பாவலர் பரிசுதிட்டம்-37இல் பரிசு பெற்றவர்
 |
| பெயர்: | மணிமேகலைகுப்புசாமி |
| பிறந்த நாள்: | 25.10.1956 |
| தந்தையார்: | இராம. சிவசுப்ரமணியம் |
| தாயார்: | பாவேந்தரின் மகள் இரமணி சிவசுப்ரமணியம் |
| கணவர்: | சபா. குப்புசாமி |
|
| மகன்: | முகிலன் மென்பொருள் பொறிஞர் |
| கல்வித்தகுதி: | பள்ளிப்படிப்பு |
| வழிகாட்டி: | பாவலர் பண்ணை |
| படைத்த நூல்கள்: | 1. சிட்டுக்குருவியின் சின்னக்கவலை
2. அழகியல்
3. தோப்பு ( மரபு பாக்கள்) |
| முகவரி: | 44, நான்காம் குறுக்குத்தெரு, குறிஞ்சிநகர், புதுச்சேரி - 605008. தொலைபேசி : 0413-2255693 |
பாவலர் பரிசு திட்டம்-38இல்
உரூபா 500 பரிசு பெறும் பாடல்:
1.உழைப்பு நல்கிடும் வெற்றியே வெற்றியாம்
ஊழல் செய்து பெறுவது வெற்றியா?
பிழைகள் செய்தும் பணத்தை இறைத்துமே
பிடுங்கிக் கொள்கிற வெற்றியும் வெற்றியா?
குழைந்து கும்பிடு போட்டுக் குறுக்கினில்
கொள்ளை கொள்கிற வெற்றியும் வெற்றியா?
விழையும் வெற்றி நினது திறமையால்
விளைந்து வந்தால் நிலைத்து நிமிருமே!
-வே. இரா. சிவஞானவள்ளல், வேலூர்.
வெளியீட்டுக்குத் தேர்வு பெற்ற பாடல்கள் (வரிசைப்படி)
2.வாழ்க மானுடம்! மண்ணகம் வாழுயிர்!
வாழ்க மாமழை! விண்!நிலம்! தீ!வளி!
வாழ்க தேன்மொழி! செந்தமிழ்! செம்மொழி!
வாழ்க மாண்புயர் வள்ளுவர் சொன்னெறி!
வாழ்க சீருயர் தென்னவர் வாழ்வியல்!
வாழ்க பாருல கேத்துபண் பாடறம்!
வாழ்க எம்தமிழ் நாடினம் வென்றுமே!
வாழ்க அன்புடன் இன்பமாய் என்றுமே!
-கருவை. குழந்தை, கரூர்.
3.ஆடு மாடுகள் ஆர்ந்திடும் புற்றரை
ஆய்ந்து வந்தடை ஆரியப் புல்லர்கள்
நாடு காத்திடு வேந்தரை நாடியே
நன்று சொல்பவர் போலவே நஞ்சுரை
தேடித் தந்(து)அவர் தீவிய நெஞ்சினைத்
தீமை வாழிட மாக்கித் திரித்தவர்
நாடு காத்திடும் மேனிலை நண்ணினர்
நாமும் கண்டிது நம்நிலை ஓர்ந்திலம்.
-வே. ச. திருமாவளவன், புதுச்சேரி.
4.பண்டு தொட்டுநம் பண்புடை மாந்தர்கள்
பழகி வந்தது தைம்முத லென்பதைக்
கண்டு போற்றிய நாள்முதல் மீண்டதைக்
காண எண்ணியே முன்னவ ராண்டினை
இன்ப மாகவே ஏற்றிடு வோமெனும்
இனிய செய்தியா லின்புற்று நன்றியைத்
தொண்டு செய்தவர் யாவரு மேற்கவே
தொடர்ந்து தைம்முத லாண்டைத் தொழுவமே!
-புலவர். பூங்கொடி பராங்குசம்.
5.சொந்த மண்ணிலே நந்தமி ழர்களைச்
சூழ்ந்து சிங்களர் கொன்றழிக் கின்றனர்
இந்த வன்செய லென்றுதா னோயுமோ?
எந்த வல்லர சும்மிதை மாற்றிட
முந்தி நல்வினை யாற்றிட வில்லையே!
மூண்ட போரிது நின்றிட வேண்டுமே!
மங்கி மாய்வரே மாசுள சிங்களர்
வாகை சூடவே நம்மவர் வெல்வரே!
-பாவலர். பொன். பசுபதி. புதுச்சேரி.
6.பெற்ற தாய்மொழி பேணல் அறிகிலான்
பின்னும் ஈங்கவன் பேரும் தமிழனா?
கற்ற லின்பயன் கண்ணெனத் தன்மொழி
காத்து நின்றதன் காணரும் பெற்றியை
உற்ற தாம்வழி ஓர்ந்தே உலகெலாம்
ஓங்கு மாறும் ஒளிர்ந்திடச் செய்வதாம்.
பற்று ளார்செயல் பாங்குடன் இந்நெறி
பற்றி யாங்கணும் பைந்தமிழ் சேர்த்தலே!
