
|
திருவள்ளுவர் படித்த கல்லூரி
பேராசிரியர் இரா. மதிவாணன்(தொடர்ச்சி) தமிழ் நாட்டில் கட்டாயக் கல்வியைச் செயற்படுத்துவதற்காகவே பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்று" என ஆணையிட்டான். எவ்வளவு செலவானாலும் சரி, மேன்மேலும் படித்து முன்னேறு என்றான். கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் பல்லவர் காலத்தில் சமற்கிருதத்துக்கு மட்டும் பற்பல கல்லூரிகள் நிறுவப்பட்டன. தமிழ்க்கல்விக்குச் சிறிதும் ஊக்கம் தரப்படவில்லை. ஒரே ஒரு தமிழ்க் கல்லூரியைக்கூடப் பல்லவர்களோ, சோழர்களோ உருவாக்கவில்லை. வெள்ளையர் காலம் வரை தமிழ்க்கல்விக்கு எவரும் துணை நிற்கவில்லை. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஆதிசங்கரர் இந்தியா முழுவதும் சமற்கிருதப் படிப்புக்கு வழிவகை செய்தார். இந்திய நாட்டுக்குரிய தாய் மொழிகளில் கல்வி பயில ஆதிசங்கரர் எள்ளளவும் முயற்சி செய்யவில்லை. மற்றச் சாதியினராகிய உள்நாட்டு மக்கள் படித்து முன்னேறக்கூடாது என்னும் ஆரியக்கொள்கை, இராமாயணக் காலம் முதல் அப்பன் தொழிலை மகன் கற்கவேண்டும் என்பதற் காகக் குலக்கல்வி கொண்டு வந்த இராச கோபாலச்சாரியார் காலம் வரை நீடித்திருப்பதை எவரும் எளிதாக உணரலாம். விசயகாந்தனார் இந்தத் தமிழகம் முன்னேற வேண்டும் என நினைப்பவர். இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கல்வியறிவு பறிக்கப்பட்ட நிலையில் வறுமை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வரத்துடிக்கும் கோடிக்கணக்கான ஏழைகளின் சார்பில் அவர்களுடைய ஏற்றத்துக்காகக் குரல் கொடுக்கக் கடமைப்பட்டவர். தமிழ்மொழி பண்பாடு வரலாறு ஆகியவற்றைக் கவனிக்காத அரசியல் கட்சிகளால் நாட்டுக்கு நிலையான முன்னேற்றம் ஏற்படாது. சமற்கிருதத்தை வளர்த்துக்கொண்டதால் மந்தச் சாதியினர் உயர்ந்தவராக அறிவித்துக் கொண்டார்கள். ஒரே ஒரு தாசுமகால் முகமதியப் பண்பாட்டை உலகறியச் செய்துவிட்டது. சீனச்சுவர் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. கடவுள் வழிபாடு என்பது தனி மனிதனின் உரிமை. அந்த உரிமை பொது நலனுக்குக் கேடாக இருந்தால் அரசியல் தலைவர்கள் கண்டிக்க வேண்டும். அதனை மதத்தில் தலையிடுவதாகவோ மதநம்பிக்கையைப் புண்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது. சககமனம் என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் வடநாட்டில் இருந்தது. அந்த மாற்ற முடியாத நம்பிக்கையை இராசாராம் மோகன்ராய் அகற்றவில்லையா? இது விசயகாந்தனாருக்குத் தெரியாத செய்தியன்று. இராமன் வாழ்ந்த காலத்தில் இலங்கையும் தமிழ்நாடும் ஒரே நிலமாக இணைந்திருந்தது. அங்குக் கடலே இல்லை. கி. மு. 