பேருந்துகளை உடைப்பதுதான் செம்மொழிக்கான போராட்டமா?

'கன்னட மொழி செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கன்னடரக்சனவேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கருநாடக எல்லைக்குள் தமிழகப் பேருந்துகள் சிலவற்றின் மீது கற்களை வீசித் தாக்கினார்கள். கருநாடகாவில் பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் தொடர்வண்டிகளை மறித்துக் கன்னடர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையிலான தொடர்வண்டிப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. கன்னட மொழிக்குச் செம்மொழித் தகுதி வழங்கத் தமிழகம் தடை ஏற்படுத்தினால் இரு மாநில உறவும் சீர்குலைந்து விடும் என்று கருநாடக முதலமைச்சர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்'(தமிழ் ஓசை, 10.08.2008)

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அந்த மொழிக்காரர்கள் அண்டை மாநிலத்தாருக்குத் தண்ணீர் தராமல் தடை செய்கிறார்களா? கடைகளை அடைத்துக்கலகம் செய்கிறார்களா? தங்கள் மாநிலத்தில் வாழும் சிறுபான்மையரை அடித்து உதைக்கும் பழக்கம் உள்ளவர்களா? எத்தனைப் பேருந்துகளை உடைத்திருக்கிறார்கள்? எத்தனை முறைத் தொடர்வண்டி மறியல்கள் செய்திருக்கிறார்கள்? என்பனவெல்லாம் தகுதிகள் ஆகா.

செம்மொழிக்கான முதன்மைத் தகுதிகள் மூன்று. அவை 1. தொன்மை, 2. செம்மையான இலக்கிய இலக்கணவளம், 3. தாய்மை என்பன. தமிழ்மொழி கி.மு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த செவ்விலக்கியங்களிலிருந்து கி.மு. விலேயே திரட்டிய, இன்றைய மொழியியலாரும் வியக்கும் தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தை உடைமை, 2000 ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்ட உலகப் பேரறிஞர்கள் வியக்கும் செவ்வியலக்கியங்களை உடைமை, 153 திராவிடக் குடும்ப மொழிகளைப் பெற்றெடுத்த தாய்மை ஆகியவற்றைத் தன்னேரிலாத் தகுதிகாளகப் பெற்றது தமிழ்மொழி.

இந்தத் தகுதிகள் கன்னடமொழிக்கு இருக்குமானால் கன்னடர்கள் அவற்றைக் காட்டித் தங்கள் மொழியைச் செம்மொழியாக ஏற்கக் கோரிப் போராடலாம். ஏன்? சமற்கிருதத்தைச் செம்மொழியாக்கிய காலத்திலிருந்தே போராடியிருக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. தமிழைச் செம்மொழியாக ஏற்கும் கோரிக்கையை நாம் வைக்கும் வரையில் அவர்களுக்கு அந்த எண்ணமே எழவில்லையே. ஏன்?

ஒரு குடும்பத்தில் இரண்டு ஆண்பிள்ளைகள். ஒருவனுக்கு அகவை 25. மற்றவனுக்கு அகவை 10. பெற்றோர் மூத்தவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். இளையவன் அதைப் பார்த்து "ஏன் இந்த ஓரவஞ்சனை? எனக்கும் அண்ணனுக்கும் சமமான உரிமை உண்டு என்று தானே சொன்னீர்கள்? அதனால்

அண்ணனுக்குச் செய்ததுபோல் இப்போதே எனக்கும் திருமணம் செய்து வையுங்கள்" என்று அடம் பிடிப்பதுபோல் உள்ளது கன்னடர்களின் கதை.

இத்தனைக்கும் தமிழுக்கும் கன்னடத்துக்கும் உள்ள உறவு உடன்பிறப்பு உறவு கூட அன்று; தாய்மகள் உறவு. தாய்க்குப் பெருமை செய்வதைப் பார்த்து மகள் பெருமைப்படுவதற்கு மாறாகப் பொறாமையால் புழுங்குவாளா?

"தென்னாட்டு மக்களாகிய நாங்களனைவரும் (கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்ற மொழிகளே உருவாகாத) ஒரு காலத்தில் தமிழர்களாக இருந்தோம். அப்போது எங்கள் தமிழ் நாட்டில் பிறந்தவரே திருவள்ளுவர். அவர் படைத்ததே உலகில் 35 மொழிகளில் பலரால் மொழி பெயர்த்துப் போற்றப்படும் எங்கள் திருக்குறள்" என்று சொல்லிப் பெருமைப்பட வேண்டிய கன்னடர்கள், திருவள்ளுவரைச் சாக்கு மூட்டையாகக் கட்டி வைத்து இழிவுபடுத்தும் வன்னெஞ்சர்களாக ஆனதற்கு என்ன காரணம்?

தமிழகப் பேருந்துகளைத் தடுப்பதும் உடைப்பதும் தான் செம்மொழிக்கான போராட்டமா? அல்லது 'எடியூரப்பா எச்சரித்து அச்சுறுத்துகிறார். எங்களுக்கு அச்சமாயிருக்கிறது. அதனால் தமிழ் அரசு நடுவணரசைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று எடியூரப்பா எதிர்பார்க்கிறாரா?

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் (குறள் 166)

தமிழில் பொறியியற் கல்வி!

முதன்முறையாகத் தமிழில் பொறியியல் படிப்புகளைக் கற்றுக் தருகிறது திருச்சிராப்பள்ளிப் பாரதிதாசன் பல்கலைக்கழகம். பொறியியல் எம்.டெக்., பயோ- டெக்கனாலாஜி, எம்.டெக்., பயோ இன்ஃபர் மேட்டிக்ஸ் ஆகிய படிப்புகளைத் தமிழிலேயே படிக்கலாம்.பிளஸ் டூ முடித்த மாணவர்கள் 6 ஆண்டுகள் ஒருங்கிணைந்த இந்தப் பட்டப் படிப்புகளில் சேரலாம். மாணவர்கள் கடுமையான உழைப்பைக் காட்டினால் 5 ஆண்டுகளிலேயே படிப்பை முடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆங்கில வழிப் பாடப்பிரிவு மாணவர்களுக்கு நிகராகத் தமிழ் வழிப் பொறியியல் மாணவர்களுக்கு ஆங்கில மொழி வன்மையை வளர்க்கவும் வாய்ப்புகள் இருப்பதால் வேலைவாய்ப்பு ஒரு சிக்கலாக இருக்காது என்கிறது பல்கலைகழகம்! விளக்கங்களுக்கு : http://www.desd.cdac.in/