வினாதலும் விடுத்தலும்

1. தங்கள் தெளிதமிழ் இதழ் '௩' இல் உள்ள மேலட்டையின் முதல்பக்கப் பாடலில் "புறா" என நெடிலோசையில் தொடங்கிய எதுகை "பிறர்" என குற்றோசையில் எதுகை அமையலாமா? மேலும் "ஒரே" என இடையின 'ர'கரத்தில் எதுகை அமையலாமா? நெடிலும் - றா, குறிலும் - ற, வல்லினமும் - றா, இடையினமும் - ரே என ஒருபாடலில் எதுகை அமையலாமா?

இவற்றிற்குச் சான்றோர் மரபும், வழக்கும் உண்டா?
- புலவர் அழகரசன், சாயிநாதபுரம் வேலூர்.

யாப்பருங்கலக் காரிகை ஒழிபியலில் சுட்டியுள்ளபடி, இப்பாட்டில் வந்திருப்பது கடையாகு எதுகையாகும். (இரண்டாம் எழுத்துடன் சீர்முழுதும் பிற எழுத்துக்கள் ஒன்றிவருவது தலையாகு எதுகை. இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றி வருவது இடையாகு எதுகை. பிறவெல்லாம் கடையாகு எதுகை என்பர்.) பாரதிதாசனார் பாடல் முதல் தொகுதியில் காதலைத் தீய்த்த கட்டுப்பாடு என்ற தலைப்புடைய பாட்டின் ஒரு செய்யுளில் ஆடவரின், பேடகன்ற, வாடாத பாடாத எனவும் அவர்தம் பன்மணித்திரளில் கற்பனை உலகில் என்ற பாட்டின் கடைசிச் செய்யுளில் பாரத, ஓரண்டை, நேரோடி, பாராளும் எனவும் எதுகையில் குற்றோசையும் நெடிலோசையும் விரவி வந்திருப்பது காண்க.

பாரதியார் பாடல்களில், வாழ்த்துப்பாக்கள் என்ற பகுதியில் ஒரு பாட்டில் அரம்பை, திறம்பட எனவும் எதுகையில் ரகர றகரங்கள் விரவி வந்திருப்பதும் காண்க. வடிவ ஒழுங்கின்படி இவை போல்வன சிறப்பில எனினும் கருத்துக்கு முதன்மை கொடுக்கும் பொழுது இவை கையாளப்படுகின்றன.
- ம.இலெ.தங்கப்பா.

2. (அ) 'தள்ளு முள்ளு' ஏற்பட்டது என்று அடிக்கடி தொலைக்காட்சிகளில் கூறக்கேட்கிறேன். 'தள்ளு' புரிகிறது. 'முள்ளு' பொருத்தமாக இல்லையே! ஒலிக்காக இவ்வாறு கூறுகின்றனரா? விளக்க வேண்டுகிறேன்.

(ஆ) கீழே (கீழ்+ஏ) 'ஏ' இடைச்சொல். எனவே கீழே கிடக்கும், கீழே சொரக்காணி என ஒற்றுமிகாமல் எழுதுவது சரியா? கீழ்க்காணி, கீழ்த்தெரு, என்பதுபோல கீழேக்கிடக்கும் கீழேச்சொரக்காணி என ஒற்று மிகுத்து எழுதலாமா?
- ம. பாலன், கலிதீர்த்தாள்குப்பம்.

(அ) தமிழ்ச்செவிகள் நூற்றாண்டுக்காலமாக ஒலி நயத்தில் ஊறிப்போனவை. யாப்பிலக்கணம் என்ன? எழுதப்படிக்கவே அறியாத மக்களின் குருதி அணுக்களிலும் இந்த ஒலியுணர்வு உள்ளது. எனவே அந்த உணர்வுடன் ஒன்றைச் சொல்லும்போது, பூச்சிபொட்டு, நகைநட்டு, காத்து கீத்து மாடுகீடு என்றெல்லாம் எதுகை மோனைகள் தாமே இயல்பாக அமைந்துவிடுகின்றன. இவற்றில் பொட்டு, நட்டு, கீத்து, கீடு என்ற சொற்களுக்குப் பொருள்இல்லை. வெறும் அசைச் சொற்களே அதுபோல் தள்ளு என்பதற்கு எதுகையாக வந்த பொருளற்ற அசைச்சொல்லே 'முள்ளு' என்பது.

