புதுவை அரசும் பாரதி விழாவும்

ஒரு தாயும் மகனும் வீட்டிலிருக்கின்றனர். தாய் மகனைப் பார்த்து வீட்டைப் பெருக்கித் தூய்மை செய்யுமாறு கூறுகின்றாள். கலங்களைத் துலக்கச் சொல்கிறாள். துணிகளைத் துவைக்கச் சொல்கிறாள். சமையலுக்குக் காய்கறி நறுக்கிக் கொடுக்கச் சொல்கின்றாள். மகனோ இவற்றில் ஒன்றைக் கூடச் செய்ய வில்லை. கண்டபடி ஊர்சுற்றித் திரிந்துகொண்டிருக்கின்றான்.

தாயின் பிறந்தநாள் வருகின்றது. தாய் சொன்னது எதையும் அவன் செய்யவில்லை என்றாலும். தாயின்பால் தனக்கு அன்பு இருப்பதாகக் காட்டிக்கொள்ள இது ஒரு வாய்ப்பு என்று நினைக்கின்றான். தாயின் நிழற்படம் ஒன்றுக்குப் புதிதாய்ச் சட்டம் போட்டுக்கொண்டு வருகின்றான். கடைத் தெருவிலிருந்து வண்ண வண்ணத் தாள்களையும் ஊதும் பை (balloon) களையும் வாங்கிவருகிறான். வீட்டின் உட்புறம் குப்பையும் தூசியும் மண்டிக் கிடந்தாலும் சாய்க்கடை நாற்றமெடுத்தாலும் எல்லாவற்றையும் திரைபோட்டு மறைக்கின்றான். வீட்டின் முன்புறத்தை மட்டும் தூய்மை செய்து ஒழுங்கு படுத்தி நிழற்பந்தலிட்டு, நறு நீர் தெளித்து மணப்புகை புகைத்து, அழகிய மேடை ஒன்றமைத்து அதன் நடுவில் தாயின் நிழற்படத்தைத் தொங்கவிடு கின்றான். தாயின் பிறந்த நாள் விழா என்று அழைப்பிதழ் அச்சிட்டு வழங்கி நண்பர்களை அழைத்துவந்து விருந்து நடத்துகின்றான். தாய்மையின் சிறப்புப் பற்றி அறிஞர்கள் சொற்பொழிவாற்று கின்றனர்.

தாய்க்குச் சரியான உணவு இல்லை. நல்ல உடை கூட இல்லை. தாயின் திருமணத்தின் பொழுது எடுத்த பழைய பட்டுப் புடவையை உடுத்தச் செய்து மேடையில் அமரவைக்கின்றான். தாய் கலங்கிய முகத்தோடும், இற்றுப் போன புடவையோடும் அமர்ந்திருக்கின்றார். தாய்க்கு உடல்நல மில்லை என்றும் அதனால்தான் வாடிய முகத்துடன் இருக்கிறார் என்றும். தாய் எளிமையானவர், சிறிதும் பகட்டை விரும்புவதில்லை, அதோடு பழைமையை மறக்க விரும்பவில்லை. அதனால்தான் பழைய புடவை அணிந்திருக்கிறார் என்றும் பெருமை தோன்றக் கூறுகின்றான். தாய்க்குச் சால்வை போர்த்தி மாலை இட்டு மகிழ்கிறான். அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

நம் அரசுகள் நடத்தும் பாரதி விழாக்கள் இப்படித்தான் இருக்கின்றன!

தாய் செய்யச் சொன்ன ஒருவேலையையும் செய்யாத மகன் தாய்மீது தனக்கு அன்பிருப்பதாகக் கூறினால் அது உண்மையாகுமா? தாயின் துயர் போக்காமல், அவள் பசி நீக்காமல் அவளுக்கு விழா எடுப்பதைப் போன்ற போலித்தனம் வேறுண்டா? பாரதி தன் தாய்மொழியாகிய தமிழ்மீது எவ்வளவு பற்றுவைத்திருந்தான்! இவர்களுள் யாருக்காவது அந்தப் பற்றில் பத்தில் ஒரு பங்கு என்ன, நூறில் ஒரு பங்காவது இருக்குமா?

தமிழ் மண்ணில் தமிழ் மக்களுக்குத் தமிழில் கற்கும் உரிமை இல்லாமல் ஆங்கிலவழிக் கல்வி அவர்கள் மேல் திணிக்கப்படுவது போன்ற கொடுஞ்செயல் வேறுண்டா? பாரதி ஆங்கிலவழிக் கல்வியை எவ்வளவு கடுமையாகச் சாடினான்! அதனால் நலம் ஓர் எட்டுணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்! என்றானே.

ஆங்கிலம் ஓர் அழகிய மொழி, பயன் உள்ள மொழி, உலகத் தொடர்பு மொழி ஆங்கிலத்தை விருப்பப் பாடமாகக் கற்கலாம், மறுப்பில்லை ஏன் கட்டாயப் பாடமாகக் கூடக் கற்கலாம் என்கின்றனர். சரி அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் தாய்மொழியாகிய தமிழைப் புறக்கணித்து அல்லது கீழே தள்ளிவிட்டு அந்த இடத்தில் ஆங்கிலத்தை வைக்கலாமா? தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கலாமா?