-கலைமாமணி, கோவி. கலியபெருமாள்.
7.என்று தோன்றிய தென்றிது நாள்வரை
யாண்டும் ஆய்ந்துகண் டாரிலாத் தொல்தமிழ்!
என்றும் தாள்பணிந் தேஇரப் போர்க்கெலாம்
ஈயும் பண்புடை இன்றமிழ், ஆண்டெனும்
ஒன்றில் லாததோ? ஒன்னலர் ஆண்டினை
ஓம்பல் நாணுடைத்(து) ஓ!தமி ழோஅது
பொன்று மாறுசெய்! பொங்கலில் தீஞ்சுவை
பொங்கத் தோன்றுநம் ஆண்டினைப் போற்றுமே!
-மு. திருவாணன், திண்டுக்கல்.
8.உற்ற நாள்முதல் அன்புடன் ஆட்டியும்
ஊட்டி இன்னுடை பூட்டியும் கல்வியைக்
கற்கு நாளிலே கைத்துணாக் கட்டியும்
கல்விக் காயிரம் வாரிஇ றைத்ததும்
வெற்றுத் தொண்டெனக் காணுறும் மைந்தர்கள்
விட்டுப் போந்தனர் இன்னலில் நீந்திவாழ்
பெற்ற தந்தையைப் பேதுற வைத்தலின்
பிள்ளைஅற்றதோர் இல்லறம் ஏற்றதே!
-மு. இராம. கனகராசன், புதுச்சேரி - 3.
9.இந்த நாடுள மாநிலம் யாவினும்
எல்லை யாவையும் ஏற்புற மாற்றிட
இந்த நாடதன் ஆட்சியர் எண்ணிடும்
இந்த வேளையில் இன்தமிழ்ச் செல்வரீர்!
முந்திக் கொள்வமோ; முன்பிழந் திட்டநம்
மேழி வேரெனும் மேற்றலைக் காவிரி
செந்த மிழ்நிலஞ் சேர்ந்திடச் செய்வமே;
சேர்ந்து நம்மருஞ் சீர்நிலம் மீட்பமே!
-பொறிஞர் அகன், புதுச்சேரி.
10.செந்த மிழ்தனைச் செப்பி மகிழ்ந்திலார்
செய்யுள் செய்திடும் சீர்மை உவந்திலார்
எந்த நாளிலும் எந்த விடத்திலும்
இன்ற மிழ்தனிற் பேச விரும்பிலார்
சொந்த நன்மையாம் ஒன்றைக் கருதியே
சுற்றி உள்ளவர் சொக்கிடக் காண்குவார்
வெந்த தைத்தின்று வந்ததைச் சிந்திடும்
வக்கி லாதவர் வண்டமிழ் ஆய்வரோ?
-புலவர் சயராமன், கள்ளக்குறிச்சி.
11.தன்னைப் பெற்றநற் றாயை வணங்கிடார்
தந்தை சொல்லினைத் தன்துணை யாக்கிடார்
அன்னை கொட்டிடும் அன்பினை ஏற்றிடார்
அல்லல் நீங்கிட ஆரியந் தேடுவார்
பொன்னை விற்றுயர் பூசைகள் வேண்டுவார்
போலி வாழ்வினைப் போற்றிட எண்ணுவார்
தென்னை கண்டிவர் சீர்பெறார் தன்மனம்
திரியும் நாய்வால் திருந்திடார் என்றுமே!
-சு. சொக்கலிங்கம், புதுச்சேரி.
12.மேலை நாட்டிலே மேன்மைப் பெரும்பணி
மேவும் வங்கியில் கூடும் பணநிலை
வேலை செய்பவர் வீறு பெறுகிறார்
வேண்டு மின்பம் எதுவும் அடைகிறார்
ஆலை மாடென ஆங்கே உழைக்கையில்
ஆன பண்பை அடியோ டிழக்கையில்
சோலை வண்டாய்ச் சுழன்றவர் சோர்ந்தபின்
சொந்த மண்ணிலே வந்துயிர் வாழ்வதோ?
-கு. தட்சணாமூர்த்தி, புதுச்சேரி - 4.
13.இந்த வாழ்வினில் ஈட்டிய மாண்பெலாம்
இங்குத் தேம்புவார்க் கீயா தொழிபவன்
எந்த வூரினுக் கென்றிவன் சேர்த்தவை
ஏற்றிச் செல்வனோ செப்புவா ரிங்கிலை
வெந்து மாள்பவர் வேட்டவை யூன்றிடின்
விண்டு மீளலாம் வீங்கிடும் மேன்மையே
வந்த வர்க்கே வழங்கிடும் வண்மையுள்
வாடும் மானத்தைக் காத்திடின் வாழ்த்துமே!
-புலவர் தங்க. ஆறுமுகன்.
