
|
மனம் திறந்த மடல்கள்
புலவர் த. இராமலிங்கம், காரைக்காடு.
17-11-2007 தெளிதமிழ் இதழில் 'தரு' - என்பதை வடசொல் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பெரும்புலவர் இளங்குமரனார் அவர்கள் தமிழுலம் மதிக்கும் தமிழறிஞர்களுள் ஒருவர். சிலவாண்டுகளுக்கு முன் கரூரில் நடந்த இலக்கிய விழாவில் அவரின் பொழிவைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தரு என்பது பற்றி அவருடைய கருத்துப் பின்வருமாறு அமைந்திருந்தது. வேர் தருகிறது, பட்டை தருகிறது, பூ தருகிறது, காய் தருகிறது, கனி தருகிறது, நிழல் தருகிறது. இப்படி எல்லா வகையாலும் தன்னைத் தருவதாலே அதற்குத் 'தரு' என்று பெயர்வந்தது. நம்மவர் அதை வடசொல் என்று ஒதுக்குகிறார்கள். ஒதுக்கவேண்டுவதில்லை. அது 'தமிழே' என்றார். அதனால் என்னுடைய பாடலில் 'தரு' என்பதைப் பெய்திருகிறேன். அது குறித்துத் தங்கள் கருத்தறிந்தால் கூடுதல் செய்தியைத் தெரிந்து கொண்டோம் என்ற நிறைவு என்னுள் தோன்றும். பல வடசொற்கள் தமிழ்ச் சொற்கள்போன்றே தோற்றம் தருகின்றன. அவற்றையயல்லாம் தொகுத்து அவற்றுக்குரிய தமிழ்ச் சொற்களுடன் நூலாக வெளியிட்டால் என்போன்றோர்க்கு உதவியாக அமையும். தமிழுக்குத் தொண்டாகவும் இருக்கும். ஒவ்வொரு பக்கமும் பிழை - சரியானவற்றை வெளியிடுவதைப் போன்றே - வடசொல் தமிழ்ச் சொற்களையும் வெளியிடலாம். செய்வீர்கள் என்று நம்புகிறேன். தங்கள் தொண்டால் தமிழ் வளம் பெறட்டும்; தமிழர் தலை நிமிரட்டும். வேர்ச்சொல்லாய்வில் வல்ல பெரும்புலவர் அப்படிச் சொல்லியிருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. வடமொழியும் தமிழ்மொழியும் கற்று வல்லவர்களே அப்படித் தொகுத்து வெளியிடும் தகுதி படைத்தவர்கள். எனக்கு அத்தகுதியில்லை எனக்குத் தெரிந்தவரையில் அயற்சொல்லாகத் தோன்றுவனவற்றை எடுத்துக்காட்டுகிறேன். அது பிழையாகவும் இருக்கலாம். - இரா. தி. புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி.
சுறவம் இதழ் முகப்பில் ஆசிரியர் வழங்கியுள்ள பாடல்களில் முற்றிடாக் காளையும் நன்றுபேறு முதிர்ந்திடாக் கன்னியும் நல்ல சேய்களை நல்கிடல் ஒல்வதோ? எனும் வரிகள் "சிறுபிள்ளைவிட்ட வேளாண்மை வீடுவந்து சேராது" எனும் பழமொழியை நெஞ்சில் நிழலாடவிட்டது. திருவள்ளுவர் படித்த கல்லூரியின் முகவரி கேட்ட நடிகர் விசயகாந்தனாரின் வினவலுக்கு நறுக்குத்தறித்தாற்போல் பொறுக்கி எடுத்த வரலாற்றுப் பின்னணிகளையும் செந்நாப்போதாரின் சொல்லாடலையும் முன்னிறுத்திப் பேரா. மதிவாணன் இழையோட விட்டிருந்த மொழிவுகள் நடிகரின் அகக்கண்களைத் திறந்துவிட்டு வள்ளுவத்தில் மனம்பதிக்கச் செய்திருக்கும். அவர் இதனைப்படித்திருந்தால் என்பதே என் துணிவு. ஆறு. தமிழ்நிதிவேந்தன், கதிர்காமம்.