மீண்டும் சொல்கிறோம், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகிய தமிழுக்கு அடுத்தபடி இரண்டாம் மொழியாகக் கற்பதில் பிழையே இல்லை. தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் ஆங்கிலத்தை வைப்பதுதான் பிழை. பிழை மட்டுமன்று. கீழ்த்தட்டுத் தமிழ் மாணவர்கட்கு இழைக்கப்படும் பெருங் கொடுமையும் ஆகும். ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ள பள்ளிகளைத் தனியாகத் தொடர்ந்து நடத்திவரும் பாழாய்ப்போன முறை நீடித்தாலும் நீடிக்கட்டும். ஆனால் இன்று நன்றாக நடந்துவரும் தமிழ்வழிப் பள்ளிகளையும் ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றிக்கொண்டும், புத்தொளிப் பள்ளிகள் என்று சிலவற்றில் சிறப்புக்கவனம் செலுத்திக் கொண்டும் வருவது எவ்வளவு பெரிய கேடு! இதைச் செய்யும் புதுவை அரசு பாரதிக்கு எவ்வளவு பெரிய இரண்டகத்தைச் செய்கின்றது!

உலகம் சுருங்கிவருகின்றது என்றும் ஆங்கிலத்தின் தேவை அதிகரித்து வருகின்றது என்றும் நம்பிள்ளைகள் ஆங்கில மொழியை எழுதுவதிலும் பேசுவதிலும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அதற்காகப் பிள்ளைகள் அடியோடு தமிழைப் புறக்கணிப்பதற்கு வழிசெய்யலாமா? ஆங்கிலத்துக்காகத் தமிழை மறக்கவேண்டுமா? ஆங்கிலத்தை வளர்க்க விரும்பும் அரசு, அதனை எழுதவும் பேசவும் திறம்படக் கற்றுக் கொடுக்கத் தனிப்பள்ளிகளைத் திறக்கலாம். பழைய பள்ளிகளிலும் கூடத் தமிழ் பயிற்றுமொழியாக இருக்க ஆங்கில மொழியைத் திறம்படக் கற்றுக்கொடுக்கும் ஆற்றல் வாய்ந்த ஆங்கில ஆசிரியர்களை அமர்த்தலாம். இதைச் செய்யாமல் தமிழ் வழிப்பள்ளிகளின் கல்லறை மீது ஆங்கில வழிப் பள்ளிகளை நிறுவலாமா? கல்வியாளர்கள் என்பவர்களுக்குக்கூடக் கடுகளவும் இவ்வகையில் தெளிவில்லை. அவர்கள் தவறான எண்ணங்கட்குப் பழக்கப்பட்டுப்போனவர் களாகவும், விருப்பு வெறுப்புகட்கும் தன்னல உள்நோக்கங்கட்கும் உட்பட்டவர்களாகவும், அறிவுச்சோம்பல் உடையவர் களாகவும் இருக்கின்றனர். நம் அரசியல் கோளாறுகளால் தமிழறியாத, தமிழைப் புறக்கணிக்கும் வேற்றுமொழியாளர்கூட இங்கு வந்து கொட்டமடிக்கவும் வாய்ப்பு உண்டாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாரும் எல்லாமுமாய்ச் சேர்ந்து செயல்பட்டதில், இங்கு ஒரு வேற்றுமைத்தனமான கல்வி பண்பாட்டுச் சூழல் உருவாகிக் கொண்டிருக் கின்றது. வெள்ளைக்காரன் காலத்திலிருந்த இதுபோன்றதொரு நிலையைத்தான் பாரதி எதிர்த்தான். அதே நிலை இன்று திரும்ப வந்திருக்கின்றதே.

இந்தநாள் எமது தமிழ்நாட் டிடையே
அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார்
தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்
ஒருசார்,
மேற்றிசை வாழும் வெண்ணிற மாக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை
யவற்றினும் சிறந்தன. ஆதலின் அவற்றை
முற்றுமே தழுவி மூழ்கிடின் அல்லால்
தமிழச் சாதி தரணிமீ திராது,

என்று அவர்களைப்பற்றிப் பாரதி கூறுகின்றானே. இந்த வகையினர்தாமே இன்று விரிந்த நோக்கமுடைய கல்வியாளர்கள் என்ற பெயரில் இன்று ஆட்டம் போட்டுக்கொண்டுள்ளனர். தமிழுக்கு உரிய இடத்தில் உரிய மதிப்புத் தரப்படாமல் ஆங்கிலமே மேலிருந்து கோலோச்சுவதால்,

பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்

என்ற பாரதியின் கூற்றுப்படி எல்லோரும் ஆங்கிலத்துக்கு அடிமையாகித் தமிழை இளக்காரமாகப் பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. தமிழ் மண்ணில் தமிழ்க்கு மதிப்பில்லை என்ற நிலையை அரசுகளே உருவாக்கியுள்ளன.

பாரதி சொன்ன எதையாவது இவர்கள் நிறைவேற்றியிருக்கின்றனரா? வேறு வேறு மொழிகளைக் கற்று, வீட்டுமொழி கல்லாதவனைப் போ போ போ என்று பாரதி விரட்டியடித்தானே, அந்த வீட்டுமொழி கல்லாதவன்தானே இன்று உயர் அதிகாரியாக இருந்து தொடர்ந்து தமிழைப் புறக்கணிக்கின்றான்?

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவுங் கூடுவதில்லை. - அதைச்
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
என்றந்தப் பேதை உரைத்தான் - இனி
இந்த வசைஎனக் கெய்திடலாமோ?என்றும்,
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை
செய்தல் வேண்டும் என்றும்,
தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

என்றும் பாரதி இவர்களைப் பார்த்துக் கூறிய செய்தி ஒன்றையாவது இவர்கள் நிறைவேற்றி யிருக்கின்றனரா? அதுமட்டுமன்று. அவன் சொன்னதற்கு நேர் மாறானவற்றைச் செய்வதே வேலையா யிருக்கும் புதுவை அரசு, பாரதி விழாக் கொண்டாடுவதுபோல் மிக மிக அருவருக்கத்தக்க செயல் வேறு எதுவுமில்லை.
-ம. இலெ. தங்கப்பா