பாவலர் இரா. செம்பியனாரின் அறிவியற்சொல் ஒலிவடிவங்கள் பற்றிய கருத்துரைகள்
வரலாற்றில் எழுத்துப் போராளிகள்
(பேராசிரியர் இரா. மதிவாணன்)

உலகில் பல்லாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன எனினும் அவை சில வகை எழுத்து முறைகளையே தொடர்ந்து பின் பற்றுகின்றன, ஒரு மொழி பிற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கும். ஆனால், பிறமொழி எழுத்துக்களைக் கடன் வாங்குவதில்லை.

இன்றைய உலக ஊடாட்டமுதன்மை மொழியாக விளங்கும் ஆங்கிலம் உலக மொழிகளிலிருந்து ஏராளமான சொற்களைக் கடன் வாங்கத் தயங்குவதில்லை. ஆனால் தனக்கே உரிய 26 எழுத்துக்களைத் தவிர ஒரேயொரு வேற்று மொழி எழுத்தைக்கூட ஆங்கிலத்தில் சேர்த்துக் கொள்வதில்லை. இதன் உட்பொருள் என்ன? வேற்றுமொழி எழுத்தொலிப்புகளைச் சேர்த்துக் கொண்டால் தனக்கேயுரிய இலக்கணக் கட்டமைப்புச் சிதைந்து வேறொரு கலவை மொழியாக உருமாறிப் போய்விடும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உலக மொழிகள் அனைத்தும் இந்தப் பொது நெறியைப் பின்பற்றும் போது, தமிழ்ப் பாடநூல்களில் ஸ், லி, லு, ளீ என்னும் வடமொழி எழுத்துக்களை ஆள்வது எப்படிப் பொருந்தும்? தமிழ் மொழியில் பிற மொழி எழுத்துக்களைச் சேர்க்கக்கூடாது எனும் கட்டுப்பாடு 5000 ஆண்டுகளாக நிலவி வருகிறது. தமிழ் எழுத்து வரிசையில் பிற மொழி எழுத்துத் திணிப்பு நேரும் சூழல்களில் அதை எதிர்த்துப் போராடிய போராளிகள் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு உலகத் தமிழர் அனைவரும் நன்றியோடு வீர வணக்கம் செலுத்துதல் தலையாய கடமையாகும்.

1. இடைக்கழகச் சிந்துவெளி நாகரிகக் காலத்தில் முதற் போராளிகள்.

நான் சிந்துவெளி முத்திரைகள் அனைத்தையும் படித்து வெளியிட்டுள்ளேன். அவை முற்றிலும் செந்தமிழாக உள்ளன. சிந்துவெளி நாகரிகக் காலத்தமிழர்கள் சுமேரியர்களோடும் எகுபது மக்களோடும் நெருங்கிய வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் சுமேரிய அல்லது எகுபது மொழிக்கே உரிய தனித்த ஒலிப்புக்குரிய எழுத்துகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை Mufatalish என்னும் எகுபதிய மன்னன் பெயரிலுள்ள f, sh என்பது போன்ற ஒலிப்புகளைச் சிந்துவெளிமக்கள் அறிந்திருந்தாலும் அவற்றைச் சிந்துவெளி எழுத்துகளில் சேர்க்காமல் ஒதுக்கித் தள்ளினர்.

இவர்களை இடைக்கழகக் காலத்துத் தமிழ் எழுத்துப் பாதுகாப்புப் போரில் ஈடுபட்ட முதற் போராளிகள் எனலாம். இக்காலத்தில் பெருநாரை, பெருங்குருகு என்பன இலக்கண இலக்கிய நூல்களாக இருந்திருக்கக் கூடும் இடைக்கழகப் பாண்டியன் வெண்தேர்ச் செழியன் காலத்து எழுத்தே சிந்துவெளி எழுத்து எனப்படுகிறது.

2. கடைக்கழகக் காலத்து இரண்டாம் போராளிகள்

கடைக்கழகம் கி.மு. 1850 அளவில் சிந்துவெளி நாகரிக முடிவில் தோன்றியதாக இறையனார் களவியல் கூறுகிறது. கடைக்கழகப் பாண்டியன் முட்டத்துத் திருமாறன் காலத்தில் சிந்து வெளியில் முன்பே வழங்கிவந்த 417 குறியீடு கொண்ட அசையெழுத்து (கூட்டெழுத்து) முறையை மாற்றி உயிரும் மெய்யுமாக 30 முதலெழுத்துக்களைக் கடைக்கழகப் புலவர்கள் உருவாக்கினர். இந்த முறையைப் பின்பற்றி ஐந்திரனார் எழுதிய இலக்கணம் ஐந்திரம் எனப்பட்டது. தொல்காப்பியர் ஐந்திரம் கற்றவர், வடமொழியில் எக்காலத்திலும் ஐந்திரம் என்னும் இலக்கண நூல் இருந்ததில்லை.

ஐந்திர இலக்கண மரபிலும் தமிழுக்கே உரிய 30 முதலெழுத்துகள் தவிர வேற்றுமொழி எழுத்து எதுவும் தமிழில் சேர்க்கப்படவில்லை.

