
|
வினாதலும் விடுத்தலும்
1. கட்சியின் தலைமை, கட்சியது தலைமை என்ற பொருளில் கட்சித் தலைமை என்று 'த்' (ஒற்று) மிகுவது சரியா?
ஒற்றுமிகுவது சரியே. - ம.இலெ.த. 2. முதன்முதல் தமிழ்ப்பாட நூல் எழுதிய நமச்சிவாயச் சான்றோர் அவர்களுக்கு முகப்பெழுத்து (Initial) 'கா' எனக்குறிக்கப்படுகின்றது. அவருடைய வரலாற்றில் அவர்பெற்றோர். 'இராமசாமி - அகிலாண்டவல்லி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவர் முகப்பெழுத்துகள் 'இரா' என்று தானே அமைதல் வேண்டும்? "அவர் ஊர் 'காவிரிப்பாக்கம்' ஆகவே, 'கா' முகப்பெழுத்தாக இடப்படுகின்றது'' என்று சிலர் அதற்கு அமைதி கூறுகின்றனர். ஊர்ப்பெயரை மட்டும் முகப்பு எழுத்தாக இடுகின்ற முறை நம்தமிழ் மரபில் உண்டா? இங்ஙனம் 'கா' என்னும் முகப்பெழுத்தினை அவரே தொடங்கினாரா? பின்னால் வந்தவர் இப்பழக்கத்தினை ஏற்படுத்தினரா? விளக்குக!
காவேரிப்பாக்கம் என்பது சரிதான். அவரே போட்டதுதான். ஆவூர் மூலங்கிழார், ஐயூர் மூலங்கிழார் என்பது மரபுதான் - இரா.தி. 3. Cellular Phone - என்ற ஆங்கிலச் சொல்லிற்குக் 'கைப்பேசி' என்ற தமிழ்ப்பெயரை ஒரு நாளிதழ் பயன்படுத்திவந்தது. அவ்விதழுக்கு மூலமானவரான அரசியல் தலைவரும் நேர்காணலின்போது 'கைப்பேசி' என்றே குறிப்பிட்டதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அண்மைக்காலமாக அந்நாளிதழ் 'செல்பேசி' என்று எழுதி வருகிறது. நான் காரணமென்ன வெனக் கேட்டபோது, ஒரு நண்பர், கைப்பேசி என்றால் "கைப்ப ஏசி' என்றும் பொருள் தருவதால் அவ்வாறு எழுதுவதைக் கைவிட்டு விட்டதாகக் கூறினார். இது சரியா?
கைப்பேசி என்பது கைப்பஏசி என்று பொருள்தராது. அப்படியே நினைத்தாலும் Cell என்ற ஆங்கில ஒலியை விட விரும்பாத ஊறிப்போன மனப்பழக்கத்தைக் குறிக்கும் "செல்' என்ற அடைமொழியை விட்டு வேறு தமிழாக்கத்தை நாடுவது நல்லது. "கைப்பேசி' என்ற சொல்லை நான் பயன்படுத்துவதற்கு மூன்று அடிப்படைகளைக் கூற விரும்புகிறேன். அ. கை என்பது சிறுமையையும் குறிக்கும். காட்டு : கைக்குட்டை, கை வேலை, கைக்கிளை, கைக்குடை, கைக்குழந்தை. ஆ. மலேசியத் தமிழர்கள் இதனை Hand Phone என்றே குறிப்பிடுகின்றனர். இ. மக்கள் கையில் இன்று கைக்குட்டையை விடக் கைப்பேசியையே மிகுதியாகக் காணமுடிகிறது. எனவே கை என்ற அடைமொழி மிகவும் பொருத்தமே ஒரு பிறமொழிச் சொல்லின் தமிழாக்கம் இதுதான் என்று குறிப்பிட்டுக் கூறமுடியாது. ஆக்கச் சொற்கள் மொழிமரபிற்கேற்ப இருக்க வேண்டும். அப்படிப் பல சொற்கள் ஆக்கப்பட்டாலும், பொருத்தமுடையது என்று பலரும் விரும்புவதுதான் நிலைத்த வாழ்வுபெறும். - இரா.தி. 4. 3ம் என்றும், 2வது என்றும் பெரும்பாலோர் எழுதுகின்றனர். இவற்றில் தமிழினிமை குறைந்து காணப்பெறுகிறது. 3-ஆம் என்றும், 4-ஆவது என்றும் எழுதினால் தமிழின் சுவை இனிமையாக அமையுமல்லவா? 3-ஆம், 4-வது என எழுதலும் சரியன்று; 3ஆம் 4ஆவது என எழுதலே சரி. 3ஆம் ஆண்டு, 4ஆவதாகத் தரப்பட்ட செய்தி என்பவைபோல் வரும். 5. செய்தி முறையான சொல்லா? சேதி முறையான சொல்லா? இரண்டுமே முறையான சொற்களா? எது மூலச் சொல்? ஒன்று, இரண்டு, மூன்று. இஃது எண்வரிசை இதில் 'முதல்' என ஓர் எண் இல்லை. 2,3 முதலியனவற்றோடு 'ஆம்' சேர்த்து இரண்டாம், மூன்றாம் எனக் கொள்வதுபோல் ஒன்றுடன் 'ஆம்' சேர்த்து ஒன்றாம் எனக் கூறுவதில் தவறுயாது? முதல் வகுப்பிற்கு முதலாம் வகுப்பு என்றே சொல்லப்படுகின்றது. 'சரி' என்பதே தமிழ்ச்சொல் அன்று என்றும் நேர், முறை முதலியனவே அதற்கு ஈடான சொற்கள் என்றும் கூறப்படுகின்றதே. இதுபற்றிய கருத்துகள் யாவை?
