ஆண்டு : க௪
இதழ் : கக
தி. ஆ. உ0௩௯, கும்பம்,
13 - 02 - 2008
ஏது வழி?

சொந்தத் தமிழினம்தன் சொந்த உடன்பிறப்பை
அந்தோ! பகைவர் அழிக்கவிட்டுப் பார்த்திருக்கும்
இந்தக் கொடுமைவே றெங்கே நடக்குமடா?
முந்தை வினைஇதுவோ? மூப்பிலுற்ற கோழைமையோ?

தில்லி எனுங்கொடிய தீநச்சுப் புற்றரவம்
கொல்லப் படமெடுத்துக் கூத்தாடி நிற்கையிலும்
பல்லை இளித்ததன்முன் பால்வார்க்கும் ஒற்றைஇனம்
இல்லை தமிழினம்போல் இல்லைவே றில்லையடா!

தென்னாட்டுப் பார்ப்பனரும் தீயவட ஆட்சியரும்
எந்நாளு மேதமிழர் ஏற்றமுறத் தாம்பொறுக்கார்
பின்னால் இருந்தந்தப் பேய்வெறியர் சிங்களர்க்கே
பொன்ஆ யிரங்கோடி போர்ப்படையும் ஈந்தாரே!

தன்மானம் விற்றுத் தமிழரசும் வாழுதடா!
தென்னாட் டுறுப்பினரா? தில்லிக்கு நாய்களடா!
பொன்ஈழம் சாகப் பொறுக்குதிலை நெஞ்சமடா!
என்னேநாம் செய்வமடா? ஏதுவழி? சொல்வையடா!

-ம.இலெ.தங்கப்பா.