வினாதலும் விடுத்தலும்

1. அண்மைக்காலமாக ழு என்னும் எழுத்தை ழ என்ற எழுத்துப்போல் எழுதிவருகிறார்கள். இதனால் முழுக்கு என்பதை முழக்கு என்றும் விழுப்புரம் என்பதை விழப்புரம் என்றும் படிக்க நேரிடுகிறது. தமிழறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டுத்தான் இச்செயல் நடைபெற்றுவருகிறதா? தவறென்றால் தடுக்க வேண்டாமா?
-த. கருணைச்சாமி, தேனி.

எழுத்துகளுக்குக் கலைவண்ணத்தோடு வடிவம் தருகிறோம் என்று. ஒரே எழுத்துக்குப் பல வடிவங்கள் தரும் ஓவியர்கள் பலர் இருக்கிறார்கள். கி. கி போன்ற வேறுபாடுகள் இப்படி உண்டானவைதாம். எழுத்துவடிவம் பற்றித் தமிழறிஞர்களிடம் யார் கேட்கிறார்கள்? நான் எழுதச்சொன்ன பெயர்ப்பலகை யிலேயே தொடக்கப் பள்ளி என்பதில் க்க என்ற இரண்டு எழுத்துகளையும் பாதிப்பாதியாக வெட்டி ஒட்டி ஓரெழுத்தாகப் போட்டு எழுதிக்கொடுத்தார்கள் யார் உங்களை இப்படி எழுதச்சொன்னார்கள்? என்று கேட்டதற்கு இரண்டு எழுத்தைப் போட இடம் இல்லை. அதனால் நான்தான் இப்படி எழுதினேன் என்றார்! தமிழில் யார் என்ன செய்தாலும்தான் கேள்வி முறை இல்லையே.

2. பாவலர் சுரதாவின் தேன்மழை நூலைப் படித்து வருகையில் நெஞ்சில் நிறுத்துங்கள் (பக். 251 பதிப்பு 1965) என்ற தலைப்பில் ஐந்து எண்சீர் மண்டிலங்கள் காணப்படுகின்றன. எனக்குத் தெரிந்தவரை அத்தகைய எண்சீர் மண்டில வகை இல்லை. அமைப்பு எண்சீர் மண்டிலம்போலத் தோன்றினாலும், ஓசை அவ்வாறில்லை. மேலும் அப்பாக்களை ஆசிரிய மண்டிலத்திற் சேர்ப்பதைக் காட்டிலும் ஆசிரியப்பாவாகக் கருதலாம் என்று எண்ணுகிறேன். அதனை ஆய்ந்து வெயியிட வேண்டுகிறேன்.
-புலவர். செயராமன், கள்ளக்குறிச்சி

நீங்கள் குறிப்பிடும் பாடல்

புத்தி என்பது நித்திரை வடமொழி
அறிவென் பதுவே அமுதத் தமிழ்மொழி
உத்தர வென்பதோ ஒட்டாதார் உதட்டொலி
கட்டளை என்பதோ கனிந்த தமிழ்மொழி
சித்திரம் என்பது தீப்பொறி வடமொழி
ஓவியம் என்பதே ஓங்குபுகழ்த் தமிழ்மொழி
நித்திரை என்பது நெருப்பு வடமொழி
உறக்கம் என்பதே உலவும் தமிழ்மொழி

இப்படி எண்சீர் விருத்தம்போல் எட்டெட்டு வரிகளாகப் பகுத்து 5 பாடல்கள் உள்ளன. இவ்வைந்திலும் எதுகைகள் சரியாக அமைந்துள்ளன என்றாலும் இதுபோல் ஓர் எண்சீர்மண்டிலவகை இல்லை. கண்டபடி அடிக்கு எண்சீர் அமைத்துவிட்டால் அது எண்சீர் மண்டிலம் ஆகாது என்பது விருத்தப்பாவியல் கூறும்! செய்தி.

