
|
தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள்
நாளிதழ் நடவடிக்கைகள்: சென்ற இதழில் குறித்தபடி அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை
இணையத் திங்களிதழ் 'தமிழ்க்காவல்' என்ற பெயரில் உருவாகிவருகிறது. ஒவ்வொரு தமிழ்த்திங்கள் முதல் நாளிலும் பார்க்கக் கூடியதாக வெளியாகும். வரும் ஆடவைத்திங்கள் முதல் நாள் 15-06-2008 அன்று முதல் இதழ் வெளியாகும். அதன் இணைய முகவரி : http://www.thamizhkkaaval.net என்பது. வழக்கப்படி நன்கொடை களைத் 'தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை' என்ற பெயருக்குப் பணவிடையாகவோ கேட்புக் காசோலை யாகவோ திரு தி.ப.சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008 என்ற முகவரிக்கு அனுப்புக. தமிழ்மாமணி புலவர் இறைவிழியனார்-சிறந்த அன்னை அரியநாயகி அம்மையார் அறக்கட்டளை : இதன் தொடக்க விழாவின் முதலாம் சொற்பொழிவு 22.05.2008 அன்று அறக்கட்டளை நிறுவுநர் திருவாட்டி அரியநாயகி இறைவிழியனார் தலைமையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் மு.சுதர்சனன் வரவேற்க, திரு. சா.இளங்கோவன் நோக்கவுரையாற்ற, புலவர் நா. வேணுகோபால், கலைமாமணி புலவர் அரங்க. நடராசன், புலவர் செ.இராமலிங்கன், திரு.பெ.மூர்த்தி, திரு. ந.க.குணத்தொகையன் ஆகியோர் முன்னிலையில் ச.ம.உ. திரு குரு.பன்னீர்ச்செல்வம். புலவர் இறைவிழியனாரின் இரண்டாமாண்டு நினைவேந்தல் உரையாற்றினார். முனைவர் இரா.திருமுருகனார் "தமிழ்-இன்றும் நாளையும்" எனும் பொருளில் அறக் கட்டளையின் முதலாம் சொற்பொழிவாற்றினார்; பாவலர் தமிழ்நெஞ்சனின் நன்றியுரையுடன் அறக்கட்டளைத் தொடக்கவிழா இனிது நிறைவுற்றது. புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத்தின் 26ஆம் நிகழ்ச்சி : 24.05.2008 அன்று மன்றத் தலைவர் தொழில் முனைவர் பெ. பராங்குசம் வரவேற்க, தமிழ்மாமணி புலவர் துரை மாலிறையன் தலைமையில் பாட்டரங்கம் நடைபெற்றது. வாழ்க்கையை நெறிப்படுத்துவது அறமே! எனுந்தலைப்பில் பாவலர்கள் மாநி, தமிழ்நெஞ்சன், வ.பழனி, கோ.செழியன், ஆகியோரும், கல்வியே! எனுந் தலைப்பில் சு.சண்முக சுந்தரம், தையல்நாயகி கலிவரதன், மு.பரிதியன்பன், மேகலா செழியன் ஆகியோரும் பாக்கள் வழங்கினர். தமிழில் இ.அ.ப. தேர்வு எழுதி வெற்றி பெற்ற அரிகிருட்டினன், அ.முத்தம்மாள், பயிற்றுவித்த பேரா. இராச.குழந்தைவேலனார் ஆகியோரை வாழ்த்திப் பாராட்டி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு, விழா இறுதியில் கலைமாமணி புலவர். பூங்கொடி பராங்குசம் எண்ணத்தில் உருவான கதையமைப்பில் தோல் பதுமை கலைநிகழ்ச்சி திருவக்கரை நாடகக் குழுவினர் அ.இராசு, இரா.சோதி, ஆகியோர் இயக்கத்தில் நடைபெற்றது. பாவலர் மு.சச்சிதானந்தம் தொகுப்புரையும் நன்றியுரையும் வழங்கினார். திருக்குறள்மணி இறைக்குருவனாருக்குச் சிறப்பு விருது; உரு.1 இலக்கம் கொடை! : 14.05.2008 அன்று கன்னியாகுமரியில், திருவள்ளுவர் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் விழாவில், திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களுக்குத் திருக்கழுக்குன்றம் மறைமலையடிகள் மன்றம் 'திருக்குறள் செந்தொண்டர்' என்னும் சிறப்பு விருதும், ஓரிலக்கம் (1,00,000) உருவா பணக்கொடையும் வழங்கிச் சிறப்பித்தது. அன்று மாலை, கடற்கரையில் திரு. மா.