 சம்பந்தர் தேவாரம்)

மதலையென வேதவழ்ந்து அழகுபெற வேநடந்து (அருணகிரிநாதர் திருப்புகழ்)

ஆ) எவ்வகைப் பாவாயினும் ஒவ்வொரு சீரும் முழுச்சொல்லாக அமையும் (வகையுளி ஏதும் வாராத) பாவே சிறந்தது. வேறு வழியில்லா இடங்களில் மட்டுமே வகையுளியைப் பயன்படுத்துவர் முன்னோர்.