தொல்காப்பியத்துட் கண்ட தலைவன் - தலைவியர்
புலவர் தி. சா. கங்காதரன், புதுச்சேரி(தொடர்ச்சி)

முதல் மூன்று நாளும் தானே தலைவன் வருமிடத்தை எதிர்ப்பட்டுக் கூடியவள் (119). பின்னர்ப் பெரும்பான்மையும் தோழி வாயிலாகவே பகற்குறி இரவுக்குறியிடங்களைச் சென்றெய்துவாள் (121).

'தோழியின் முடியும் இடனுமா ருண்டே.'

களவு நிகழும் காலத்திடையே பூப்பு நிகழும் முந்நாளும் தலைவனொடு கூட்டம் நிகழ வாய்க்கு மாறில்லை, எஞ்சிய நாள்களிலும் அல்லகுறிப்படுதல் வருந்தொழிற்கருமை என்னுமிவற்றால் ஒருநாளோ இருநாளோ தொடர்ந்து தலைவனை மருவும் வாய்ப்பினையும் அவள் இழத்தல் கூடும் (122).

'முந்நா ளல்லது துணையின்று கழியாது
அந்நா ளகத்தும் அதுவரை யின்றே.'

வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிவுழிப் பலநாள் தலைவனைக் காண இயலாது தலைவி அல்லலுறுவாள் (112).

'வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்,
வரையா நாளிடை வந்தோன் முட்டினும்,
உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும்,
தானே கூறும் காலமு முளவே.'

தன்னுடைய செறிவு நிறை முதலிய பண்புகள் காரணம்பற்றியே அவள் தன் களவினைத் தாயர்க்கும் புலனாகாதவாறு கரந்தொழுகுவாள்.

'செறிவும் நிறையும் . . . பெண்பாலான' (209).

இக்களவொழுக்கத்தால் வரும் இடையூறுகளை எண்ணுமவள் விரைவில் தலைவன் தன்னை வரைந்துகொண்டு இல்லறம் பேண வேண்டும் கடன்மையை அவனிடம் நேராகவும் தோழிவாயிலாகவும் கூறி வற்புறுத்துவாள். அதுபோது அவள் கூற்றுக்கள் யாவும் தான் தலைவனையே நினைந்து கொண்டி ருப்பதாகவும். அவன் தன் நினைவின்றி வேற்றுச் செய்தியையே எண்ணுவதாகவும், தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தையும் (111) புலப்படுத்துவன. இரவுக்குறிக்கண் அவன் தன்னைக் கருதி வருவழியும் மீள்வழியும் வழியிடை அவனுக்கு விளையக்கூடும் ஏதத்தையும் அவனைப் பிரிந்து தான் தனித்திருத்தல் இயலாது புலம்புறும் ஆற்றாமையையும் தலைவனுக்குப் பலவாற்றானும் வற்புறுத்தி விரைவில் தன்னை அவன் வரைந்துகோடற்கு ஆவன முயலுமாறு அவனை ஊக்குதற்கண்ணேயே தலைவியது ஆள்வினை முழுமையும் தோன்றும் (210).

'பொழுதும் ஆறும் காப்புமென் றிவற்றின்
வழுவி னாகிய குற்றம் காட்டலும்,
தன்னை அழிதலும், அவனூறு அஞ்சலும்
இரவினும் பகலினும் நீவாரல் என்றலும்,
புரைபட வந்த அன்னவை பிறவும்
விரைதல் வேட்கைப் பொருள என்ப.'

உடம்பும் உயிரும் வாடிய போதும், தலைவனது இருப்பிடம் நாடிச் சேறல் தனக்கு முறையன்று (203) என்பதனையும் கடந்து, உயிரினும் சிறந்த நாணினை விடுத்து, அதனினும் சிறந்த கற்புக் காரணமாகத் தான் அவனிடம் சேறல் துணிந்ததாகத் தலைவி கூறலுமுண்டு (113).

'உயிரினும் சிறந்தன்று . . . சிறந்தன்றெனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக் கிழவ னுள்வழிப் படினும்
தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்
ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே.'

வரைதல்வேட்கை காரணமாகத் தலைவி, அன்பு அறன் இன்பம் நாணம் இவற்றை விடுத்து, தலைவனைப் பெரும்பொருள் கொண்டுவந்து பரிசப் பொருளாகத் தன் குரவரிடம் கொடுத்துத் தன்னை மணந்துகொண்டு இல்லறம் புரியுமாறு வேண்டும் நிலையும் உண்டு (215, 214).

'அன்பே அறனே இன்பம் நாணொடு
துறந்த ஒழுக்கம் பழித்தன் றாகலின்
ஒன்றும், வேண்டா, கற்பி னுள்ளே'
'பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே
காப்புக்கைம் மிகுதல் உண்மை யான.'