மாற்றாந்தாய் மனப்போக்கில் தமிழக, புதுவை, நடுவண் அரசுகள் தமிழ்மொழியைப் பொறுத்தமட்டில் நடந்து கொள்ளல் பன்னெடுங்காலமாகவே நடந்து வருதல் தெள்ளத்தெளிவு. தமிழரை வாக்குப்போடும் வெறும் பொறியாகவே இதுவரை பயன்படுத்திவருகிறார்கள் நம்மை ஆள்வோர். சட்டம், ஆணை இன்னோரன்ன மற்றவை யாவும் வெறும் கண்துடைப்பே! இதனால் எத்தனையோ துறைகளில் தமிழன் தகுதிகள் நிறையப் பெற்றிருந்தும் வேறுயாரும் ஏறெடுத்தும் காண்பதில்லை! எத்தனைபோராட்டங்கள், கோரிக்கைகள், கொள்கைகள் நிறைவேறியும் அவை ஒன்றன் பின் ஒன்றாகக் கிடப்பில் போடப்படுகின்றன. வெறுங்கொள்கை அளவிலேயே அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு முடங்கிவிடுகின்றன. கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே என்ற பாவேந்தரின் பாடல்வரி இதற்கும் பொருந்தும். "பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்'' என்பதுநடைமுறை மாந்த வாழ்க்கை நெறியாக உள்ளது! இனி நாம் வரும் தேர்தலைப் புறக்கணிக்கும் கட்டாயக் காலக்கட்டத்தில் வாழ்கிறோம் என்பதை எண்ணிப்பார்த்திடல் தவிர்க்க வொண்ணாதது. பொறிஞர் அகன், மாத்தூர்.
ஆசிரியவுரையில், பாரதி கூறியுள்ளதுபோலச் சாத்திரங்களும் பொய்யே! பிணந்தின்னும் கழுகுகளாக ஆட்சியர் கெட்டுள்ளனர். முறைசெய்து காப்பாற்றும் அரசு நமக்குக் கடந்த 3000 ஆண்டுகளாக வாய்க்கவே இல்லை! தொல்காப்பியர், கி.மு. 865 மேழ வெள்ளுவா நாளில், விளவங்கோடு வட்டம் காப்பிக்காடு என்னும் ஊரில் பிறந்தார் என, ஆய்வறிஞர் இரா. மதிவாணனார் வரையறை செய்துவிட்ட பின், மேலும் மேலும் கருத்துவேறுபாடுகளை வளர்த்துக்கொள்ளுவது முறையா? என் சிறுகதையைப் பாராட்டியுள்ள விமலானந்தன் ஐயர், ஞானசேகரன் ஐயர் ஆகியோர்க்கு நெஞ்சார்ந்த நன்றி. பா. இராமமூர்த்தி, சென்னை.
தெளிதமிழ் 15-01-2008 இதழில் எமது தன் முன்னேற்றச் செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள். நன்றி. ஒரிரு நாள்களில் உரு. 100 (மற்ற இதழ்களுக்கு அனுப்பியதுபோல விளம்பரக்கட்டணம்) அனுப்பி வைப்பேன். பொறிஞர் அகன், மாத்தூர்.
"நாராய் நாராய்" என்று தொடங்கும் பாடல் குமரிப்பேராறு கடலுள் மூழ்குதற்கு முன் கி.மு. 5000 அளவில் பாடப்பட்ட அரிய பாடலன்றோ. இப்பாவின் ஆசிரியர், இப்பாடல் உள்ளநூல் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டுகின்றேன். (குமரிப்பேராறு கடலில் மூழ்குதற்குமுன் வழுதி கூடல் எனும் மதுரை இருந்ததில்லை. ஆதலின் இது பிற்காலப்பாடலே. தனிப்பாடல் திரட்டில் சத்திமுத்தப்புலவர் எழுதிய பாடலாக இது குறிக்கப்பட்டுள்ளது.) புடவை என்ற சொல் தமிழா? (ஆம். புடைவை என்ற வழக்குச் சொல்லே பின் புடவையாகவும் ஆயிற்று.) பெற்றச் சகரமாம், இல்லைத் தானே, மெல்லொலித் தேவைப்படுமிடத்து என வருதல் சரியா? (இல்லைத் தானே என ஒற்றுமிகுந்து வருவது சரி பிறவிரண்டும் பிழை.) |