பட்டங்கள் தந்தால் வளருமோ
பைந்தமிழ்? பாராட்டிவான்
எட்டும் சிலைகள் எடுத்தால்
வளருமோ? ஏத்திமகிழ்
மட்டிகட் கீயும் பரிசால்
வளருமோ? மைந்தர்கட்குக்
கட்டாய மாக்கினால் அன்றோ
வளர்ந்திடும் கல்வியிலே?
இல்லாப் புலவர் பெயராலே
இன்றைக் கிருப்பவர்க்குச்
செல்வம் வழங்குவ தால்,மொழி
ஆயும் செயலதனைக்
கல்லார்க் களிப்பதால் வாழுமோ?
தாய்த்தமிழ்க் கல்விதனை
எல்லார்க்கும் ஈவதால் மட்டுமே
வாழும் இருந்தமிழே!
- இரா.தி