கி.மு. 835 இல் தொல்காப்பியத்தைத் தொல்காப்பியனார் பாண்டியன் நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையில் அதங் கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றினார். தொல்காப்பியர்காலத்தில் பாலி பிராகிருதம் வடமொழி ஆகிய மூன்றுசொற்களும் தமிழில் புகுந்தாலும் வடமொழிக் குரிய எழுத்துகள் தமிழில் புகலாகாது என்பதை

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

எனத் திட்டவட்டமாக எடுத்துரைத்தார். இவ்வகையில் ஐந்திரனாரும் தொல்காப்பியரும் கடைக்கழகக் காலத்தில் தமிழ் எழுத்துப் பாதுகாப்புப் போராளிகளாக விளங்கினார்கள் என்பது உறுதிப்படுகிறது.

சிந்துவெளி நாகரிகக் காலமாகிய இடைக்கழகக் காலம் முதல் கடைக்கழகக் காலம் வரை தமிழ் எழுத்துக்களே இந்தியா முழுமைக்கும் பொது எழுத்துக்களாக இருந்தன. பிராகிருத பாலி மொழிகள் தொடக்கத்தில் தமிழி எனும் தென்பிராமி எழுத்தில் எழுதப்பட்டன. சாதவாகன மன்னர் கி.மு. முதல் நூற்றாண்டில் கோதாவரி ஆறு தோன்றும் மராட்டிய மாநில வடபகுதியில் வெளியிட்ட நாணயத்தில் தமிழி எழுத்தே இடம்பெற்றது. வசிட்டி என்ற மன்னன் பெயரில் 'ட்' எனும் மெய்யெழுத்துத் தமிழ் மரபின்படி புள்ளியிடப் பட்டுள்ளது.

ஆனால் பல்லவர் காலத்துக்கு முன்பே இந்தியா முழுவதுக்கும் பொது எழுத்தாக விளங்கிய தென்பிராமி எனும் தமிழ் எழுத்து, வட நாட்டில் குப்த பிராமி, குசானர்பிராமி எனப்படும் பலவகையாகச் சிதைந்து விட்டது. தென்னாட்டில் மூவேந்தர் ஆட்சி மறைந்து தமிழ்க் கழகம் நடைபெறாததால் தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறிவிட்டது.

இந்நிலையில் தமிழுக்கும் சமற்கிருதத்திற்கும் பொதுவாகக் கிரந்த எழுத்து எனும் புதிய எழுத்து முறையைப் பல்லவர்களின் பார்ப்பன அதிகாரிகள் புகுத்தினர். தமிழிலுள்ள 30 எழுத்துகளில் எ ஒ ழ ற ன என்னும் ஐந்து எழுத்துகளை அப்படியே எடுத்துக் கொண்டனர் க1 க2 க3 க4 எனும் வருக்க எழுத்துகள் போன்ற வடமொழிக்கே உரிய புதிய ஒலிப்பு எழுத்துகள் எனப் புதிதாக 26 எழுத்துகளை அவர்களே உருவாக்கி மொத்தம் 51 எழுத்துகள் கொண்ட கிரந்த எழுத்து முறையைத் தமிழில் புகுத்தினர். தமிழை ஒரு வடஇந்திய மொழிபோல் மாற்றிவிடும் முயற்சியைச் செயல் படுத்திக் காட்டினர்.

இதனால் சமற்கிருதம் தமிழ் இரண்டையும் ஒரே வகை எழுத்தில் எழுதலாம். தமிழிலுள்ள பல்லாயிரக் கணக்கான நூல்களை வடமொழியில் உடனுக்குடன் மொழிபெயர்க்க முடிந்தது. ஆனால் தமிழ் மாணவர்கள் கிரந்த எழுத்துக் கற்றாலும் தமிழை மட்டுந்தான் படிக்க முடியும். சமற்கிருதக் கல்லூரிகளில் இவர்களுக்கு இடம்தரப்படுவதில்லை. இவர்களால் வடமொழியிலுள்ள நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க முடியாது.

இந்த மொழி அழிப்புச் சூழ்ச்சி முயற்சிகளைத் தமிழ்ப் புலவர்களும் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்களும் கிரந்த எழுத்துகளை முற்றிலும் புறக்கணித்தனர். களப்பிரர் போரில் அமைதியாக ஈடுபட்டனர். பெரு வெற்றி கண்டனர். கிரந்த எழுத்துப் பல்லவர் காலத்திற்குப் பிறகு தானாகவே செத்துப் போய்விட்டது.

சோழர் காலத்தில் கம்பரும் வடஎழுத்துத் திணிப்புகளை எதிர்த்தார். வீடணன், இராமன், இலக்குவன் எனக் கம்பர் ஆண்ட சொல்லாட்சிகளே இதற்குச் சான்றாகும், கம்பரையும், வில்லி புத்தூராரையும் தமிழ் எழுத்துப் பாதுகாப்புப் போராளிகள் எனச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

தெலுங்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆண்ட காலங்களில் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்ட பார்ப்பன ஆசிரியர்கள் ஸ், லி, லு, ளீ எனும் எழுத்துகளை மீண்டும் புகுத்தித் தம் வழக்கமான திருத்தொண்டினைப் புலப்படுத்தத் தொடங்கினர்.
(தொடரும்)