
|
கருத்து மேடை
புலவர் வி. திருவேங்கடம், செல்லான்நகர்.
சென்ற தெளிதமிழ் 25ஆம் பக்கத்திறுதியில் தாங்கள் தந்துள்ள விடையில், குறில் செறியா லள எனத் தொடங்கும் 229ஆம் நன். நூற்பாவின் இறுதியில் உள்ள 'பிற' என்ற மிகையால் நிலைமொழி உயர்திணைப் பெயராயின் வேற்றுமையிலும் வருமொழித்தகரம் திரிந்தவிடத்து (நிலை மொழியீற்று) லகரம் கெடும் எனப் பதில் தந்திருந்தால் சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன். லகர ளகர யீறு களுக்கு ஆறுமுக நாவலர் தரும் காட்டுகள் : தோன்றறாள், வேடோள். "வருமொழி முதலில் உள்ள 'தி' - 'றி' யாகத்திரிந்தபின், நிலைமொழி ஈற்றில் உள்ள 'ல்' கெட்டது" என்று விரிவாக விடைதராமல், 'ல்,தி' என்ற எழுத்துகள் 'றி' என்று திரிந்தன' என்று விடைதந்ததில் என்ன பிழை நேர்ந்துவிட்டது என்பது எனக்கு விளங்கவில்லை. ல் கெட்டதையும், தி திரிந்ததையும் 'திரிந்தன' என்று கூறியது பிழை என்று கருதியிருக்கமாட்டார் - தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய மூன்று விகாரங்களையும் திரிபு என்ற ஒன்றில் அடக்குதல் மரபே என்பது புலவர்க்குத் தெரிந்திருக்குமாதலின், சுருங்கிய 'தெளிதமிழ்' விரிந்த விளக்கத்துக்கு இடந்தராமையாலும் தெளிதமிழ் படிக்குநர் சுருங்கச்சொன்னாலே விளங்கிக் கொள்வர் என்பதனாலும் அவ்வாறு கூறப்பட்டது. இவ்வளவு தெளிந்த இலக்கணத் தேர்ச்சியுடைய புலவர்க்கு, "லகரளகரயீறு' என்று எப்படிப் பிழையாக எழுதமுடிந்தது என்பது வியப்பாக உள்ளது! ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.
வெண்மை + அணுக்கள் = வெண்ணணுக்கள் வெள்ளை + அணுக்கள் = வெள்ளணுக்கள் 'என்றும்', வெள்ளையணுக்கள் என்றும் எழுதலாம் என்பது என் கருத்து. நல், வல், வெள், உள் என்னும் பண்படிகள் பகுதிகளாய் நிற்க அவற்றுடன் மை என்னும் பகுதிப்பொருள் விகுதி புணர்வதால் அவை முறையே நன்மை, வன்மை, வெண்மை, உண்மை என ஆகின்றன (லள மெலி மேவின் னண ஆகும்' - நன். 227) இவை வேறு சொற்களோடு புணர்கையில் 'ஈறுபோதல்' (நன்.136) என்றபடி மை கெட்டதும் மீண்டும் நல், வல், வெள், உள் என நிற்கின்றன. இதனை ஆறுமுக நாவலர் தம் நன்னூற் காண்டிகையுரையில், பகுபத முடிபு என்றும் பகுதியில், 'நல்லன் என்னும் குணப்பெயர்ப் பகுபதம், நன்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று' ஈறுபோதல் என்னும் விதியால் பகுதியீற்று மைகெட்டு 'நல்' என நின்று, 'தனிக்குறில் முன்னொற்று' என்னும் சூத்திரவிதியால் இரட்டித்து, லகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது என்று தெளிவாக்குவது காண்க. அதன்படி வெண்மை + அணுக்கள் = வெள்ளணுக்கள் என்றே வரும், வெண்ணணுக்கள் என்று வாராது. இது நாவலர் கருத்து. அதன்படிதான் வெள்ணுக்கள் - சரி என்று சென்ற தெளிதமிழ் 3ஆம் பக்கத்தின் அடியில் போடப்பட்டது. |