தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள்

நாளிதழ் நடவடிக்கைகள்: ஏற்கெனவே அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை மொத்தம்

 உரூ.
2,30,983
சென்ற திங்கள் வந்த நன்கொடை:
திரு க. துரையரசன், வேலாயுதம்பாளையம் 
200
ஆக மொத்தம்  
2,31,183

மேற்காணும் நன்கொடை, அழிந்துவரும் தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடுகளைக் காப்பாற்றும் நோக்குடன் நாளிதழ் நடத்துவதற்கானது என்பது அனைவரும் அறிந்ததே. நன்கொடை திரட்டல் தொடர்ந்து நடந்து வந்தாலும், இதுவரையில் திரண்டிருக்கும் தொகையைக்கொண்டு திட்டமிட்டுள்ள நாளிதழின் மாதிரியில் இணையத் திங்களிதழ் இதழ் ஒன்று தொடங்கி நடத்தி, உலகத்தமிழ் நெஞ்சங் களுடன் தொடர்பு கொள்வது என்றும், 30-12-2007அன்று கூடிய அறக்கட்டளைக் கூட்டம் முடிவு செய்தது. இணைய இதழின் ஆசிரியர் பொறுப்பைப் பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா அவர்களும், துணை ஆசிரியர் பொறுப்பைத் திரு நா. நந்திவர்மன், பேராசிரியர் தேவமைந்தன், முனைவர் மு. இளங்கோவன் ஆகியோரும் இசைந்துள்ளார்கள். இணையப்புலத்தின் முகவரி, இதழின் பெயர் முதலியன விரைவில் தெளிதமிழில் அறிவிக்கப்படும். உலகத் தமிழ் நெஞ்சங் களின் ஆதரவை அறக்கட்டளை வேண்டுகிறது.

அன்புகூர்ந்து நன்கொடைகளை வழக்கம்போல் தமிழ்வளர்ச்சி அறக்கட்டளை என்ற பெயருக்குப் பணவிடையாகவோ, கேட்புக் காசோலை யாகவோ, திரு தி. ப. சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்க முடையான்பட்டு, புதுச்சேரி - 605008 என்ற முகவரிக்கு அனுப்புக.

உயர்வழக்கு மன்றத்தில் தமிழ்-முனைவர் இரா. இராமசாமி அவர்களின் சீரிய முயற்சி: ஆட்சிமொழி பற்றிய 1963ஆம் ஆண்டு நடுவணரசு சட்டத்தின்படியும் அதன் தொடர்பாக 1976ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்டுள்ள விதிகளின்படியும், இந்தியைத் தொடர்புமொழியாக ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுடனும், இந்திய ஒன்றியப் பகுதிகளுடனும் நடுவணரசு. இந்தியிலோ ஆங்கிலத்திலோ தொடர்புகொண்டாலும், அச்செய்திகட்கு அந்த அந்த மாநிலமொழியில் மொழிபெயர்ப்பும் தருதல்வேண்டும் என உள்ளது.

ஆனால் இவற்றுக்கு முரணாக நடுவணரசு தமிழ்நாடு, தமிழ்பேசும் புதுவை ஒன்றியம் ஆகியவற்றுடன் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தொடர்பு கொண்டு தமிழ் மொழிபெயர்ப்பை விட்டுவிட்டது. மேற்குறித்த சட்டப்படித் தமிழ் மொழிபெயர்ப்புத் தருக என்று கேட்க, நடுவணரசால் ஏற்றுக்கொண்டபடி தமிழே அலுவல் மொழி, ஆங்கிலம் தொடர்புமொழி என இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டுக்கும், புதுவைக்கும் தமிழ் மொழிபெயர்ப்புத் தனக்கு வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்க உரிமை இருந்தும் இதுவரை கேட்கவில்லை.

