சந்த யாப்பினைச் சற்றும் அறிகிலார்;
தண்ட பாணியார் வண்ணம் தெரிகிலார்;
சிந்து யாப்பினில் சீர்நிலை தேர்கிலார்;
செவ்வி சைக்காம் உருப்படி ஓர்கிலார்;
நந்த மிழ்க்குள் இசைத்தமி ழோடொரு
நாட கத்தமிழ் உண்மையும் காண்கிலார்;
இந்த வாறுகற் றோரெலாம் முத்தமிழ்
இயல்ப றிந்த புலமையர் ஆவரோ?
இன்று செந்தமிழ்க் கல்வியில் பல்கலை
ஈந்த னுப்பும் முனைவர்பட் டந்தனை
வென்று பெற்றமா ணாக்கர்கள் நாளையே
மேவு பேரா சிரியராய் ஆவர்காண்!
அன்ற வர்பயிற் றுந்தமிழ் முத்தமிழ்
ஆகு மோ?வீறு முற்றிடாக் காளையும்
நன்று பேறு முதிர்ந்திடாக் கன்னியும்
நல்ல சேய்களை நல்கிடல் ஒல்வதோ?
-இரா. திருமுருகன்