
|
பாவலர் பரிசுதிட்டம்
பாவலர் பரிசுதிட்டம்-36இல் பரிசு பெற்றவர்
பொறுத்தாற்ற வேண்டுகிறேன்
சென்ற இதழில் பாவலர் பரிசுதிட்டம் 36இல் பரிசுபெறும் பாடலாக அறிவிக் கப்பெற்ற ‘எழுபதாயிரம்’ என்ற பாடலில் நான்காமடியின் இரண்டாம் சீர் கூவிளத்துக்குப் பதில் கருவிளமாக இருந்த பிழை. இதழ் அச்சான பிறகே உணரப்பட்டது. அதை எனக்குணர்த்திய நண்பர்கட்கு நன்றி. அப்பாடலை இயற்றிய பாவலர் சி. பெருந்தேவனும் தவற்றை உணர்ந்து வருந்தி, 'எனது பாடல் பரிசு பெற்றது கண்டு மகிழ்ந்தேன். 'உலகத்தமிழர் அனைவரும் ஓரணியாக நின்று இலங்கை அரசை எதிர்க்க வேண்டும்' என்ற கருத்துத் தேர்வாளர்களைக் கவர்ந்திருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த பக்கத்தில் கருத்தூன்றுக பகுதியில், 'அடிதோறும் இரண்டாம் சீராகக் கூவிளம் மட்டுமே வரவேண்டும்' என்பதைக் கண்டதும், 'பளார்' என்று கன்னத்தில் அறைவதுபோல இருந்தது. என் உள்ளம் பட படத்தது. உடல் வியர்த்தது. இரண்டாம் இடத்தில் உள்ள பாவலரே பரிசுக் குரியவர்'. என்று மடல் எழுதினார். எனவே, சென்ற இதழில் வெளியான பாடல்களில், இரண்டாம் இடத்தைப் பெற்ற சிங்க ளச்சிறு நரிகளின் என்ற பாடலைப் படைத்த புலவர் மா. சு. மணி அவர்களுக்கு உரூபா 500 பரிசு வழங்கப் படுகிறது. நேர்ந்த தவறுகளுக்கு அன்புகூர்ந்து என்னைப் பொறுத்தாற்றுமாறு பாவலர்பெருமக்களை வேண்டுகிறேன். பாவலர் பரிசு திட்டம்-37
நான்கடிக் கலித்தாழிசை உரூபா 500 பரிசு பெறும் பாடல்: 1.சரியான வாழ்வு தமிழனுக்கு வேண்டின் வெளியீட்டுக்குத் தேர்வு பெற்ற பாடல்கள் (வரிசைப்படி) 2.இனமானம் இல்லா இழிதகைய ராகி 3.அலைபோலத் துள்ளும் அறிவாற்றல் கொண்டே 4.தாங்கும் செவிலித்தாய் தன்னன்னை ஆவாளோ? 5.பிறப்புரிமைக் காகப் பெரும்போர் புரியும் 6.முடிவாக வேண்டும் முயற்சியெலாம் என்றால் 7.புலியாக வாழ்ந்து புகழ்படைத்தார் அந்நாள் 8.தாய்மண்ணின் வீரம் தமிழ்க்குருதி காணதனை 9.பேராயக் கட்சிப் பெரியீரே வங்கம்போல் 10.வளமான நாடு வறுமையிலா மக்கள் 11.வல்லர சாகி வளம்பெறும்நம் நாடென்றே 12.பொய்யா மொழியார் புகல்வதுபோல் இங்குமழை 13.விலகென்று சொன்னாலும் விட்டிடுமோ வீம்பு? 14.மொழியாள வேண்டி முயலாமல் வீணே 15.ஒருவழியும் காணாமல் ஊமையராய் வாழும் 16.மழையளவாய்ப் பெய்தால் வயல்செழுமை யாகும் கருத்தூன்றுக