மேலும் மேற்குறித்த சட்டத்தின்படியும் விதிகளின்படியும் உயர் வழக்கு மன்றத்திலும் இடம்பெறத் தமிழ்க்கு உரிமை உண்டு. தமிழக முதல்வர் வழக்கு மன்றத்தில் தமிழ்பயன்படவேண்டும் என்ற தமிழக முதல்வர் கோரிக்கை இச்சட்டத்தின்படி ஏற்றுக் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் நடுவணரசு இதனைப் புறந்தள்ளிவிட்டது. நடுவணரசின் இச்செயல் சட்டத்துக்கு முரணானது. எனவே நடுவணரசு தமிழை மறுக்கும் தன் போக்கை மாற்றிக்கொள்ளல் வேண்டும். தமிழக அரசும் புதுவை அரசும் நடுவணரசுடன் தமிழில் தொடர்புகொள்ளும் உரிமையை வற்புறுத்தி, மொழிபெயர்ப்பு வடிவத்தி லேனும் தமிழில் தொடர்பு கொள்ள வேண்டும். தமிழுக்கான உரிமையைக் கேட்டுப் பெறல்வேண்டும்.

இவ்வாறு முனைவர் இரா. இராமசாமி அவர்கள்(முகவரி: மனைஎண் 12, அலுவலர் குடியிருப்பு, விசயநகர் வடக்கு விரிவு, வேளச்சேரி, சென்னை-600 042) புதுவை அரசுக்கும், தமிழக அரசுக்கும் மடல்கள் விடுத்துள்ளார். அவர்தம் தமிழ் நெஞ்சத்தைப் பாராட்டுகின்றோம். அன்னாரின் சீரிய முயற்சி பயனளிக்கவேண்டும் என்று விழைகின்றோம்.

வேண்டுகை தவச்சாலைப் பணிக்குத் தமிழ்ப்பற்றுமை. ஓரளவு தமிழ்க் கல்வி, முழுதுறு ஒப்படைப்புடைய தொண்டர் இருவர் வேண்டியுளர். அவர்களின் நிகழ்காலத்தேவை, வருங்கால வைப்பு ஆகியவற்றைத் தவச் சாலை ஏற்கும். 30க்கு மேல் 50க்குட்பட்ட அகவையர் எனின் மிக நலம். விரும்புபவர் தம் தகுதி விளக்கத்துடன், திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர்-620101, திருச்சிராப்பள்ளி மாவட்டம். பேசி 0431-2685328 என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்க.

தன்முன்னேற்றப் பயிற்சி தனியார் மயமாதல், உலகமயமாதல்களில் தமிழனின் நிலை தாழ்வுற்றுக் கொண்டிருப்பதால் அவன் பிழைப்பதற்கான எளிய வழிவகைகளைச் சொல்லும் பயிற்சி வகுப்புகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் 13-1-2008 முதல் ஞாயிறுதோறும் நடத்துகிறார் அறிஞர் பா. இராமமூர்த்தி. இடம் 1/429, தென்பெருநெடுஞ்சாலை, வண்டலூர் வாயில், சென்னை -600048 (கண்ணன் திருமணமண்டபத்தின் பின்புறம்) ஆங்கிலத்தில் காலை 10 மணிக்கு. தமிழில் காலை 11.30க்கு. கட்டணம் ஒருவருக்கு உரூபா 100/- இயக்குநர் பா. இராமமூர்த்தி. 20 இருக்கைகள் மட்டுமே உள்ளன. முன்பதிவு கட்டாயம். பேசி 9841359717.

பயிற்சியாளராக விரும்பும் சீரிதழ் ஆசிரியர்கள் குழுவில் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். ஒரு தடவைக்கு உரூபா 500/- மதிப்பூதியம் வழங்கப்படும் என்று அறிஞர் பா. இராமமூர்த்தி அறிவிக்கிறார்.

தொல்காப்பியர் காலத்தை வரையறை செய்ய வேண்டுகோள் தொல்காப்பியர் காலம் குறித்துத் தமிழறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால், தமிழறிஞர்களையும், வரலாற்றிஞர்களையும் கொண்டு தமிழகப் பல்கலைக் கழகங்களும், செம்மொழி ஆய்வு மையமும், தமிழ் அமைப்புகளும் தொல்காப்பியர் காலத்தை ஆய்ந்து வரையறுக்க வேண்டும் என்று பெங்களூர்த் தமிழ்ச்சங்கம் கேட்டுக் கொள்ளுகிறது.