இது நான்கடிப் பாடல்போல் ஒரே எதுகையில் அமைந்திருந்தாலும் சீரமைப் பில் எண்சீர்மண்டில வகை எதிலும் அடங்கவில்லை. அடியிற் பாதிகளில் ஓரடியில் கூட மோனையில்லை. மேலும் இது அகவலோசையே பெற்றுள்ளது. எனவே இதை நிலைமண்டில ஆசிரியப்பாவில் அடக்கலாம். வடசொற்களுக்குத் தமிழ் கூறும் இவரே மதுரம், நிச்சயம், சத்தம், வார்த்தை முதலிய வடசொற்களைத் தமிழாகப் பயன்படுத்துகிறார். இந்நூலில் வேறிடங்களில் சந்த, வண்ணப் பாடல்கள் வருகின்றன. அவையும் இலக்கணத்துக்கு அடங்க வில்லை. சிலப்பதிகாரத்துக் கானல்வரியில் திரைவிரி தருதுறையே என்ற சந்தம் என்று போட்டு எழுதியுள்ள சந்தப்பாடலில் குளிர்ந்திடுமோ, வளைத்தனை யோ, வந்தனமோ என்ற சொற்களைப் பெய்திருக்கிறார் இது சந்தப்பிழை.

வண்ணம் என்று போட்டு தானச் சந்தத்துக்கு ஆவேசம் என்ற சொல்லைப் பெய்துள்ளார், இது தானான என்ற சந்தம். தந்தன என்ற சந்தத்துக்கு முல்லையில் என்ற சொல்லைப் போட்டிருக்கிறார். இது தய்யன என்ற சந்தம். எனவே பாவலர் சுரதா மேற்கண்ட இலக்கணங்களைப் பயின்றிருக்கவில்லை என்று தோன்றுகிறது.

3. கீழ்க்காணும் ஐயங்களுக்கு விளக்கம் அளித்து உதவ வேண்டுகின்றேன்.

அ. கிருட்டிணன், கிருட்டினன் இரண்டில் எது சரியானது?

ஆ. அவ்விலக்கியம், அவ் இலக்கியம் இரண்டும் சரிதாமா?
-மகிழன், விழுப்புரம்

அ. க்ருஷ்ண என்ற சமற்கிருதச்சொல் தமிழில் கிருட்டினன். கிருட்டிணன் என்ற இரு வடிவங்களிலும் வழங்குகிறது. கிருட்டினபக்கம் என்ற சொல் கிருட்டிணபக்கம் என்று இருவகை ணகரமும் இட்டு எழுதப் படுகிறது. ன என்ற ஒலி சமற்கிருதத்தில் இல்லை. அது தமிழுக்கே உரிய சிறப்பெழுத் தாகலின் தமிழில் வந்து வழங்கும் வடசொற்களில் ணகரம் என்பதன் இடத்தில் னகரம் இடுவதே சிறப்பு என்று சிலர் கருதியிருக்கலாம். சிலப்பதிகாரம். கட்டுரைகாதை 133 ஆம் அடியில் வரும் பேரிருட்பக்கம் என்பதற்கு அரும்பத வுரையாசிரியர் கிருட்டினபக்கம் என்றே உரை கூறுகிறார். திருமுருகாற்றுப் படை 129 ஆம் அடியின் உரையில் நச்சினார்க்கினியர் க்ருஷ்ணாஜினம் (கருப்பு மானின் தோல்) என்பதைக் கிருட்டினாசினம் என்று இருசுழி நகரத் துடன்தான் குறிப்பிடுகிறார். இருசுழி னகரம் இடுவதே இலக்கியவழக்கு.

ஆ. அவ்விலக்கியம் என்பதை 1) அ+இலக்கியம் என்றும் 2) அவ்+இலக்கியம் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1) அ+இலக்கியம் என்பதில் அ சுட்டிடைச்சொல்லாதலின், இவை புணர்ந்து வரும் அவ்விலக்கியம் என்பது இடைச்சொல்தொடர். இது அந்த இலக்கியம் என்று பொருள்தரும். இவ்வகையில் சொற்கள் எகரவினா' (நன்.163) என்ற விதிப்படிப் புணரும்.

2) அவ்+இலக்கியம் என்பது அவை இலக்கியங்கள் என்று பொருள்படும். இதில் அவ் என்பது அஃறிணைப் பன்மைச்சுட்டுப்பெயர். எனவே இது எழுவாய்த்தொடர். இவ்வகையில் சொற்கள் தனிக்குறில்முன்' (நன் 205) என்ற விதிப்படிப் புணரும்

மண்ணகம் என்ற தொடரை மண் அகம் என்று இக்காலத்தில் பிரித்து எழுதுவதுபோல், அவ்விலக்கியம் என்பதை அவ் இலக்கியம் என்று பிரித்து எழுதியாகக் கொள்ளலாம். இது அந்த இலக்கியம் என்று பொருள் தராது.

