
|
ஏரினும் நன்றால்...
- சிறுகதை
பொறிஞர் அகன் ஐயர், மாத்தூர்(தொடர்ச்சி) நில மேலாண்மை- நீர் மேலாண்மைத் திட்டங்கள் பலவற்றைச் செயல் படுத்திய என் பொறியியல் மூளையில் பளிச்சென ஓர் ஒளிக்கீற்றுத் தோன்றிற்று! "பட்டா ஓடையா ? அப்படீன்னா உங்கள் சொந்த நிலத்திலேயே அந்த ஓடையாகிடுச்சு!" "அதே தானுங்க ஐயரி நிலமெல்லாம் சரிவாக இருக்குங்க. மேல் கொல்லையில பெய்கிற மழை மடமடன்று கீழ்க்கொல்லைகளுக்கு ஊடே ஓடி மண்ணெல்லாத்தையும் அரித்தெடுத்து. நிலத்தையே பாழாக்கிடுச்சுங்க" "அந்த இடத்தைப் பார்க்கலாமா? எவ்வளவு தூரம்?" "பக்கந்தாங்க .. பார்த்து வரலாமுங்க.... வாங்கையா" என்றவாறே கூட்டமே எழுந்து ஓடையை நோக்கிக் கிளம்பிற்று! நாங்களும் தொடர்ந்தோம்! முட்புதர்களும் கள்ளி கற்றாழை வகைகளும் அடர்ந்திருந்த ஓடைக் கரையை அடைந்தோம்! அங்கே நின்றபடி ஓடைக்கு மேற்புறமிருந்த நிலங்களைக் கூர்ந்து கவனித்துப் பொறியியல் நோட்டமிட்டேன்! பல்லாண்டுகளாகப் பயிரிடப்படாத தரிசுநிலம்! கண்ணுக்கெட்டிய தொலை விலிருந்து ஓடைக் கரைவரை ஒரே சரிவு! மேல் மண் அரிக்கப்பட்டுத் தோல் உரிக்கப்பட்ட உயிரியாக அலங்கோலமாகக் கிடந்தது அவ்விளைநிலம், அடிமண்ணின் மென்பாறைகளும் சரளையுமாக, முரம்புநிலமாகக் காட்சிதந்தது! ஆங்காங்கே முட்புதர்களும், பால் உள்ள கள்ளி கற்றாழைகளும், சில வெள்வேல் மரங்களும் வளர்ந்திருந்தன! கால்நடைகளின் மேய்ச்சலுக்குக் கூடப் பயன்படாதவாறு புல்-பூண்டுகள், சிறு செடி-கொடிகள் என எவையுமின்றி அந்தநிலம் பாழாகிக்கிடந்தது! "முல்லை நிலம்தான் முறைமையில் திரிந்து பால் உள்ள கள்ளிப் புதர்கள் வளர்ந்திடப் பாலை நிலமாய்ப் பாழாய்ப் போனதே" என்றார் அன்புமணி அழகு தமிழில்! ஆசிரியர் அல்லவா? என் மன ஓட்டத்தைப் பாடலில் கூறிவிட்டார்! என் மனமறிந்த நண்பர் அல்லவா? ஆங்காங்கே கேணிகளும் கண்ணில் பட்டன. அருகமைந்த கேணியொன்றின் அருகே சென்று உள்ளே பார்த்தேன். ஐம்பது அடிக்குமேல் ஆழம் கொண்ட அக்கேணியில் நீரிருந்து வறண்டு பாழடைந்துபோயிருந்தது! "இது போலத் தானுங்க ஓர் அறுபதுக்குமேற்பட்ட கேணிகள் இருக்குங்க" என்றார் ஒருவர்! "அப்படீன்னா, தோட்டப் பயிர்களும் விளைந்த நிலங்களாயிற்றே !" என்று மனம் பதைத்தவாறு சரிவின் மேற்புறம் நோக்கிச் சென்றேன். எங்கும் மழை நீரின் ஓடுவிசை அரித்ததனால் மேல் மண்ணற்ற நிலங்கள், பலவகைப் பட்ட சிற்றோடைகள் உருவாகி இருந்தன. இவைபோன்ற சிற்றோடைகள் பல ஒன்று சேரு மிடத்தைத் தேடிக்கண்டு, அங்கேயே நின்று, வல இடப்புற நிலங்களையும், சரிவுநிலத்தின் உச்சி மேட்டையும் நோட்ட மிட்டேன். நில-நீர் மேலாண்மை நுட்பத் திறத்தோடு, ஆழ்ந்து சிந்தித்தேன். நான் நின்ற இடத்தில் மிகைநீர் வழிந்தோடும் வகையில் ஒரு கலிங்கை அமைத்து, அதன் இரு புறங்களிலும் வில்போல் மண்கரைகளைப் பத்தடி உயரத்திற்குச் சமமட்டமாக அமைத்தால், ஒருபத்து ஏக்கர் நிலத்தில் ஓரடி முதல் ஆறடி ஆழத்திற்கு மழைநீரைத் தேக்கலாம் எனக் கணக்கிட்டேன். "இந்த இடத்திற்கு மேற்புறம் உள்ள நிலம் யாருடையது ?" என்றேன். "வேலண்ணே... வாங்க, ஐயா