தலைவன் வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிந்தகாலை, தலைவிக்கு அப்பிரிவுத்துயர் மிகுமிடத்தே அவள் தன் நெஞ்சோடும், பிற அஃறிணைப் பொருள்களோடும் தன் கண் கால் முதலிய உறுப்புக்களோடும் உரையாடுதலும் அவற்றைத் தன் ஏவலைச் செயற்படுத்துமாறு வேண்டுதலும் (196), தலைவனை நினைத்து கனவு காண்டலும் (197) நிகழ்வன.

'நோயும் இன்பமும் . . . கிளவி.'
'கனவு முரித்தால் அவ்விடத் தான.'

நாண முதலியவற்றால் தன் களவொழுக்கத்தைத் தமர்க்கும் தோன்றாதவாறு கரந்துவந்தவள், தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்துழி ஆற்றாமை மீதூரும்காலையும், தலைவன் வருகையைத் தோழியரோ செவிலியோ அறிந்தவழியும். வேற்றவர் தன்னை மணம்பேச வந்துழியும் தோழியிடம் தன் களவினைத் தாயரிடம் இடனறிந்து கூறித் திருமணத்திற்கு ஆவன முயலுமாறு வேண்டும் செவ்வி நிகழ்தலுமுண்டு (112).

'வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் . . . .
தானே கூறும் காலமு முளவே.'

செவிலியும் நற்றாயும் தன்னைக் கூர்ந்து நோக்கித் தன் மெய்வேறுபாடு மனமாற்றம் இவற்றை யுணர்ந்தவிடத்தும், தலைவி இனித் தன் களவினை மறைத்தல் தகாது என்று தோழிவாயிலாச் செவிலிக்கு அறத்தொடு நிற்பாள் (123).

'பன்னூறு வகையினும் தன்வயின் வரூஉம்
நன்னய மருங்கின் நாட்டம் வேண்டலின்
துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்
துணையோர் கருமம் ஆக லான.'

இவ்வாறு ஏதம் ஏதேனும் நிகழ்வுழியன்றிப் பிறகாலத்தே, தலைவி தனது நாண் காரணமாகத் தனது களவொழுக்கத்தினைத் தமர்க்குப் புலப்படுத்துவாளல்லள் (112). ஊரில் அம்பலும் அலரும் பரவுதலால் வருந்துதலுறுவோள், தலைவனோடு பிரியாது உடனுறைதலை யுறுதியாக உட்கொண்டு, விரைவில் அவனை மணத்தற்கு இடையூறு நிகழும்வழி, அவனோடு உடன்போக்கினைத் துணிவாள் (225).

'ஒருதலை உரிமை வேண்டியும், மகடூஉப்
பிரித லச்ச முண்மை யானும்,
அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்குமென்று
அஞ்ச வந்த ஆயிரு வகையினும்,
நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்,
போக்கும் வரைவும் மனைவிக்கண் தோன்றும்.'

தலைவனை மணந்து இல்லறம் பேணும் தலைவி, அவன் பொருள் தேடப் பிரிந்து வேற்றூர் செல்லக் கருதும் வழி கடத்தற்கரிய சுரமென்று கூறித் தலைவனைத் தடுத்தலுமுண்டு. பாலையின் கொடுமை கூறித் தலைவன் அவளை உடனழைத்துச் செல்லாது இல்லத்தில் விடுத்துச் சேறலுமுண்டு (216).

'சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே'

தலைவன் கூறிச் சென்ற நல்லுரையை மனங்கொண்டு தலைவி இல்லிலிருந்து நல்லறம் செய்து ஆற்றியிருப்பள்.

அவனுடைய பரத்தையர் தொடர்பினைப் பொறுக்கமாட்டாதாள், அவன் ஊடலுணர்த்தவும் உணராது புலந்தவழி, தோழி தலைவனை 'அன்பற்றவன், கொடியன்!' என்று இயற்பழித்ததனைப் பொறாது. தலைவன் தமக்கு இன்றியமையாத உறவினன் எனவும் அவனே தம்பால் அன்பில்வழித் தம் புலவி அவனுக்குத் துன்பம் பயவாது எனவும் கூறுவள் (159).

'அவன்குறிப் பறிதல் வேண்டியும், கிழவி
அகன்மலி ஊடல் அகற்சிக் கண்ணும்,
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே'

தலைவனை எப்பொழுதும் வழிபட்டு வாழுமவள் புலவிக்கண்ணும் ஊடற்கண்ணும் அவன் பணிவை ஏற்றுக்கொள்வள் (160, 227)

- (தொடரும்)