கொல்லங்கே தமிழினத்தை என்று சொல்லிக்
கொடுக்காதே சிங்களர்க்குப் படைக்க லங்கள்
நல்லாண்மை என்பதுதான் நடுநி லைமை
நாடாள்வார் பண்பிலது தான்த லைமை
வல்லாண்மை என்பதெலாம் செருமேற் சென்று
வளையாமல் வெல்வதனை வீர மென்பார்
இல்லாதார் எளியோர்பால் பரிவு கொண்டே
இயன்றவரை உதவுவதை ஈர மென்பார்.
தள்ளாடும் மந்திகட்குக் கள்ளை வார்த்துத்
தருவதுபோல் உதவுகின்றீர் சிங்க ளர்க்குத்
துள்ளாட்டம் போடுகின்றார் அதனா லங்கே
துணையாக இருப்பதனால் நீயும் இங்கே
பொல்லாத சிங்களர்க்குப் பரிந்து சென்று
போகாதே தமிழகத்தில் வலிமை குன்றி
உள்ளுக்குள் குமுறுகின்ற எரிம லைமேல்
உட்கார்ந்தே இருப்பதைநீ உணர வேண்டும்.
இந்தியப்பேர் அரசேஉன் இருப்பு நெஞ்சம்
இரங்காதா எள்ளளவும் ஈழத் தின்பால்
நிந்தனைக்கே ஆளாவாய் அரிய ணைமேல்
நீஇருக்க முடியுங்கொல் நீண்ட நாட்கள்?
இங்கிருக்கும் தமிழர்களும் இந்தி யர்தான்
ஏன்ஏற்க மறுக்கின்றாய் இதனை நீயும்
சிந்தித்துப் பார்எங்கள் ஈழ மக்கள்
சிந்துகின்ற கண்ணீரில் மூழ்கிப் போவாய்!
இனவாத சிங்களர்க்கே எடுத்துச் சொல்லி
இனிவேண்டாம் போர்அதனை நிறுத்தச் சொல்வாய்
தனித்தீழ மக்களங்கே வாழ்வ தற்குத்
தடையற்ற நிலையங்கே உருவாக் கித்தா
இனியேனும் தலையிட்டு நடுநின் றாய்ந்தே
ஏற்புடைய தீர்ப்பொன்றை வழங்கு வாய்நீ
மனிதநேயம் என்றெதையோ சொல்லு வாயே
மறந்துவிட்டாய் போலுமதை இன்று நீயே!
-இரா. செம்பியன்
தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம்
மேட்டுப்பாளையம் சாலை, கொங்கம்பட்டு,
விழுப்புரம் மாவட்டம்-605105. பேசி 2699485