செய்தி - முறையான சொல் சேதி எனத் திரிந்து அல்லது மருவி வழங்கும். பெயர் பேர் எனத் திரிந்தும் வெயர்வை - வேர்வை எனத் திரிந்தும் வழங்குகின்றன. சேதியையும் அவ்வாறே கொள்ளலாம். ஒன்றாம் என்பதிற் பிழையில்லை. முதல் வகுப்பு என்பதை முதலாம் வகுப்பு எனவும் கூறலாம். 'சரி' என்பது தமிழில் இன்று பெருவழக்கிரிருக்கும் ஒருசொல் (நேர், முறை என்பன அதன் பொருள்) பிறிதொரு மொழியிலிருந்து அது வந்தது என்பதைச் சான்றுடன் நிறுவினாலன்றி அதைத் தமிழ் என்றே கொள்ளலாம். - இரா.தி. 6. நான்கன் உருபு "கு' பொருட்டு, பொருத்து என ஆகியுள்ளது. அதன்பொருட்டு, பணத்தின் பொருட்டு ஆகியவை அதைப்பொருத்து, பணத்தைப்பொருத்து என்றே அமைவுற்றிருக்கின்றன. 'பணத்தைப்பொறுத்து' என்பது பணத்தைப் பொறுத்துக் கொண்டு என்றுதானே பொருள்படும். அங்ஙனமிருக்க 'பணத்தைப் பொருத்துத் தரம் மாறும்' என்பது பிழையென்றும் 'பணத்தைப் பொறுத்துத் தரம்மாறும்' என்பது சரி யென்றும் குறிப்பிடுகின்றீர்கள். நன்னூற் கருத்துக்கு இது முரண்படுகின்றதே! விளக்குக!
நன்னூலில் வரும் பொருட்டு என்பது இன்னதற்காக என்ற பொருள் தருவது. அதுவே பொருத்து ஆனது என்ற கருத்துப் பொருந்தாது. பொறுத்து என்பது ஆங்கில மொழித் தொடர்பால் ஏற்பட்ட பிற்கால வழக்கு. சென்ற தெளிதமிழ் 22ஆம் பக்கம் பார்க்க. - இரா.தி. 7. அ. சென்ற இதழ்ப் பக்கம் 6இல் ஆசிரியர் பொறுப்பில் சில மாற்றங்கள் எனும் தலைப்பில் "புலவர். பணிக்குன்றன்" என்றொரு பெயர் வந்துளது. இது "சேசாசலம்" எனும் வடமொழிச் சொல்லுக்கு நேரிய தமிழ் எனில் அஃது "பனிக்குன்றன்" என்றல்லவா வரவேண்டும். இரு சுழி "னி" வரவேண்டும். முச்சுழி "ணி" வருதல் கூடாது. என்பது எனது கருத்து. ஆ. பக்கம் 16இல் சொற்களை உருவாக்கிப் பயிலுவோம் எனும் பகுதியில் Deferntial முரணியைபு என்றிருப்பது பிழை. இது Differential என்று வருதல் வேண்டும். சரியா? இ. அதேபோல் அந்தப் பகுதியில் வெப்ப இழப்பு என்பது Heat Lass என் அச்சுப்பிழை உளது. இது Heat Loss என்று இருக்க வேண்டும். சரியா?
அ. பணிக்குன்றம் என்பது சேடாசலத்தின் தமிழாக்கம். சேடன் - ஆதிசேடன். அசலம் - மலை. ஆதிசேடன் தவஞ்செய்ததால் சேடாசலம் என்பது திருவேங்கடமலைக்குப் பெயர். நீங்கள் சொல்லும் பனிமலை என்பது இமயமலைக்குப் பொருந்தும். பணம் - படம், பணி - படத்தை உடைய பாம்பு (ஆதிசேடனைக் குறித்தது) ஆ,இ. Deferential, Heat Lass என்பன அச்சுப்பிழையே அவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பிழைகளுக்கு வருந்துகிறோம். - இரா.தி. |