
|
உலகத் தாய்மொழி நாள்
ஆண்டுதோறும் உலகநாடுகளில் பிப்ரவரி 21 தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தரும் நன்மைகள் அளவிட்டுச் சொல்ல முடியாது. அதனால் தான் 'பீரம் பேணின் பாரம் தாங்கும்' என்கிறார் ஒளவையார். (பீரம் = தாய்ப்பால்) குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைப் போன்றதே மக்களுக்குத் தாய்மொழி. தாய்மொழி வழிக்கல்வி பெறாத மக்கள் வாழும் நாட்டில் வறுமை ஒழியாது என்பர் அறிஞர். தாய்மொழி வழியில்தான் குழந்தைகள் சிறப்பாகக் கற்கும். தாய்மொழிவழிக் கல்வியால் தான் அறிவு விளக்கமுறும். அறிவுவிளக்க முற்றால்தான் அறியாமை காரணமாகக் கொள்ளும் மூடநம்பிக்கைகள் நீங்கும். குற்றங்கள் குறையும். தாய்மொழிக் கல்வியறிவு பெற்ற மக்கள் தமக்குத் தேவைப்படும் எந்த மொழியையும், எத்தனை மொழியையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் பெறுவர். அத்தகைய மக்கள் உலக நடப்புகளை, அறிவியல், பொருளியல் முன்னேற்றங்களை அவ்வப்போது அறிந்து உலகத்தோடு ஒட்ட ஒழுகும் பெற்றிமை சான்ற மக்களாக விளங்குவர். துறவிக்கோலம் பூண்டு, பாலியற் கொடுங்குற்றங்களும் கொலைகளும் பல புரிந்து, இரட்டை வாழ்நாட் சிறையொறுப்புப் பெற்ற கயவனின் கால்களை, சிறைக்கம்பிகளுக்குள் கையை விட்டுத் தொட்டுக்கும்பிடும் முட்டாள்தனம் அப்போது இருக்காது. அறிஞர்கள் ஆய்ந்து கூறிய பிறகும், இல்லாத 'இராமர் பாலத்தை' இடிக்காதே என்று அடம்பிடிக்கும் அறிவுக்குருடர்களும், அவர்களின் ஆதரவைக் கருத்தில் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்குதவும் நல்ல திட்டத்தைத் தள்ளிப்போடும் ஒப்போலைப் பொறுக்கிகளும் அப்போது இருக்கமாட்டார்கள். சுருங்கச் சொன்னால், தாய்மொழிவழிக் கல்வியே ஒரு நாட்டை எல்லா வகையிலும் மேம்படுத்தும். "எல்லாத்துறைகளிலும் தாய்மொழிவழிக்கல்வி அளிக்கப்பட்டிருந்தால் அது நம்முடைய வளத்தை வியப்பளிக்கக் கூடிய முறையில் உயர்த்தியிருக்கும்" என்றார் காந்தியடிகள் (கிராமசுயராச்சியம் பக் .140) 'உலகத் தாய்மொழி நாள்' உருவான வரலாறு 21.2.1952 இல், வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பாக்கித்தான் பகுதி மக்கள் வங்காள மொழியை ஆட்சிமொழியாக ஆக்குமாறு வற்புறுத்தினார். உருது மொழியை ஒரே ஆட்சிமொழியாக ஏற்குமாறு அரசு மக்களை வற்புறுத்தியது. இதை எதிர்த்து மாணாக்கரும் மக்களும் ஊர் வலம் வந்தும் வேலைநிறுத்தம் செய்தும் போராடினர். அவர்களில் பலரை அரசு சுட்டுக் கொன்றது. அது முதல் அங்கே ஆண்டுதோறும் 'தாய்மொழிநாள்' கடைப்பிடிக்க படுகிறது. 1999 இல் உலகநாடுகளின் ஒன்றியம் (UNESCO) பிப்ரவரி 21ஐ உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை 188 நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. வங்காளிகளுக்கு இருக்கும் உண்மையான மொழிப்பற்று, உலகத் 'தாய்மொழி நாளை' உருவாக்கியது மட்டுமின்றி, வங்காள மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட தனிநாட்டையே உருவாக்கிக் கொடுத்தது. மொழியைத் தெய்வமாக வழிபடும் ஒரே இனம் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழர்களின் தாய்மொழிப்பற்று, இன்று தமிழையே உலக அரங்கிலிருந்தே ஒழித்துக்கட்டிக் கொண்டிருக்கிறது. உலகில் உள்ள 6000க்கு மேற்பட்ட மொழிகளும் மாந்த இனத்தின் சொத்து என்று அறிஞர்களால் மதிக்கப்படுகின்றன. அவற்றில் 40 விழுக்காட்டு