2387 இல் ஏற்பட்ட கடல் கோளின் போது இலங்கையும் இந்தியாவும் கடலால் பிரிக்கப்பட்டன என்று டென்னட்டு என்பவர் இலங்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டிருக்கிறார். கடலே இல்லை பாலம் எப்படி வந்தது? இராமர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடலே இல்லை. இராமர் எப்படிப் பாலம் கட்டியிருக்க முடியும்? வால்மீகி குறிப்பிடும் இலங்கை என்பது நில நடுக்கோட்டுக்கு அருகில், அதாவது குமரி முனைக்குத் தெற்கேயுள்ள தியாகோ கார்சிகா என்னும் சூரியத்தீவுப்பகுதியைச் சார்ந்தது தான் என அறிஞர் பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர். வால்மீகியும் 100 யோசனை (500 மைல்) தொலைவில் இலங்கை இருந்ததாகச் சொல்கிறார். இன்றைய இலங்கை வெறும் 30 மைல் தொலைவில் உள்ளது. குமரிக்குத் தெற்கே கடல் கொண்ட மகேந்திர மலையிலிருந்து வான்வழியாக கடலைத்தாவிச் சென்றான் என்றே இராமாயணம் கூறுகிறது. வரலாற்றை மறைத்துப் புராணம் எழுதியவர் களால் ஏற்பட்ட குழப்பத்தையும் தீங்குகளையும் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழன் விட்டுக்கொடுத்துக் கெட்டுப்போனவன் நேற்றைய வரலாற்றைப் படிக்காமல் நாளைய வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ள முடியாது. ஆரிய இனம் பிழைக்க வந்த இடத்தில் உழைக்காமல் உயர்ந்து வாழத் திட்டம் தீட்டி வெற்றி பெற்று விட்டது. தன்னுடைய மொழி பண்பாடு ஆகியவற்றை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றவும் தெரிந்து கொண்டது. எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துக் கெட்டுப் போனவன் தமிழன். இந்தியாவில் எல்லா மாநில மொழி யினரும் ஏமாந்துபோனபோது இவனும் ஏமாந்து போனான். தம்மைத் தாழ்த்துபவர்களை உயர்த்திப் பேசும் பேதையாகிவிட்டான். இன்று அரசியல் பேசுபவர்கள் இருக்கிறார்கள். சமூகச் சீர்திருத்தம் தொடர்பாகப் பேசுபவர்கள் இல்லை. இந்திய அளவில் சமூக சீர்திருத்தம் பேசும் அரசியல் தலைவர்கள் உருவாகும் வரை இந்தியாவின் ஒற்றுமை ஒருமைப்பாடு முன்னேற்றம் ஆகியவற்றில் சீரான வளர்ச்சியைக் காணமுடியாது. முதலில் இம்மண்ணுக்கே உரிய மொழி பண்பாடுகளில் உறுதி வேண்டும். வடநாட்டுக் கதைக்காக நம் திருவள்ளுவரை நாமே போட்டிக்கு அழைக்கக் கூடாது. அரசியல் தலைவர்களே! சாதிக்கு ஒரு நீதி கூறும் சமற்கிருத நூல் கருத்துகளை எதிர்த்துப்பேசி எல்லோருக்கும் சமவுரிமை கிடைக்கச் செய்யுங்கள். கர்ணனைத் தேரோட்டியின் மகன் என இகழ்ந்த மகாபாரதச் சாதிவெறிக்குப் பாதுகாப்பு அளிக்கவே கண்ணன் பகவத்கீதையில் நானே நான்கு வருணங்களைப் (சாதிப்பிரிவுகளை) படைத்தேன் என்கிறான். இது சமவுரிமை வழங்கும் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று அரசியல் தலைவர்கள் ஏன் பேசுவதற்கு அஞ்சுகிறார்கள்? திருவள்ளுவர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என முழங்கினாரே அந்த முழக்கத்திற்கு ஊக்கம் தரும் அரசியல் தலைவர்களால் தான் இந்தியா ஒருமைப்பாட்டுக்குரிய பெருமை பெறும் திருவள்ளுவர் பெற்ற கல்வியறிவின் சிறப்பும் புலப்படும். ( முற்றும்) |