சொந்தமாக எந்தக் கல்விக் கொள்கையும் இல்லாத புதுவை அரசே!
உனக்குக் கல்வி வாரியம் ஒருகேடா?

புதுச்சேரி அரசுக்கென்று தனிக் கல்வித்துறை உண்டு; ஆனால் தனிக் கல்விக்கொள்கை இல்லை. தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையையே பின்பற்றி நடக்கிறது. தமிழ்நாட்டுப் பாடத்திட்டம், தமிழ் நாட்டுப் பாடநூல்கள், தமிழ்நாட்டுக் கல்வி வாரியம் நடத்தும் தேர்வுகள், தமிழ்நாட்டரசு தரும் சான்றிதழ்கள் இப்படி எல்லாவற்றிலும் தமிழ் நாட்டின் முன்றானையைப் பிடித்துக்கொண்டே நடந்துசென்று கொண்டிருக்கின்றது.

புதுச்சேரி மாணவர்களுக்குப் புதுவையின் வரலாறு, நிலவியல், மக்கள் வாழ்க்கை முதலியவற்றை விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரியில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் சமூக அறிவியல் பாடநூலில், நமது மாவட்டத்தின் பெயர் தென்னார்க்காடு. அதன் தலைநகரம் கடலூர் என்று படித்தார்கள்!

பிரஞ்சுக்காரர் ஆண்ட காலத்தில் பிரஞ்சுக் குடியரசைச்சேர்ந்த புதுச்சேரி மாணவர்கள், முதல் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் இவர் நமது ராஜா; இவர் பெயர் ஜார்ஜ் மகாராஜா, என்று இங்கிலாந்து மன்னரை 'நமது மன்னர்' என்று படித்தார்கள். காரணம் தமிழ்நாட்டுத் தமிழ்ப்பாடநூலே இங்குப் பயன்படுத்தப்பட்டதுதான். அடிமைக்காலத்தில் இருந்த அந்தச் சார்புநிலை, பச்சைத் தமிழர்கள் ஆண்டு கொண்டிருக்கும் இன்றும் நீடிக்கிறது. அப்படித்தான் புதுவை அரசு தமிழ்நாட்டரைச முழுமையாகப் பின்பற்றுகிறதா என்றால் அதுவும் இல்லை. மருத்துவம் பொறியியல் முதலிய தொழிற்கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை அண்மையில் தமிழக அரசு நீக்கியது. புதுவை அரசு அதனை உடனே செய்திருக்க வேண்டும். அதற்கு ஓரு கோரிக்கை, கிளர்ச்சி, அதன் பின் நுழைவுத்தேர்வு நீக்கம்!

'புதுச்சேரியில் தமிழ்நாட்டரசுக்கே பாடநூல் எழுதிக் கொடுக்கும் பலதுறை அறிஞர்கள் இருக்கிறார்கள். பாடநூல் எழுதி அச்சிடுவதில் நாம் பிற மாநிலத்தைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. நாமே தேர்வு களையும் நடத்திச் சான்றிதழ் களையும் தரலாம் என்றால் அதற்கு நமக்கென்று ஒரு கல்வி வாரியம் வேண்டும்' என்றுபேசப்பட்டது. அதன்படி எழுந்த கோரிக்கையின் விளைவாக 2003 ஆம் ஆண்டில் புதுவைக்கென்று ஒரு கல்விவாரியம் கிடைத்தது. அதற்கு வேண்டிய உறுப்பினர்களும் அமர்த்தப் பெற்றார்கள். 5 ஆண்டுகளாக அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியைக் கல்லாமலே பல்கலைக்கழகப் பட்டங்களை வாங்கும் நிலை தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மட்டுமே இருந்து வந்தது; இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. அந்த இழி நிலையை அண்மையில் தமிழக அரசு, எவ்வகைப் பள்ளியிலும் 1 முதல் 10 வரையில் கட்டாயத்தமிழ் என்று சட்டம் செய்து நீக்கிக்கொண்டது. (அந்தச் சட்டம் கூட அங்கே சரியாக நடைமுறைப் படுத்தப்படுகிறதா? தமிழுக்கு மதிப்பு ஏற்பட்டு, மாணவர்கள் தாய்மொழியில் பேசியதால் தண்டிக்கப்பட்டுக் கடு வெயிலில் நிற்கும் நிலை நீங்கியதா? என்று தெரியவில்லை) அங்கே சமச்சீர்க்கல்வி பற்றிப் பேசப்படுகிறது. இங்கே எந்த வெங்காயத்தையும் காணோம்! அங்கே பேருக்காவது சட்டம் வந்திருக்கிறது. அந்த இழவைக்கூட இங்கே காணோம்! 'நீ செத்த நாளும் இல்லை; நான் அழுத நாளும் இல்லை', என்று தான் இருக்கிறது நிலைமை!

உலகத்தின் முன்னிலையில் புதுச்சேரி ஆட்சியாளர்கள் தலைநிமிர்ந்து மார்தட்டிச் சொல்லிப் பெருமைப்படலாம், "இந்தியாவிலேயே ஆட்சிமொழியைப் படிக்காதவர்கள் ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் எங்கள் மாநிலம் ஒன்று தான்!" என்று. ஏன் இந்த நிலை? புதுச்சேரியை ஆள்பவர்கள் யார்? ஓரு பக்கம் ஆட்சிமொழியே தெரியாத ஆளுநர், செயலர்கள்; மற்றொருபக்கம் உயிரே தமிழ் என்று வயிறே வளர்க்கும் ஒப்போலைப் பொறுக்கிகள்!

ஏழைமக்கள் ஆங்கில வழிக்கல்வியையே விரும்புகிறார்களாம். ச.ம.உ.க்கள் அனைவரும் அதை வற்புறுத்தினார்களாம். இது அரசு கூறும் நொண்டிச் சாக்கு! (அண்மையில் ச.ம. உக்கள் சிலர் தமிழுக்கு ஆதரவாகக் குரலெழுப்பி வெளிநடப்புச் செய்து அது உண்மையில்லை என்று மெய்ப்பித்து விட்டார்கள்!)

புதுவை அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, நமது மாநில ஆட்சி மொழியை மதியுங்கள்! நீங்கள் ஆட்சி மொழிக்குச் சார்பாகச் செய்த ஆணைகளை மதியுங்கள்! தமிழ்க் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைக் கொடுப்பதைத் தடுத்த கொடிவர்கள் என்ற கொடும்பழியைப் பெறாதீர்கள்!

ஒப்போலைக்காக எதையும் செய்து வாழ்வது என்ன வாழ்வு! 'நீ நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வு' என்று பாட என்ன தகுதி இருக்கிறது உங்களுக்கு? மாயேப் பகுதிக்குக் கேரளக் கல்விமுறை, ஏனாம் பகுதிக்கு ஆந்திரக் கல்விமுறை. புதுவை காரைப் பகுதிகளுக்கு மட்டும் அரைகுறையாகத் தமிழ்நாட்டுக் கல்வி முறையா? இந்த அழகில் உங்களுக்கென்று தனியாகக் கல்வி வாரியம் ஏன்? அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாளா?
- இரா.திருமுருகன்