ஆ) ஏ,ஓ என்னும் இடைச்சொற்களின் முன் ஒற்றுமிகாமல் எழுதுவது சரிதான். இதற்குவிதி: 'இடைச்சொல் ஏ ஓ முன்வரின் இயல்பே' (நன்னூல் 201)

3. அ) நீங்கள் அமைத்த 'விழுமிய தென்றின்று' எனும் பாடலின் ஈற்றடியின் ஈற்றுச் சீர்மட்டில் விளங்காயாகாமல் உள்ளது.

ஆ) ஆனிக்கு நிகராகத் தமிழில் இரட்டை எனவும் ஆடவை எனவும் இரு சொற்கள் பயன்படுத்துகின்றனர். இரண்டின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

இ) முன்னட்டைப் பாடல் கருத்து வளஞ்செறிந்துள்ளது. முதற்பாவில் எதுகைத் தொடை அமைத்தவாற்றுக்கு அமைதி வேண்டுகிறேன்.
- சிலம்பூர்கிழான், கள்ளக்குறிச்சி.

அ) விளம்பும்மொழிக்கு என்ற ஈற்றுச்சீரைப் பாவலர் தம் திறனால் விளங்கா யாக்க முடியும். அடுத்த அடியை உயிரெழுத்தில் தொடங்கினால் இறுதியில் உள்ள 'கு' என்ற ஓரசை குறைந்துபோய்க் கருவிளங்காயாகும்.

ஆ) ஆடவை-வடவிண் அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்தில் தோன்றும் விண்மீன் குழு என்கிறது பெருஞ்சொல்லகராதி. இக்குழு ஆடுகளம் போல் தோற்றமளிப்பதால் ஆடு + அவை = ஆடவை எனக் கூறப்பெற்றிருக்கலாம். இரட்டை என்பது மிதுனம் என்ற வடசொல்லின் பெயர்ப்பு. 'கின்னரமிதுனங்கள்' என்கிறார் பெரியாழ்வார் (3-6.5) இது ஆண்பெண் இரட்டையான கின்னரப் பறவைகளைக் குறிக்கும். மேனாட்டார் இதை Gemini எனக் குறிப்பர். இதுவும் இரட்டையரைக்குறிப்பதே. தமிழரின் ஆடவை என்ற பெயரே பொருத்தமாகத் தோன்றுகிறது.

இ) இதற்கு இப்பகுதியில் பேராசிரியர் தங்கப்பாவின் விடையைக்காண்க.

4. அ) புதுமனை புகுவிழா, புதுமைனைப் புகுவிழா இவற்றுள் எது சரி? எவ்வாறு?

ஆ) 'யார்'? என்னும் வினாவைக் குறிப்புவினை எனக்கூறுவது எவ்வாறு? இது காலத்தைக் குறிப்பால் புலப்படுத்துகின்றதா?

இ) சிவகுமார், சிவக்குமார் - இவற்றுள் எது சரி?
இங்கு ஒற்றினால் ஏற்படும் வேறுபாடு யாது? விளக்கியுதவவேண்டுகிறேன்.
- - கி. சிவகுமார், விருத்தாசலம்.

அ) சுனை பாய்தல், வரைபாய்தல் என்று வரும் ஏழாம் வேற்றுமைத் தொகைகள் வருமொழி வினையாயவிடத்து இயல்பாகும் என்பது நன். 257 நாவலர் உரையில் கூறப்படும் இலக்கணம். அதன்படி புதுமனை புகுவிழா என்று இயல்பாக வருவதே சரி.