4. அ. கட்டடம், கட்டிடம் (Building) இரண்டு சொற்களையும் நூல்களில், இதழ்களில் காண்கிறேன் இவற்றில் எது சரி? அல்லது இரண்டும் சரியா?

ஆ. அறிக்கை, அறிவிக்கை-இரண்டும் வெவ்வேறு பொருளுடையனவா? ஒரே பொருளுடையனவா?
-ம. பாலன், கலிதீர்த்தாள்குப்பம்.

அ. கட்டடம் என்பதே சரி. இதுபற்றிய மற்ற விளக்கங்களை 17. 11. 2007 தெளிதமிழ் 24ஆம் பக்கம் காண்க.

ஆ. அறிக்கை, அறிவிக்கை, அறிவிப்பு என்ற சொற்கள் ஆங்கிலத்தில் உள்ள Notice, Notification, report என்ற சொற்களைப்போலச் சிறு சிறு வேறுபாட்டுடன் தமிழ் ஆட்சிச் சொற்களாக வழங்கப்படுகின்றன.

அறிக்கை என்பதை Notice க்குத் தமிழாகவும், அறிவிக்கை என்பதை Notification என்பதற்குத் தமிழாகவும் அரசு துறைகளில் வழங்குகிறார்கள். ஆய்வு செய்து தரும் அறிக்கை ஆங்கிலத்தில் Report என்று குறிக்கப் படுகிறது. இதழ்களில் ஒருவர் தம்கருத்தாகத் தெரிவிப்பதும் அறிக்கை (விட்டார்) என்றே சொல்லப் படுகிறது, இதிலிருந்து அரசு அதிகாரிகள் தருவன அறிவிக்கை (Notification) என்றும். மக்களுக்கு தெரிவிக்கப்படுவதும், ஒருவர் தம் கருத்தாக வெளியிடுவதும் அறிக்கை (Notice) என்றும், ஆய்வு செய்வோர் தம் கருத்தைக்கூறுவது, அல்லது ஒரு நிகழ்வு குறித்த செய்திகளைத் திரட்டுவோர் தருவது அறிக்கை அல்லது ஆய்வறிக்கை (report) என்றும் பெரும்பாலும் வழங்கப்படுகின்றன.

5. தெளிதமிழ்ச் சிலைத் திங்கள் இதழ் முகப்புப் பாக்களில் சிங்களத்தான் எனும் சொல்லைச் சிங்க-ளத்தான் என்றும் கடிந்துரைத்தார் என்பதைக் கடிந்து-ரைத்தார் என்றும் நடுங்கவில்லை என்பதை நடுங்க-வில்லை என்றும் சீர் பிரித்துத் திரு ம. இலெ. த அவர்கள் கையாண்டுள்ளதுபோல் பாக்கள் புனையலாமா? விளக்கம் தருக.
-புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி

புனையலாம். அப்பாடல்கள் காய்-காய்-மா-தேமா என்ற எண்சீர்மண்டில வகையைச் சேர்ந்தவை. எனவே அதன் இலக்கணத்துக் கேற்ப,

1. முறையின்மைக் குளம்பதைத்தார் கடிந்துரைத்தார் என்ற மூன்று தொடர்ச்சொற்களை,

முறையின்மைக்-குளம்பதைத்தார்-கடிந்து-ரைத்தார் என்று பிரித்தமைத்திருக்கிறார். இத்தொடர்களையே,

2. கடிந்துரைத்தார் முறையின்மைக் குளம்பதைத்தார் என்ற வரிசையில் அமைக்க விரும்பினால்,

கடிந்துரைத்தார்-முறையின்மைக்-குளம்ப-தைத்தார்

என்று பிரித்தமைத்திருப்பார். முதல் வகையில் கருவிளங்காய்ச்சீராக இருந்த உளம்பதைத்தார் என்பது இரண்டாம் வகையில் புளிமா, தேமா, என்று இரண்டு சீர்களாகிவிட்டன. கடிந்துரைத்தார் முறையின்மைக்கு என்ற இரண்டு காய்ச் சீர்களையும் ஈரசைச் சீர்களாகப் பிரிக்க நேர்ந்தால் கடிந்து-ரைத்தார் முறையின்-மைக்கு' என்று பிரித்து அமைக்கலாம். இது யாப்பிலக்கணத்தில் இயல்புதான்.

