ஆலயத்தின் கோபுரத்தில் குடியி ருந்த
அழகான வெண்புறாக்க ளிணையி லொன்றை
காலனெனும் வேடனவன் கண்டு விட்டான்
கையிலுள்ள அம்பெடுத்தே ஒன்று விட்டான்
பூளையெனப் பெண்புறவு வீழ்ந்த தம்மா
பொல்லாத வேட்டுவனின் அம்பி னாலே
தாளாத துயரத்தால் ஆண்பு றாவும்
தன்துணையின் நிலைகண்டு தவித்த தம்மா
பெண்புறவு துன்புறவும் அதனைக் கண்டு
பேதலித்தே ஆண்புறவு திகைத்து நின்று
கண்கலங்கி "என்செய்வேன் கயிலை நாதா
கடையனேற் குன்நெஞ்சம் கரைந்தி டாதா?
வெண்மதியைச் செஞ்சடையில் அணிந்த தேவா
வேண்டுகிறேன் என்துணையைக் காவா" யென்று
புண்பட்ட மனத்துயரை இறைவன் காதில்
பொருமியவன் மனமுருகப் புகன்றி டாமல்
வல்லுருவ வேட்டுவனை எதிர்த்து நின்று
மல்லாடிப் புள்யளான்று வெல்லுங் கொல்லோ?
பொல்லாத வில்லாளர் கொன்று தின்னப்
புள்யளம்மைப் படைத்தனையா? இறைவா என்று
கல்லாகிக் கோபுரத்தில் வீற்றி ருக்கும்
கடவுளர்க ளிடங்கேட்டுக் கதறிற் றாமால்
எல்லார்க்கும் அருள்செய்யும் இறைவா இந்த
ஏழைப்புட் குரல்செவியில் ஏற்றி டாயா?
வீழ்ந்துவிட்ட பெண்புறவைச் சுற்றி வந்து
விம்மியழு கின்றதம்மா ஆண்பு றாவும்
"ஈந்துவப்பேன் என்னுயிரே வேண்டு மாயின்
இறைவாநீ என்துணையை எழுப்பித் தாராய்!
வாழ்ந்திருக்கும் காலம்வரை மறந்தி டாமல்
வந்துவந்தே உன்னடியை வணங்கிச் செல்வேன்
சூழ்ந்திருக்கும் உயிரச்சம் தொலைந்து துன்பம்
தொடராமல் காத்தரு"யளன் றிறைஞ்சிற் றாமால்
உறவான புள்ளினங்கள் செய்தி கேட்டே
ஓடிவந்தே அதன்துயரில் பங்கு கொள்ளும்
பிறர்துயரைக் கருதாத கொடிய உள்ளம்
பேய்புகுந்து குடியிருக்கத் தகுந்த இல்லம்
புறவாழ்வின் நீர்மைஇதை ஓர்ந்து பார்ப்பின்
புள்ளிற்கும் மாந்தர்க்கும் பொருந்திக் காணும்
பிறப்பதெலா மிறப்பதற்கே என்று பேசும்
பெரியரையும் விடுவதில்லை பிரிவாற் றாமை
பிணிமூப்புச் சாக்காட்டை வென்றோ மென்ற
பெருமையினைப் பெற்றவரிவ் வுலகி லில்லை
எனினுமவ ரரியசெயல் மக்கள் நெஞ்சில்
இனிதிருக்க வாழ்பவர்கள் மறைவ தில்லை
கனிசொரியு மரங்கயளனத் திகழ்வா ரெல்லாம்
காலத்தை வென்றுலகில் வாழ்ந்தி ருப்பார்
தனித்தன்மை என்பதெல்லாம் அவர்க ளாற்றும்
தாளாண்மைத் தன்மையிலே விளங்கித் தோன்றும்.
-இரா. செம்பியன்
தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம்
மேட்டுப்பாளையம் சாலை, கொங்கம்பட்டு,
விழுப்புரம் மாவட்டம்-605105. பேசி 2699485