ஆ) (பொன்னை) உடையார், (புகழை) உடையார் என்பவற்றில் உடையார் குறிப்பு வினையன்றோ? அதுபோல் யார்? என்பது 'எத்தன்மையுடையார்' என்னும் பொருளது. ஆதலின் குறிப்பு வினையாகும். (நன்னூல் 348 மயிலைநாதருரை காண்க) மற்றக் குறிப்புவினைபோல யார்? என்பதும் குறிப்பாகக் காலம் காட்டும்.

இ) சிவத்தம்பி, சிவப்புத்தோள் சிவப்பழம், சிவக்கோலம் என நிலைமொழி யீறுகெட்டு வலிமிக்கு வரும் மரபின்படிச் சிவக்குமரன் என்று வருவதே முறை. எனினும் வருமொழி வடசொல்லாயின் சிவகணம், சிவகதி என இயல்பாக எழுவதுண்டு. அதிலும் மக்கட் பெயர்கள் விதிகளுக் கடங்காத வேறுபாடுகளைப் பெற்றுவருவது 'சில விகாரமாம் உயர் திணை' (நன்.159) என்பதில் அடக்கப்படும். சிவகுமார், சிவக்குமார் என்பவற்றில் ஒற்றினால் ஏற்படும் வேறுபாடு எதுவுமில்லை.

5. எங்கள் + தமிழ், என்பதைப் புணர்ந்தால் எங்கட்டமிழ் என வருமா? அல்லது எங்கட்தமிழ் என வருமா? எங்கள் தமிழ் என்பதுதான் சரியா?
- த. கருணைச்சாமி, தேனி.

எங்கள் + தமிழ் = எங்கடமிழ் என்றாகும். எங்கட்டமிழ் என்றோ எங்கட்தமிழ் என்றே ஆகாது. எங்கள் தமிழ் என்பது புணராத நிலை. இதுவும் சரியில்லை. ட்த என்ற எழுத்துகள் எப்படி அடுத்தடுத்து நிற்கக்கூடாதோ அப்படியே ள்த என்ற எழுத்துகளும் நிற்கக்கூடா. என்றாலும் எங்கடமிழ் என்பதை, 'எங்கள் தமிழ்' என்று பிரித்து உணரமுடியாத நிலையில் உள்ள இன்றைய பெரும்பாலான மக்களுக்காகவே எங்கள் தமிழ் என்று புணராத நிலையிலேயே எழுதப்படுகிறது.- இரா.தி.

6. இளைஞருக்குப் பெண்பாலாக இளைஞையர் எனப் பொறிஞர் அகன் எழுதியுள்ளார். பலர் இளைற் என்று எழுதுகின்றனர். இவற்றுள் எது சரி?

உரற்றினேன் எனும் சொல்லையும் அகன் கையாண்டுள்ளார். அதன் பொருள் யாது?
- புலவர். ந. ஞானசேகரன், திருலோக்கி.

இளைஞருக்குப் பெண்பாலாக இளையார், இளையவர் என்ற சொற்கள் இலக்கியங்களில் ஆளப்படுகின்றன. இளைஞையர் என்பதும் மரபில்லை. இளைஞன் என்பதற்குப் பெண்பாலாக இளைற் என்பது மரபில்லை. 'இளையள் (முளைவாள் எயிற்றள்)' என்று ஏற்கெனவே ஒரு பெண்பாற்சொல் உள்ளது. எனவே இளைஞனுக்குப் பெண்பாலாக வேறுசொல் உருவாக்க வேண்டியதில்லை. உரற்றினேன் என்பதன் பொருள் முழங்கினேன் என்பது.- இரா. தி.

7. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

"இந்தக் கவியில் "துப்பு" என்ற சொல் ஐந்து இடங்களில் வருகின்றது. அறிவிற்குப் புதிராக இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய உண்மை விளங்கும்போது துப்புத் துலங்கி விட்டது" என்று கூறுகிறோம். வாயிலிருந்து ஏதேனும் ஒன்றை வெளியேற்றும்போது அதைத் துப்புதல் என்று சொல்கிறோம். இங்கு வரும் "துப்பு" என்ற சொல்லுக்குப் பொருள் வேறு, "துய்ப்பு என்ற சொல் சுருங்கி துப்பு" எனப்படுகின்றது. ஒரு பொருளோடு அல்லது சொல்லோடு ஒரு உயிர் தொடர்பு கொண்டு இன்புறும் நிலையைத் துய்த்தல் என்று கூறுகிறோம். துய்ப்பவர்கட்குத் துய்ப்பு ஆகிய துய்ப்பை ஆக்கித் தருவதோடுன்றி துய்ப்பவர்கட்குந்தானே நேர் துய்ப்பு ஆகவும் நீர் பயன்படுகிறது என்று கூறுகிறது இக் குறள்" என்று தத்துவஞானி வேதாத்திரி மகரி´ தம் முடைய "திருக்குறள் உட்பொருள் விளக்கம்" என்ற நூலில் கூறியுள்ளார். இது பற்றித் தங்கள் கருத்தை அருள்கூர்ந்து எழுதவும்.
- புலவர் மு. முனிசாமி, வேலூர்-9.

துப்பு என்னும் சொல்லை வள்ளுவர் உணவு (12), பகைமை (1165), பற்றுக்கோடு (106), வலிமை (862) என்ற பொருள்களில் ஆள்கின்றார். துய்த்தல் (377) என்ற சொல்லை நுகர்தல் என்ற பொருளில் ஆள்கின்றார். எனினும் நுகரப்படுவன என்ற பொருளில் துப்பரவு என்ற சொல்லை 263, 378, 1050 ஆகிய குறட்பாக்களில் ஆள்கின்றார். எனவே துய்ப்பு என்பது மருவித்துப்பு ஆனது என்று திரு. வேதாத்திரி அவர்கள் கருதுவதற்குக் காரணம் உள்ளது. "துப்பார்க்கு (12) என்ற குறட்கருத்தாக அவர்கள் கூறுவது பரிமேலழகரை ஒட்டியே உள்ளது. நானும் அதை உடன்படுகிறேன். உங்களுக்கு வேறுகருத்து இருந்தால் எழுதுமாறு வேண்டுகிறேன்.- இரா. தி.

8. அ) விழுமிய தென்றின் றுலகுறை மேலோர் விளம்பு மொழிக்கு', என்று ஆறு சீர் மண்டிலம் எழுதும் மரபு இல்லை; என்று தாங்கள் தெளிதமிழ் க ஆம் பக்கத்தில் கூறியுள்ளீர்கள். மரபு என்பது நாம் ஏற்படுத்துவது தானே!?

அறு சீர் மண்டிலம் மரபு இல்லை என்றாலும், செய்யுளில் சிறந்த பொருள்தந்து; செய்யுட்கும், மொழிக்கும் மாறுபாடின்று அமைந்த பாடலைப் புதியமரபாக-வரவாக ஏற்றுக்கொண்டால் என்ன?! தாங்கள் கூறியது போல மரபு இல்லை என்று சங்க இலக்கியச் செய்யுட்குப் பின்வந்தோர் "ஆசிரியப்பா"- மரபே மரபு என்று நினைத்திருந்தால்; விருத்தமும், சிந்துப்பாடலும், இசைப்பாடலும் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்யுள் வளர்ச்சி குன்றியிருக்கு மல்லவா?! ஆதலின், தாங்களும் மொழிக்கு மாறுபாடிலா வகையில் சிறப்பளிக்கும் மரபைத் தோற்றுவித்தால் என்ன?
- புலவர் அரு. அழகரசன்.

மரபு என்பது நாம் ஏற்படுத்துவது என்பதை விட, உயர்ந்தோரால் உருவாவது என்பது பொருத்தமாக இருக்கும்.

"எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே, (நன்388)

என்பது மரபின் இலக்கணம். அறுசீர் மண்டிலத்தில் ஓரடியின் ஒரு சீரை மட்டும் காய்ச்சீராகவும் மற்ற ஐந்தையும் மாச்சீராகவும் கொண்டு எழுதினாலும் அறுசீர் மண்டிலந்தான். இப்படி 6மு6 = 36 வகைகள் உண்டாக்கலாம். எனினும் இன்று வழக்கத்தில் உள்ள 4 வகைக்குமேல் யாரும் எழுதுவதில்லை. காரணம்? அதுதான் மரபு. பல்லாண்டுகளாகப் பற்பலவகை அறுசீர் மண்டிலங்களைப் பலரும் எழுதிப்பார்த்து, சிறந்த ஓசையமைப்புடைய இந்நால் வகைகளையே பலரும் எழுதிவருகின்றனர். அதுபோல் உயர்ந்தோர்கள் ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாக நிலைத்து வருவதே மரபாக ஏற்றுக்கொள்ளப்படும். தொல்காப்பியர் காலக் கலிப்பா, பரிபாடல் வழக்குக் குறைந்து அகத்திணைப்பாடல்கள் ஆசிரியப்பா, வெண்பா, ஆசிரியமண்டிலம், சந்தப்பா, வண்ணப்பா, சிந்துப்பா என யாப்புவகை மாற்றங்கள் உருவானதும் இவ்வாறே. மரபு என்பது யாரோ சிலர் தோற்றுவிப்பதுமன்று யாரே சிலர் ஏற்றுக்கொள்வதுமன்று.- இரா. தி.

9. அ) விருத்தப்பாக்களுக்குச் சீர் அமைப்பு முன்பு உள்ளதை மட்டும் தொடர்வதுதான் சிறப்பா? அல்லது புதிய சீர்அமைப்பில் எழுதலாமா?
காட்டு : மா விளம் காய் (அறுசீர்) இதுபோல் மற்றுமுள

ஆ) விளம் மா விளம் மா
விளம் காய்

இந்த அமைப்பில் ஏதேனும் பாடல் உண்டா?

இ) கலம்பகத்தின் உறுப்புகள், உறுப்புகளின் இலக்கணம், போன்ற முக்கிய விதிகள் எவ்வெவ்வுறுப்புகளில் என்னென்ன செய்திகள் கூறவேண்டும்? விளக்க வேண்டுகிறேன்.
- பாவலர் மா. வரதராசன், சென்னை.

அ) சந்தமற்ற நாற்சீர், அறுசீர், எழுசீர், எண்சீர் மண்டிலங்களாகப் (விருத்தங்களாக) பாவலர் பண்ணையில் எடுத்துக்காட்டியுள்e வகைகள் மட்டுமே நம்முன்னோர்களால் பெரும்பாலும் எழுதப்பட்டு வருகின்றன. ஒருவர் தாம் விரும்பியபடி சீர்களை அமைத்து எழுதும் மண்டிலவகையை முன்னோர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆ) விளம் மா விளம் மா விளம் காய் என்ற அமைப்பில் அறுசீர் மண்டிலம் எழுதுவதில்லை.

இ) ஒருபோகும், வெண்பாவும், கலித்துறையும் முன்கூறப்பெற்று, புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம் , கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டு உறுப்பகளுடன் மடக்கு, மருட்பா, அகவல், கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியமண்டிலம், கலிமண்டிலம், கலித்தாழிசை, வஞ்சிமண்டிலம், வஞ்சித்துறை, வெண்டுறை ஆகிய பாவகைகளால், இடையிடையே வெண்பா, கலித்துறை விரவ, அந்தாதித் தொடையால் பாடப்படுவது கலம்பகமாகும். (இலக்கண விளக்கப் பாட்டியல் 51) மற்ற விரிவான இலக்கணங்களைப் பாட்டியல் நூல்களிற் பார்த்தறிக.- இரா. தி.