கற்பே காணிக்கையா?
இரா. செம்பியன்

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று - குறள்

பெண்பித்துப் பிடித்தலையும் சாமி யார்கள்
பெருகிவிட்டா ரின்றைக்கு நாட்டி லெங்கும்
கண்மூடித் தனமாக மக்க ளந்தக்
காமுகரின் கால்களிலே விழுகின் றார்கள்
உண்மையான இறையுணர்வை வணிக மாக்கி
ஊருக்கூர் கடைவிரித்து வருகின் றார்கள்
என்சொல்லித் திருத்துவதிக் குமுகா யத்தை
எனத்திகைத்தே அறிஞரெலாம் விழிக்கின் றார்கள்

ஆசையச்ச மென்கின்ற இரண்டை வைத்தே
ஆட்டிவைக்கின் றார்கள்இந்த உலகை எல்லாம்
காசுபணத் தோடன்றிக் கற்பைக் கூடக்
காணிக்கை கேட்கின்றார் கடவுள் பேரால்!
மாசுமறு வற்றவர்போல் நடிக்கு மிந்த
மாக்களினால் இறையுணர்வே மறைந்து போகும்
பேசுகிறோம் கடவுளிடம் நேரி லென்று
பிதற்றுபவர் தகுதியினைக் கீழே காண்மின்!

முடியோடே இருந்தாலும் சாமி யார்தான்!
மொட்டையடித் திருந்தாலும் சாமி யார்தான்!
குடியோடே இருந்தாலும் சாமி யார்தான்!
குடும்பத்தோ டிருந்தாலும் சாமி யார்தான்!
பிடிச்சாம்பல் வைத்திருந்தா லதுவே போதும்
பிறகெந்தத் தகுதியுமே தேவை இல்லை
படுமூட ரெத்தனைப்பேர் சாமி யாராய்
பவனிவரு கின்றார்மேற் கண்ட வாறு!

சாமியாரால் அழிந்தொழிந்த குடும்ப மூரில்
சரியாகக் கணக்கெடுத்தால் பாதி தேறும்
ஆமிந்தக் கயவரினால் கெடுக்கப் பட்டோர்
அழக்கூட முடியாதே வெளியில் சொல்லி
ஏமாற்றி ஊரைஎலாம் பொருள்ப றித்தே
இரிசாலா அனுப்புகின்றா ரிறைவ னுக்கு?
நாமிவரை ஊருக்கூர் கவனிப் போமேல்?
நாங்களில்லை சாமியாரென் றோடிப் போவார்!