முன்னரே பரிசு பெற்ற பாடல்கள்:
1.மண்ணின் தூய்மையில் மாசு கலந்திடும்
மக்கள் வாழ்வினில் நோய்கள் பெருகிடும்
விண்ணின் நீர்ச்சரம் வீழ்தடம் மாறிடும்
வெள்ளம் பொங்கி நிலந்தனைத் தாக்கிடும்
கண்ணில் நீராய்க் கலங்கிடுஞ் சூழலைக்
கண்டும் நல்வழி காண்கிலர் ஆய்வரும்
உண்ணச் சோறிடும் ஊனுடல் நம்நிலம்
உலகின் நன்மை உணர்ந்திடல் தீயதோ?
-மணிமேகலை குப்புசாமி, புதுச்சேரி - 8.
2.துன்பம் நேர்கையில் சோர்வெனைச் சூழ்கையில்
சுற்ற மேபகை யாய்வரும் வேளையில்
அன்பு நன்னெறி யாலெதிர் கொண்டிட
அன்னை மாமொழி யாகிய செந்தமிழ்
என்னை உய்த்ததே! ஏற்றம ளித்ததே!
என்றும் நெஞ்சினில் நின்றுநி லைத்ததே!
பன்ன ருந்துயர் பற்பல தோன்றினும்
பண்பு றுந்தமி ழாலவை நீங்குமே!
-புலவர் மா.சு. மணி, திருக்கழுக்குன்றம்.
கருத்தூன்றுக
பாவலர்களே, சென்ற இதழ்ப்பாவலர் பரிசுதிட்டத்தில் கேட்டிருந்த பாடல் கட்டளைக் கலிப்பா. இது உங்களுக்குப் பழக்கமானது தான். இதன் இலக்கணம் யாப்பருங்கலக்காரிகையின் இறுதிப்பகுதியில் மாச்சீர் முன்வரும்' என்ற பாடலாகக் கொடுக்கப்பட்டுள்ளது, பாவலர் பண்ணை நூலின் 96ஆம் பக்கத்தில் இதன் இலக்கணம் மேலும் விரிவாக உள்ளது. 15-3-2007 தெளிதமிழில் அவ்விலக்கணம் இன்னும் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாரதியார் பாடல்களில் சுயசரிதை-23 என்ற பகுதி முழுவதும் கட்டளைக் கலிப்பாவே சென்ற இதழிலும் முகப்புப் பாடல்கள் இரண்டும் இவ்வகையில் அமைந்திருப்பது சுட்டிக் காட்டப்பட்டது. அப்படியிருந்தும் பலர்க்கு இவ்விலக்கணம் இன்னும் பிடிபடவில்லை. மீண்டும் இவற்றை ஒருமுறை பார்த்து நெஞ்சில் நிறுத்துக. சென்ற பரிசு திட்டத்திற்கு வந்திருந்த பாடல்களில்,
1) 2-3-4, 6-7-8ஆம் சீர்களில் இடையில் வெண்டளை இருக்கும் என்பதைச் சிலர் கருத்தில் கொள்ளவில்லை.
2) இவ்வகைப்பாவில் 1-2, 5-6 ஆம் சீர்கள் மாமுன் நேராக வருவது கட்டாயம் என்பதைச் சிலர் மறந்தனர்.
3) நேரால் தொடங்கும் அரையடியில் 11 எழுத்தும், நிரையில் தொடங்கும் அரையடியில் 12 எழுத்தும் (ஒற்று நீங்கலாக) இருக்கும் என்பதையும் சிலர் கருதவில்லை.
4) அரையடி இறுதிச் சீர்கள் அனைத்தும் விளமாக இருக்க வேண்டும்.
5) மக்கு+ஆரியம், கற்றிடு+ஒண்டமிழ், இன்று+ஆண்டிடும், கொண்டிடு+என்பும், நச்சு+ஊணாய், உணவது+ஊண்பையில் இவை புணர்ந்தால் சீர் சிதையும்.
6) எங்கிருக்கின்றனோ? மேபெறும் - இவை சொல்வழுக்கள்.
7) ம-மு, ச-செ-மோனையாகா.
8) "தமிழர்தன்னை' என்பது "தமிழர் தம்மை' என்றிருக்க வேண்டும்.
9) அயற்சொற்கள் : மேகம் (முகில்) பாதை (வழி), அன்னியர் (அயலார்)
பாவலர் பரிசுதிட்டம் - 39
பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன்;
பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார்குழ லார்திறத் தேநின்று
குடிகெடு கின்றேனை,
இரவு நின்றெரி யாடிய எம்மிறை
எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டோமே.
-(திருவாசகம், அதிசயப்பத்து - 5)
ஓடு கின்றனர் நன்கொடை அரிசியை
உடைகளை வாங்குதற்கே.
தேடு கின்றனர் ஆங்கிலப் பள்ளியைச்
சிறுவரைச் சேர்ப்பதற்கே
நாடு கின்றனர் பட்டமும் தலைமையும்
நாட்டினை ஆள்வதற்கே,
போடு கின்றனர் ஒப்போலை - ஆட்சியில்
பொறுக்கிகள் புகுவதற்கே!
- இரா.தி.
இப்பாடல்களின் அமைப்பில் விரும்பிய பொருளமைய ஒரு பாடல் படைத்து, வரும் கும்பம் உ0 (3.3.2008) க்குள் விடுக்க.