செ.தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற பொது அரங்கத்தில், பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து ஐயா, மறைமலையடிகள் மன்றச் சார்பில் திருக்குறள்மணிக்குப் பொன் னாடை போர்த்தி வாழ்த்தினார். மறைமலையடிகள் மன்றத் தலைவர் முத்துப்பெருமாள் ஐயா அவர்கள் விருது வழங்கினார். மன்றச் செயலாளர் திரு. வீ.இறையழகன் ஓர் இலக்கம் உருவாய்க்கான காசோலையை வழங்கிச் சிறப்பித்தார். கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் அறக்கட்டளையை வலுப்படுத்தும் வகையில் தமிழர்கள் பண உதவி செய்க! நன்கொடை யாளர்களுக்கு வரிச் சலுகை செய்து தரப்பட்டுள்ளது. உருபா 2 பெறுமான முள்ள திருவள்ளுவர் பட வில்லை வெளியிட்டு நன்கொடை திரட்டி வருகிறோம். திருவள்ளுவர் அறக்கட்டளை வளர்ச்சித் தொகை திரட்டப் புரவலர் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. முல்லைப் புரவலர் : உரு 1000 முதல் 5000 வரை பொருள் வளம் பெற்ற தமிழர்கள் புரவலர் திட்டத்தில் இணைந்து அறக்கட்டளை வளர்ச்சி பெறத் துணை நிற்கக் கேட்டுக் கொள்கிறோம். காசோலை, வரைவோலை வழி நன்கொடை அனுப்புகிறவர்கள் திருவள்ளுவர் அறக்கட்டளை, கன்னியாகுமரி என்ற பெயரில் எடுத்தனுப்பக் கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு : திருவள்ளுவர் அறக்கட்டளை, 6சி/7 மேட்டுத்திடல், கன்னியாகுமரி - 629 702, கைப்பேசி : 94435-27255; 99949-40240; 94422-59846 உலகத் தமிழர் பேரமைப்பு இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு : 24.05.2008 அன்று உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடந்த அதன் கூட்டத்தில், 1. அயலகத் தமிழர்களுக்கு : தமிழ்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் 5 விழுக்காட்டு இடங்களையும் வேலை வாய்ப்பில் 5 விழுக்காட்டு இடங்களையும் ஒதுக்குவதோடு. இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் 5 விழுக்காட்டு இடங்களையும் வேலைவாய்ப்பில் 5 விழுக்காட்டு இடங்களையும் ஒதுக்க வேண்டும். 2. பிறமாநிலங்களில் தமிழர்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை பிரிந்தபோது அந்தந்த மாநிலங்களில் உள்ள சாதி வாரிப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழர்களின் சாதிப்பெயர்கள் இடம் பெறவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பழைய ஒன்றுபட்ட சென்னை மாகாண சாதிப்பட்டியல் அப்படியே வைக்கப்பெற்று இல்லாத சாதிகளுக்கும் கல்வியிலும் வேலையிலும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் உள்ள தமிழர்களை அந்தந்த மாநிலங்களிலுள்ள பட்டியலில் சேர்த்துக் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாட்டரசு நடவடிக்கை மேற்கொள்ள இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது. 