'வாழ்வார் என்ற சொல்லைத் தேமா என்ற ஒரே சீராக (வசையொழிய வாழ்வாரே) வாழ்வார் என்று பயன்படுத்திய திருவள்ளுவர் நிலமிசை-நீடுவாழ்- வார் என்று பிரித்து அமைத்து, வார் என்பதைத் தனிச்சீராகக் கொள்கிறார். யாப்புக்காகச் சொற்களை அசை, சீர்களாகப் பிரிப்பதில் 2 முறைகள் உண்டு. அவை 1. பொருள் நோக்கிய முறை 2. ஓசை நோக்கிய முறை என்பன.

அகரம் முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்று சொற்களைச் சிதைக்காமல் சீர்பிரிப்பது பொருள் நோக்கிய முறை. இது பழம் பாடல்களில் மிகுதியும் காணப்படும். இதுவே சிறந்தமுறை.

இன்று வருமோ நாளைக்கே வருமோ என்ற சொற்களைச் செப்பலோசைக் கேற்ப. இன்றுவரு-மோநாளைக்-கேவருமோ (அருட்பா) என்று பிரிப்பது ஓசை நோக்கிய முறை. இது பிற்காலப்பாடல்களில் மிகுதியாகக் காணப்படும். இந்த ஓசை நோக்கிய முறைக்கே வகையுளி என்று பெயர்.

வகையுளியிலும் அசை வகையுளி, சீர் வகையுளி என 2 வகை உண்டு. ஓடிவாராய் என்ற சீரைப் பொருள்நோக்கி முழுச்சொற்களாக அசை பிரித்தால் ஓ-டி-வா-ராய் என்று தான் பிரிக்கவேண்டும் அதனால் இது நேர்நேர்நேர்நேர் என்று நாலசைச்சீராகும். இதையே ஓ-டிவா-ராய் என்று சொற்களைச் சிதைத்து ஓசை நோக்கிப் பிரித்தால் நேர் நிரை நேர் என்று மூவசைச்சீராகும். இதுவே அசை வகையுளி. அசைவகையுளியிலும் பொருள் நோக்கியதே சிறந்தது.

வருவாள் காதற் கோதை என்ற சொற்களைச் செப்பலோசை வேண்டிச் சிதைத்து, வருவாள்கா-தற்கோதை என்று பிரிப்பது சீர்வகையுளி. (இதில் காதல் என்ற சொல் சிதைவது காண்க) பழம்பாடல்களில் இது மிகவும் அருகியே காணப்படும்.

தங்கப்பா பாடலில் உள்ள சிங்க-ளத்தான் கடிந்து-ரைத்தார் என்பன ஓசை நோக்கிய சீர் வகையுளி. நடுங்க-வில்லை என்பது பொருள் நோக்கிய சீர்வகையுளி. இரண்டுமே பிழையற்றவைதாம். செம்பியனாரின் பின்னட்டைப் பாடல் 4 இல் முட்டாள்பெட்-டியென்றிதற்கோர் என்று வரும் காய்ச்சீர்கள் ஓசை நோக்கிய வகையுளியில் அடங்கும். இதுவே பொருள் நோக்கிய வகையுளியாய் இருந்தால், முதற்சீர் முட்-டாள்-பெட்-டி என்று இதில் வரக்கூடாத நாலசைச் சீராகிவிடும்.

6. பின்வரும் பாடல் எந்த நூலில் உள்ளது?
அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்துளே பேதா பேதம் வஞ்சம்பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாய் ஆகில், செய்தவம் வேறொன் றுண்டோ?
உனக்கிது உறுதி யான உபதேசம் ஆகுந் தானே!

