மனம் திறந்த மடல்கள்
மா. இராமமூர்த்தி, அதிகாரப்பட்டி

தமிழர்களிடம் இருந்த இனப்பற்றும் மொழிப்பற்றும் முனை மழுங்கிய வாளாய் என்றோ கிடப்பில் போடப்பட்டுவிட்டன. தமிழை முன்னிலைப் படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் இந்த ஆசிரியவுரையைப் படித்து எண்ணிப்பார்க்க வேண்டும். இப்பணி தொடர வாழ்த்துக்கள்.

புலவர் ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

பொறிஞர் அகன் அவர்கள் தம் பணி ஓய்வுத்தொகை பன்னிரண்டு இலக்கமும் தம் பனையூர் மக்களின் நிலைத்த மேம்மாட்டுக்கே பயன்படச் செய்ய வேண்டும் என்று விரும்பிச் செயல்படுவது வள்ளுவர் கூறிய ஒப்புரவுக்குச் சிறந்த எடுத்துக் காட்டு. அவருக்கு உளமார்ந்த பாராட்டுகள். பிறரும் அவரை ஓரளவாவது பின்பற்றினால் சிறப்பாயிருக்கும்.

17-11-07 இதழ்ப்பக்கம் 23- வாரும், வரவும் ஆகியவற்றிலுள்ள ரகரம் எழுத்துப்பேறு. விரித்தல் விகாரமன்று. விரித்தல் விகாரம் என்பது செய்யுளுக்கு உரிய ஒன்பது வகையான விகாரங்களில் ஒன்று. ஆறுவகைப் பகுபத உறுப்புகளில் இடம் பெறாமல் புதிதாக ஓரெழுத்து இடையில் வருமானால் அது எழுத்துப் பேறாகும்.

இது தங்கள் கருத்து. ஒன்பது செய்யுள் விகாரங்களையும் பகுபதவுறுப்புகள் பெறும் என்பது சங்கரநமச்சிவாயர், சிவஞானமுனிவர், ஆறுமுகநாவலர் முதலியோர் கருத்து (நன்.133) என்பதையும், 'வருகின்றனன் என்பதில், விரித்தல் என்னும் விதியால் ரகரவுகரம் விரிந்து முடிந்தது' என்று தம் நன்னூற் காண்டிகையுரையில் (பகுபத முடிபு பகுதியில்) ஆறுமுகநாவலர் கூறுவதையே நான் பின்பற்றுகிறேன் என்பதையும் அன்போடு கூறிக் கொள்ளுகிறேன்.-இரா. தி.

சு. இலம்போதரன்

பக்கங்களின் அடியில் வரும் இலக்கணக் குறிப்புகள் மிகவும் பயனுடையன. வாழ்க நும் தொண்டு.

புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி

இளமையில் வறுமையில் உழன்றுறைந்துங்கூட முதுமையில் பணத்தைத் துச்சமாக்கி, பொதுப்பணத்தையே சுருட்டிப் பெரும் புள்ளியாகும் இந்நாளில் பொது நலத்திற்காக முனைந்து பன்னிரண்டு இலக்கங்களைப் பிறந்த ஊர் சிறந்திட வழங்க நினைத்துள்ள பொறிஞர் அகனின் வள்ளற்றன்மையை எண்ணிப் பார்த்தால் உடம்பே புல்லரிக்கிறது.