
|
கண்ணிற் பட்டதும் கருத்திற் பட்டதும்
1. "இலங்கைச் சிங்கள அரசுக்கு இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை, ஏறத்தாழ உரு. 400 கோடியை அது விருப்பப்பட்ட நாட்டிலிருந்து படைக்கருவிகளைக் கொள்முதல் செய்து கொள்வதற்காக வழங்கியிருக்கிறது. அதையொட்டி ஆயுதங்கள் வாங்குவதற்காகவே அதன் படைத்தலைவர் பொன்சேகா பாக்கித்தான் சென்றார். இத்தனைக்கும் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள், தலைமையில் உள்ள இன்றைய நடுவண் அமைச்சரவையில் தி.மு.க., பா.ம.க., ஆகிய தமிழ்நாட்டுக் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. . . . தனது மரபுவழி மக்கள் அர்சென்டினாவில் பாதிக்கப் படுகிறார்கள் என்றதும் ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன் அமெரிக்காவில் உள்ள அர்சென்டினா மீது படையெடுத்து அதைமுறியடித்தது. இலங்கைச் சிக்கலில் இந்தியா பாராமுகமாக இருப்பது ஒருபுறமிருக்க, சிங்களப் படைகளுக்கு உதவுவதென்பது தமிழ்நாட்டைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதே ஆகும். தமிழ்நாட்டுச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் அதையே தொடர்வது தமிழ்நாட்டை அவமதிப்பதாகும். என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு?"- முனைவர் அருகோ. "தமிழ்ச்சான்றோர் பேரவை" மே-2008 பக்கம்15,16 நாம் தமிழர் எனும் உணர்வினை உலகுக்குணர்த்தும் வகையில் மொழியாலும், இனத்தாலும் ஒன்றுபட்டு இலங்கை வாழ் தமிழர்களுக்கு உறுதுணையாகக் குரலெழுப்ப வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்திய அரசு இலங்கை அரசுக்குப் படைக்கருவிகள் வழங்குவதை உடன டியாகத் நிறுத்துதற்கும்; உணவு, உடை, மருந்து ஆகியவற்றை இந்தியத் தமிழராம்-இலங்கைத் தமிழர்க்கு எளிதாக விலை மலிவாகக் கிடைப்பதற்கும் மாந்த நேய அடிப்படையில் விரைந்து செயல்பட நெருக்கடிகள் தர வேண்டும். 2. "மொழ மொழன்னு - யம்மா, மொழ மொழன்னு "இப்படித்தான் தொடங்குகிறது அந்தப்பாடல். காந்தியடிகளுக்கே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்டித் தனது 16ஆம் அகவையிலேயே வெள்ளையரின் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் தொடக்கமாகக் கருதப்பட்ட, வெள்ளையரின் சிறைக் கொட்டடிகள் தந்த நோய்களால் தனது 18ஆம் அகவையிலேயே உயிர் நீத்த விடுதலை இயக்க வீரத்தமிழ்ப் பெண் தில்லையாடி வள்ளியம்மைக்குக் கோடம்பாக்கம் கவிஞர் ஒருவர் தந்திருக்கும் பரிசுதான் மேற்குறிப்பிட்டுள்ள கீழ்த்தரமான பாடல்வரிகள்"- பாவலர் செயபாற்கரன் "தமிழ்ச்சான்றோர் பேரவை" மே 2008-பக்கம்4. உரைநடையை வரிக்கு இரண்டு, மூன்று சொற்களாகப் பிரித்துப் பிரித்துத் திரைப்படப் பாடல் எழுதும் வித்தகக் கவிஞர்கள் இனியும் தில்லையாடி வள்ளியம்மை போன்றோரை இழிவு செய்யும் நோக்கில் பாடல் எழுதாமல் இருத்தல் நன்று. "ஒவ்வொரு பூக்களுமே" என்று (தவறாக) எழுதிப் பெற்ற தேசிய விருதைக் காத்திட எழுதாமல் இருப்பதும் நன்றே ஆகும். "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 3. "கச்சத்தீவு தொடர்பான உடன்படிக்கை 1974ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போதைய இந்தியத் தலைமையமைச்சர் இந்திராகாந்தி சிரிமாவோ பண்டாரநாயகா இருவரும் வரலாற்றில் சிறப்புமிக்க அந்த உடன்பாட்டில் கையயழுத்திட்டனர். அதன்படி இருநாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கும் கச்சத்தீவைச் சுற்றி யுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும் முழுஉரிமையும் உண்டு. இந்திய மீனவர்களும் இந்திய பக்தர்களும் கச்சத்தீவிலுள்ள அந்தோனியர் கோயிலுக்குச் செல்வதற்கும், மீன்பிடிப்பதற்கும் எப்போது வேண்டுமானாலும், செல்லலாம் அதற்கு இலங்கை அரசிடம் இசைவுபெறத் தேவையில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை ஏறத்தாழ 350க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இப்போதும் சிறைப்படுத்துவதும், கடத்திச் செல்வதும் தொடரத்தான் செய்கின்றன". - இரா. உமா 'தென் ஆசியச்செய்தி' 2008சூன்01-15 பக்கம்6. தமிழர்களை இந்தியர்களாகவே மதிப்பதில்லை நம் இந்தியஅரசு என்பதற்குக் கச்சத்தீவு உடன்பாட்டு மீறல்களைக் கண்டிக்காததும், நடவடிக்கை எடுக்காததுமே சான்றாகும். இதைப்போலவே தான் வங்காள தேயத்தை உருவாக்கி அமைத்துக்கொடுத்ததைப் போல், ஈழத் தமிழர் சிக்கலைத் தீர்த்துத் "தமிழீழம்" அமைத்துக் கொடுப்பதற்கு மாறாக இலங்கை அரசுக்குப் படைக்கருவிகள் வழங்கிவருகிறது இந்திய அரசு. இதற்கும் நாம் தமிழர்கள் என்ற உள்நோக்கமே ஆகும். இலங்கைக் கடற்படையினரால் அவ்வப்பொழுது இந்திய (தமிழக) மீனவர்களைக் கச்சத்தீவுப் பகுதியில் சுட்டுக் கொல்லப் படுவதையும், கடத்திச் செல்லப்படுவதையும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியலாரும், தமிழ் அமைப்புகளும் இந்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதற்கு நாம் தமிழர் என்ற கரணியமே ஆகும். ஒற்றுமை உணர்வுடன், இழந்த தமிழ்மண் பகுதிகளை மீட்டிட உறுதி கொள்ள வேண்டும்.- செ. இரா. |