ஆற்றலுள்ள ஊடகங்கள் அனைத்தி னுள்ளும்
அனைவரையும் கவர்ந்திந்தக் குறுந்தி ரைதான்
சாற்றுகின்ற கருத்தனைத்தும் அவ்வப் போது
தவறாமல் மக்களிடம் கொண்டு சேர்க்கும்
நாற்றமடிக் கின்றதிரைப் படங்க ளுக்கும்
நல்லதொரு விளம்பரமே குறுந்தி ரைதான்
வேற்றினத்தில் பண்பாட்டை விதைப்ப தற்கு
விடப்பட்ட இறையிலியே தமிழ்நி லந்தான்
விளைவிதனால் என்னவெனில் வயற்காட் டிற்கு
வேலைக்கே போகாமல் தொடர்பார்க் கின்றார்
தொலைக்காட்சி முன்னமர்ந்து தொடரைப் பார்க்கத்
தொடங்கிவிட்டால் பணிகளெல்லாம் முடங்கிப் போகும்
எலேகிளம்பு பள்ளிக்கு நேர மாச்சே
என்றெழும்பும் வரையிளையோர் எழவே மாட்டார்
இளந்தளிர்கள் தொலைக்காட்சி பார்த்துக் கெட்டோர்
எத்தனைபேர்? கணக்கெடுத்தால் தலையே சுற்றும்!
விழிவழியே இழிவதனைச் செலுத்தி உள்ளே
வீற்றிருக்கும் நற்பண்பை விரட்டு கின்றார்
மொழிநடையில் இழிநடையைப் புகுத்தும் மூடர்
மூக்கறுக்கப் படவேண்டும் கண்டிப் பாக!
கழிசடைகள் கதையெழுதிப் படம்பி டித்துக்
கழுத்தறுக்கும் கருவியிந்தக் குறுந்தி ரையால்
அழிந்துவரும் குமுகாய நிலைகண் டேங்கும்
அறிஞரது நிலையினைத்தான் மேலே கண்டோம்
அறிவியலில் மிகச்சிறந்த படைப்பாம் இந்த
அரியவண்ணத் தொலைக்காட்சித் தொழில்நுட் பத்தை
முறைதவறிப் பயன்படுத்தும் மூட ராலே
முட்டாள்பெட் டி யென்றிதற்குப் பெயரா யிற்று!
நிறைகோடி என்றாலும் குறைஒன் றாலே
நீர்த்துப்போய் விடும்என்பர் குறட்பே ராசான்
புறம்போக்காய் மாறிவிட்ட கலைபண் பாட்டைப்
புதுப்பிக்க வரவேண்டும் அறிஞ ரெல்லாம்.
-இரா. செம்பியன்
தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம்
மேட்டுப்பாளையம் சாலை, கொங்கம்பட்டு,
விழுப்புரம் மாவட்டம்-605105. பேசி 2699485