-செல்வி க. தமிழ்வாணி, அறியலூர்

எந்த நூலில் உள்ளதென்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பாடலை விரும்பித் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளைப் பொருளர் திரு தி. ப. சாந்தசீலன் தன் இல்லச் சுவரிலும் பிற விடங்களிலும் எழுதி வைத் திருக்கிறார். இது யார் பாட்டு என்று அவர்க்கும் தெரியவில்லை. என் நண்பர் பிறர்க்கும் தெரியவில்லை. அனைத்துயிர் ஒன்று, பேதாபேதம், உபதேசம் ஆகிய சொல்லாட்சிகள் பிற்காலத்தன. உனக்கிது உறுதியான என்பது போன்ற புணர்ச்சிகள் பழங்கால இலக்கியங்களில் காணமுடியாதவை. எனவே இது பிற்காலப் பாட்டு என்று தோன்றுகின்றது. இதைக் கண்ணுறும் அன்பர்களுக்கு இவ்வினாவிற்கு விடை தெரிந்தால் அன்புகூர்ந்து தெரியப்படுத்துங்கள். நாமும் தெரிந்து கொள்வோம்.

7. தமிழ்நாடு என்பது ஒரு பெயராக நின்று, அதனுடன் அரசு, கழகம், ஆணையம் எனச் சேரும்போது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு தேர்வாணையம் என வரலாம் என்று கூறுகிறார்கள். இது பற்றித் தெளிதமிழின் கருத்தை அறிய விரும்புகிறேன்.
-தழலெழில், துமாவன்பன், விழுப்புரம்.

இடச்சிறப்புப்பெயர்களுக்குமுன் பெயர்ச்சொற்கள் புணரும்போது நெடிற்றொடர்க் குற்றுகரத்தின் ஒற்று. வேற்றுமைப் புணர்ச்சியில் இரட்டவேண்டிய தில்லை என்று அறிஞர் சிலர் கருதுவதாகத் தெரிகிறது. அப்படிச் செய்தால், ஒய்மானாட்டு நல்லியக்கோடன், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், கோனாட்டு எறிச்சலூர், சோணாட்டு முகையலுர், முக்காவனாட்டு ஆமூர் மல்லன் முதலிய சங்க இலக்கியவழக்குகளுக்கும், மாங் காட்டு மறையோன் என்ற சிலப்பதிகார வழக்குக்கும். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், ஆலங்காட்டு அடிகளாரே (அப்பர் தேவாரம்) முதலிய தேவாரகால வழக்கு களுக்கும், பாண்டி நாட்டுப் பழம்பதிகள், ஆர்க்காட்டு நாவாபு முதலிய இக்கால வழக்குகளுக்கும் முரணாக இருக்கும். மேலும் வேற்றுமை உருபுகள் வெளிப்பட வரும்போது ஒற்றிரட்டாமல், தமிழ் நாடுக்கு முதலமைச்சர், தமிழ் நாடைச் சுற்றிப்பார், கூறை நாடுக்குப் போனேன், தமிழ்நாடினது எல்லை, கூனிமேடில் குடியிருக்கிறேன் என்றெல்லாம் பேசுவது மக்கள் வழக்கிலும் இல்லை என்பதால் அந்த அறிஞர் பெருமக்களின் இந்தக் கருத்து ஆராயத் தக்கது என்பது தெளிதமிழின் கருத்து.

8. பொறுத்தவரை என்பது ஆங்கிலத்தொடர்பால் நம்மிடம் ஏற்பட்ட வழக்கே. அதையும் பொருத்தவரை எனச் சிலர் பிழையாக எழுதுகின்றனர் என்று 8.06.07 நாளிட்ட தங்கள் மடலில் குறிப்பிட்டிருந்தீர்கள். பொருத்தவரை என்ற சொல் எவ்வாறு பிழையாகும் என்று எனக்குப் புரியவில்லை.
-கி. இளங்கோ, சென்னை-34.

பொறுத்தவரையில், பொறுத்த அளவில் என்று பொறுத்த என்ற எச்சம், வரை, அளவு என்ற பெயர்களைக்கொண்டு முடிவதால் பெயரெச்சமாகும். ஆனால் பொருத்த என்ற எச்சம் பொருத்தச்சொன்னான் பொருத்தவேண்டினான் என்று வினையைக் கொண்டுதான் முடியும். வரை அளவு என்ற பெயர்களைக் கொண்டு முடியும்படி எழுத விரும்பினால் அதைப் பொருத்திய என்று பெயரெச்சமாக்கித்தான் எழுத முடியும். அப்படி என்னைப் பொருத்திய வரையில். என்னைப் பொருத்தி அளவில் என்று எழுதினால் பொருள் மாறிவிடும். எனவே As far I am concerned என்பதற்கு என்னைப் பொறுத்தவரையில் என்று எழுதுவதே பொருத்தமாகும்,