சென்ற பரிசுதிட்டத்தில் கொடுத்திருந்த என்ற பாடல் கலித்தாழிசை என்னும் பாவினத்தைச் சேர்ந்தது. அடியெனைத் தாகியும் ஒத்துவந் தளவினில் என்பது இதன் இலக்கணம். இதன் விரிவான இலக்கணத்தைப் பாவலர் பண்ணை 69ஆம் பக்கத்தில் காணலாம். 1. இறுதியடியின் இறுதியிரு சீர்களும். அதன் பாதியின் இறுதியிரு சீர்களும் மடக்காக (மீண்டும் அதே வடிவில் வருவனவாக) இருக்கவேண்டும். காட்டு: 'செவியென்ன செவியே, 'நாவென்ன நாவே', 'கண்ணென்ன கண்ணே' (ஆய்ச்சியர் குரவை), 'என்றுபந்த டித்துமே' (வாழ்த்துக்காதை) என்று வருவதைச் சிலப்பதிகாரக் கலித்தாழிசைகளிற் காணலாம். இப்படியின்றி, 'தலைகொய்வீர் இன்றே - முன்னிற்றல் நன்றே' என்றும், 'நாடோறும் வீழ்வர் - நாடோறும் வீழும்' என்றும் வேறுபட வருவன மடக்காகா. 2. கொடுத்திருந்த பாடல் வெண்டளையால் ஆனது. அடியின் இறுதிச் சீர்க்கும் அடுத்த அடியின் முதற்சீர்க்கும் வெண்டளை வேண்டும். சிலர் பாடல்களில் அவ்வாறில்லை. இறுதியடியில் முற்பாதியின் இறுதிச்சீர்க்கும், பிற்பாதியின் முதற்சீர்க்கும் வெண்டளை கட்டாயமில்லை. ஆனால் பலர் தளை பற்றியே கவலைப்படவில்லை. 3. சில பாடல்களில் 1. 3ஆம் சீர்களில் மோனையில்லை. 4. நான்காமடியின் முதற்சீர்க்கும் அதன் பாதியின் முதற்சீர்க்கும் மோனை வேண்டும். பல பாடல்களில் அவ்வாறில்லை. 5. சிலர் வெண்டளையில் தவறிய இடங்கள்: 'கண்டவர்க் குதவா, 'செல்லுகின்ற தடுமாற்றம், 'வெட்டி மற்றொட்டி', 'நாமும் தோய்ந்தன்பால்', 'யாவும் மாய்ந்தாலும்', 'வாழும் செந்தமிழ்', 'வாழ்க்கை வீழத்தான்'. 6. தமிழ், உமி என்பனவற்றிற்குப் பழி என்பது எதுகையாகாது. 7. புணர்ந்தால் சீர்சிதையும் இடங்கள் 'அலமந்து என்றைக்கும்', 'ஏது உயிர்'. 8. தொல்+இனம்=தொல்லினம். தொன்னினம் ஆகாது. 9. துமி=நீர்த்துளி. ஆகையால், 'துமியாக வேகும்' என்பது பொருத்தமில்லை. 10. 'அதியமானிற்கு' என்பது மரபில்லை. 11. 'வெண்கலச்சி லைகள்' என்பதுபோன்ற வகையுளிகள் விரும்பத்தகாதன. 12. விலக்கியிருக்கக்கூடிய அயற்சொற்கள்: வாக்கு (சொல்), சதிர் (நாட்டியம்), கணம் (நொடி), மூலம் (வேர்), இச்சை (விருப்பம்), பாதை (தடம்). பாவலர் பரிசுதிட்டம் - 38
இந்த இதழின் முகப்பில் 'சந்த யாப்பினை' என்றும், 'இன்று செந்தமிழ்' என்றும் தொடங்கும் இரண்டு பாடல்கள் உள்ளன. அவ்வகையில் இன்றைய பொருளமைய ஒரு பாடல் படைத்து, வரும் சுறவம் உ0 (3-2-2008)க்குள் விடுக்க. |