கருத்து மேடை
புலவர் மு. முனிசாமி, வேலூர்.

1. 15-01-2008 தெளிதமிழ் வினாதலும் விடுத்தலும் என்ற பகுதியில் வந்துள்ள தமிழ்நாடு என்ற தொகைச்சொல் பிற சொற்களோடு இணையும்போது எங்ஙனம் வரும் என்பதை வ.சுப. மாணிக்கனார் அவர்கள் தம்முடைய 'தொல்காப்பியக் கடல்' என்ற நூலில் பின்வருமாறு நூற்பாவாக வரைந்துள்ளார்.

'தமிழ்நா டென்னும் தண்ணார் தமிழ்ச்சொல்
பொதுநலங் குறிக்கும் பொருண்மைத் தாயின்
இருவழி யானும் இரட்டும் ஒற்றே'

'அரசினை அதன்மே லாட்சியைக் குறிப்பின்
இரட்டல் வேண்டா இயல்பா கும்மே'

இது பற்றி உங்கள் விளக்கம் தேவை.

(தமிழ்நாடு என்பது எப்பொருண்மைத்தாயினும் அல்வழியில் ஒற்றிரட்டாது என்பதும், அரசினையும் ஆட்சியையும் குறிக்கும் போதும் வேற்றுமையில் ஒற்றிரட்டும் என்பதும் தமிழ் இலக்கண நூல்களின் முடிவுகள். (தொல். குற்று. புண. 20, நன். 183) அங்ஙனமாக, தொல்காப்பியக் கடலாக விளங்கும் முனைவர் வ.சுப.மா. அவர்கள், தமிழ்நாட்டு எழுந்தது என்றும் அல்வழியில் இரட்டும் என்றும், தமிழ் நாடரசு, தமிழ்நாடாட்சி என்று வேற்றுமையில் இரட்டா என்றும் கூறியிருப்பார் என்பதை நம்பமுடியவில்லை. அதுபற்றிய அவர் கூறும் விளக்கத்தைப் பார்க்க வேண்டும். - இரா.தி)

புலவர் ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

2. 16-12-2008 தெளிதமிழ் 7ஆம் பக்கத்தின் இறுதிப்பகுதியில் வரும் 'மீடலு முண்டு' என்பது மீளலுமுண்டு என்று இருக்க வேண்டும். (அச்சுப்பிழையாகவும் இருக்கலாம்) கட்டுப்பாடு குறித்து என்பது போலவே நாட்டுப்பற்று குறித்து என்பது. ஒன்று மிகாமல் இருக்க வேண்டும்.

('மீடலும்' என்பதில் அச்சுப் பிழையும் இல்லை; ஆசிரியர் பிழையும் இல்லை. மீள்+தல் = மீடல். மீள்+அல் = மீளல். தல், அல் ஆகிய இரண்டும் தொழிற்பெயர் இறுதிநிலைகளே. நீள்+தல் = நீடல், நீள்+அல் = நீளல், என வருவதும் காண்க. இப்படி இருக்க வேண்டும் என்று, அறியாமையால் இழைத்த பிழையை எடுத்துக்காட்டுவது போலப் புலவர் எழுதியிருப்பது விரும்பத்தக்கதாயில்லை என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்ளுகிறேன்.)

(தொல்காப்பியர், நன்னூலார் முதலிய சான்றோர்கள் இங்கு ஒற்றுமிக வேண்டும் என்று கூறியுள்ள விதிகளையே நான் பின்பற்றுகிறேன். உங்கள் கருத்துப்படியே மரபுக்கு மாறாக எழுதுமாறு அடிக்கடி எழுதி உங்கள் காலத்தை விணாக்க வேண்டாம் என்று அன்போடு கூறிக்கொள்கிறேன். - இரா.தி.)