பொதிகைமலை யுச்சியிலே பிறந்துவந்தேன் அம்மே-நான்
பிறந்து வந்தேன் அம்மே-அந்தப்
புகழ்மதுரை நகரினிலே வளர்ந்து வந்தேன் அம்மே-நான்
வளர்ந்து வந்தேன் அம்மே
வள்ளுவனைப் பாடவைத்துக் குறள்வடிவம் கொண்டேன்-அதை
வாழ்க்கையிலே கடைப்பிடிப்பார் வாக்கினிலே நின்றேன்
கொள்ளை இன்பம் அள்ளித்தரும் கம்பனது பாட்டில்-நான்
குடியிருந்து வருகின்றேன் இன்றுவரை நாட்டில்
இளங்கோவின் சிலம்பினிலே முத்தமிழாய் நின்றே-நான்
இசைக்கூத்தின் இலக்கியமாய் இலங்குகிறேன் அம்மே
கதைப்பாடல் வடிவங்களில் நானிருப்பேன் அம்மே-ஒரு
கன்னித்தமிழ் மொழியென்றெனைக் கழறுவார்கள் அம்மே
அழகிஎன்றே மொழிகளில்நான் பெயரெடுத்தேன் அம்மே-பல
அறிஞர்களை உருவாக்கி யகமகிழ்ந்தேன் அம்மே
பழம்பெருமை பேசியொன்றும் ஆகப்போவ தில்லை-இன்று
பழகுதமிழ் பெரும்பாலும் என்வடிவாய் இல்லை
இலக்கணத்தைப் புறக்கணிப்பா ரெழுதுகின்றா ரின்றே-எனின்
எங்கிருந்து வாழுவது நானதிலே நின்றே
என்புகழை நாள்தோறும் போக்கிவரு கின்றார்-நம்
இனப்பகைவர் எனைச்சூழ்ந்தே தாக்கிவரு கின்றார்
அன்னைத்தமிழ் என்றென்னை அழைக்கிறீர்கள் ஆனால்-நீர்
அழிந்துவரும் என்நிலையை அறியவில்லை ஏனோ?
இன்றிருக்கும் என்நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்-இனி
இழிநிலையில் நானிருந்தால் பழியுமக்கே யன்றோ?
பொதிகைக்குற வஞ்சிஎன்ற புனைபெயரோ டின்று-நான்
புறப்பட்டேன் நாடுநகர் சுற்றிப்பார்க்க வென்றே