கேட்கிறாரே..." "இந்த மேட்டு நிலம் உங்க அண்ணன் தம்பிகளோடதுதானே" என்றார் ஒருவர். அந்த வேலுச்சாமி என்னருகே வந்தார், அண்ணன், தம்பி, அவர் உட்பட ஐவருக்கு சொந்தம் என்றார்! அவர்களையும் அக்கூட்டத்திலிருந்து அழைத்தார். "இந்த இடத்தில் கலிங்கை அமைத்து, இடது-வலது புறங்களில் வில்போல் உள்நோக்கிக் கரை அமைத்து, ஒரு கசிவுநீர்க் குட்டையை அமைக்கலாம். மழைநீர் ஆறடி ஆழமாவது தேங்கும். இந்த இடத்திற்குக் கீழே உள்ள கேணி களுக்கும் ஊற்றுச் சுரக்கும். உரிய விலையை நான் கொடுத்து வாங்கிக் கொண்டு உடனே குட்டை அமைக்கும் பணியைத் தொடங்குவேன். வரும் மழைக்காலத்திற்கு முன்பே குட்டையை அமைத்து விட்டால் ஆறே மாதங்களில் கிணற்று நீரை இறைத்துப் பயிர் செய்யும் நிலை ஏற்படும்" என்றேன். கூட்டமே வாய்பிளந்து என்னைப் பார்த்து "மெய்யாலுங்களா"? என்றது. மறுநாளே அந்நிலத்தை நான் வாங்கினேன். எந்தவித எந்திரங்களு மின்றிஊர்மக்களை வேலை செய்யச்செய்து வாராவாரம் உரிய ஊதியத்தைக் கொடுத்து, பனையூரிலேயே இருமாதங்கள் தங்கி, என் நேரடி மேற்பார்வையில் பணிகளைத் தொடர்ந்தேன். மூன்றே மாதங்களில் அழகான சரளைமண் கரைகள் கொண்ட ஒரு கசிவு நீர்க்குட்டை அமைந்தது! இடையிடையே கோடை மழையும் பெய்ததால் மண்வெட்டும் பணி எளிதாயிற்று! குட்டைப் பணி முடிந்தவுடன் சிற்றோடைகளிலும், பேரோடையிலும் தடுப்பு அணைகளை அமைத்தோம். ஓடையின் மேற்புறத்தில் அமைக்கும் தடுப்பு அணை அமைந்துள்ள இடத்தின் படுகை மட்டமும், அதற்குக் கீழ் அமைக்கப் படும் தடுப்பு அணையின் கலிங்கு மட்டமும் ஒரே அளவில் இருக்கும் வகையில், பன்னிரு தடுப்பு அணைகளைக் கட்டினோம். என் பொறியியல் திரம் துலங்குமாறு, முழு ஈடுபாட்டோடு பணிகளை மேற்கொண்டேன். சரிவு நிலங்களில் சரிவுக்குக் குறுக்கே நூறடி இடைவெளியில் சமமட்டக் கரைகள் பல அமைத்தோம். வலுத்துப் பெய்த ஒரு கோடை மழையின் நீர், குட்டையில் தேங்கிப் பின் கலிங்கு வழியே வழிந்து தடுப்பு அணைகளில் தேங்கி நின்றது. நிலத்தடிக்குள் சென்று மறைந்துவிட்டது! சமமட்ட வரப்புகளிடையே மழைநீர் பரவலாகப் பரவி நின்றது! பேரோடைக்கு நிலத்தின் மழைநீர் ஓடிவந்து சேரவே இல்லை. எம்மக்கள் மகிழ்ச்சிக் கூத்தாடினர்! சரிவு நிலத்தில் மழைநீர் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் காட்சியைக் கண்டு என் மனமும் நிறைவுற்றது. அவ்வப்போது திருச்சிராப்பள்ளியிலிருந்து பனையூர் சென்று பார்த்துவரத் தொடங்கினேன். ஆறேழு மாதங்கள் சென்றபின் அன்றொருநாள் காலை செய்தித்தாளில் மூழ்கியிருந்தேன்! வீட்டின் வெளியே ஏதோ அரவம் கேட்டது. எழுந்து சென்று வெளிக்கதவைத் திறந்தேன் அன்புமணியும், வேலுச்சாமியும் இன்னும் பத்துக்கும் மேற்பட்ட பனையூர் மக்களும் கூட்டமாக என் வீட்டைநோக்கி வந்து கொண்டிருந்தனர்! எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதாவது சிக்கலோ...? இருக்காதே. ...! பின் ஏன் இவர்கள் இப்படிக் கூட்டமாய்.... அன்பும் வருகின்றாரே !' என்று பலவாறாக நினைத்த போதே அவர்கள் அருகில் வந்துவிட்டனர்! ( தொடரும் ) |