3. ஐ,நா. பேரவையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம் உலகநாடுகளில் உள்ள அகதிகளுக்குச் செய்ய வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து வருகிறது. இந்த ஆணையப் பட்டயத்தை ஏற்று பல்வேறு நாடுகள் கையயழுத்திட்டுள்ளன. இந்தியா இன்னும் ஏற்றுக் கையயாப்பம் இடவில்லை. இதனால் இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு ஐ.நா அகதிகள் ஆணையம் உதவமுடிய வில்லை. இந்திய அரசு அகதிகள் ஆணையத்தை ஏற்றுக்கொள்வதுடன் இலங்கை அகதிகளுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் வழங்கும் உதவிகளைப் பெற்றுத் தரச் செய்ய வேண்டும். 4. பிறமாநிலத்தவர்களுக்கு தமிழ்வழிக்கல்வி தர ஏற்பாடு செய்ய வேண்டும். 5. உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்த வேண்டும். 6. கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் உரிமையை நிலை நாட்டத் துணைபுரிய வேண்டும். இந்தியஅரசு கச்சத்தீவை இலங்கை அரசுக்குத் தாரை வார்த்ததின் காரணமாகத் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை பறிபோய்விட்டது. அன்றாடம் சிறைபிடிப்பு. வலைபறிப்பு, கொலை என்று மீனவர்கள் சீரழிந்து கொண்டுள்ளார்கள். தமிழக மீனவர்களைத் தன் குடிமக்கள் என்று இந்திய அரசு கொஞ்சமும் கருதிப்பார்க்காமல் தொடர்ந்து இலங்கை அரசின் ஆணவப் போக்கிற்குத் துணைபோய்க் கொண்டுள்eது. இந்திய அரசு இலங்கைக்குச் செய்துவரும் எல்லா உதவிகளையும் நிறுத்திவிட்டு இலங்கை அரசை எச்சரிக்கை செய்வதுடன் கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டத் துணை நிற்க வேண்டுமென்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக் கொள்கிறது. 7. தமிழ்வழிப் பள்ளி நடத்துவோர்க்கு எல்லா வகையிலும் உதவி செய்ய வேண்டும் என்னும் கோரிக்கைகளை நடுவணரசும் தமிழ்நாட்டரசும் நிறைவேற்றுமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கு : 7.6.2008 அன்று புதுவைத் தமிழ்ச்சங்கத்தில், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் சார்பில் நடந்த இக்கருத்தரங்கில், பேரா. ம.இலெ.தங்கப்பா தலைமையில், புலவர் நாகி வரவேற்புரையும், புலவர் இலக்கியன் தொடக்கவுரையும் ஆற்ற, முனைவர் இரா.திருமுருகன் 'வண்ணப்பாவளம்' என்பது பற்றி உரையாற்றினார். திருவாளர்கள் கோ.புகழேந்தி, கோ.இளங்கோப்பாண்டியன், புலவர் அரங்க.நடராசன், இ.செயராமன் ஆகியோர் சுந்தரகுமரனார் நினைவு இலக்கணப் போட்டிகளிலும், இரா.திருமுருகன் இசைப்போட்டியிலும் வென்ற மாணாக்கர்கட்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினர். முனைவர் 'அருகோ' 'இன்றைய தமிழும் தமிழரும்' என்பது பற்றிச் சிறப்புரையாற்றினார். திரு இரா.இளமுருகன் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுற்றது. முகவரி மாற்றம் : மாத்தூரில் இருந்த நம் தமிழ் அரண் பாவாணர் மன்றம், வரும் ஆடவை முதல் நாள் சீனிவயல், திருச்சி நெடுஞ்சாலை, கீரனூர் - 622502. புதுக்கோட்டை மாவட்டம் என்ற முகவரிக்கு இடப்பெயர்ச்சியுறுகின்றது என்று பொறிஞர் அகன் தெரிவிக்கிறார். |
||||||||||||