மொழிகள் நடப்பு நூற்றாண்டில் மறைந்து விடும் என்ற ஏதப்பாட்டினை உலக நிறுவனம் எடுத்துக்கூறி இரங்குகிறது. அவற்றில் தமிழும் ஒன்று என்பது கேட்டு நம் நெஞ்சம் நடுங்குகிறது. இதுபோல் திங்களுக்கு 2 மொழிகள் மேனி மறைந்து வருகின்றனவாம். இதைச் சொன்னால் தமிழன்பர் சிலர் "எவன் சொன்னவன் எங்கள் கன்னித்தமிழ் இறந்து போகும் என்று?'' என்று கொதித் தெழுகிறார்கள். அதில் உள்ள மெய்ப்பொருள் காணாமல், அதற்கான அடிப்படைப்பணிகளை மேற்கொள்ளாமல், "தொல்காப்பியமா சாகும்? திருக்குறளா சாகும்? இப்படிச் சொல்ல யாருக்குத் துணிச்சல் வந்தது?" என்று முழங்குகிறார்கள். அழியும் என்றது மக்கள் வாயில் வாழும் வழக்கு மொழியை; எழுத்து வடிவில் உள்ள இலக்கியங்களையன்று என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சமற்கிருத நூல்கள் அன்றுபோல் இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். என்றாலும் அதனை ஏன் 'செத்தமொழி' என்கிறோம்? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். உலகநிறுவனம் சொல்லுகிறதோ இல்லையோ, தமிழ் மொழி மெல்லச் செத்துக் கொண்டு வருகிறது என்பதை நான் நம்புகிறேன். "Hallo தினேஷ் Speaking, Uncle இருக்காங்களா?" "ya, நான் Aunty பேசறேன்; ஒரு நிமிஷம் lineலே இருக்கியாப்பா?" "O.K. aunty". "Hallo தினேஷ், How are you?" "Fine uncle" "G.M.ஐ meet பண்ணீங்களா?" "Try பண்ணேன். but அவர் ஊர்ல இல்ல. definiteஆ அவரை Meet பண்ணி உனக்கு recommed பன்றேன். So you don’t worry". "O.K. O.K. uncle. நான் அனுப்பிய C.D.இல் song கேட்டீங்களா? எப்படி இருந்தது? Super தினேஷ்! thank you very much" "நான் ஒரு book கேட்டேனே, என்னாச்சு?" O! extreemly sorry uncle. excuse me, இந்த weekலே அனுப்பிடறேன். O.K.? இன்றைய படித்த தமிழர் இருவரின் இயல்பான உரையாடல் இது. இதைவிடக் கலப்பில்லாத தமிழில் அவர்களால் பேசவும் முடியாது. அப்படியே பேசினாலும் அவர்களுக்கு அது விளங்காது. இது தான் இன்றைய நிலை. இந்த உரையாட்டில் உள்ள 73% சொற்களில் தமிழ்ச் சொற்கள் 25 தான். மற்றவை அயற்சொற்கள். இதிலிருந்து இவர்கள் பேச்சில் இன்று 34 விழுக்காட்டுத் தமிழ் தான் எஞ்சியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலம் படிக்காத தமிழர்களின் தமிழில் இன்னும் சற்றுக் கூடுதலான தமிழ்ச் சொற்கள் இருக்கலாம். எஞ்சிய தமிழ் எங்கே? என்றால், 66 விழுக்காட்டுத் தமிழ் செத்து விட்டது என்பது தானே உண்மை? தமிழ்மொழி இல்லாமல் போகும் எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் கதையும் முகவரி இல்லாமல் முடிந்து போகும் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும்? இந்தக் கவலை பெரும்பாலான தமிழறிஞர்களுக்கு இல்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. தாய் மொழியின் அழிவு குறித்து மொழியுணர்வு இல்லாத வர்களுக்குக் கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தாய்மொழிவழிக் கல்வி இல்லாமையால் நாடே தாழ்வுற்று வறுமை விஞ்சி அழிந்து கொண்டிருப்பதையாவது அரசும் மக்களும் உணர வேண்டும். இந்தியப் பெருநிலப்பரப்பில் தாய்மொழிக்கல்வி கல்லாமலே பல்கலைக்கழகப் பட்டங்களும் பெறலாம் என்ற வசை தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் இருந்தது. தமிழ்நாடு அந்த வசையை அண்மையில் நீக்கிக் கொண்டது. புதுச்சேரி மட்டும் தான் அந்தப் 'பெருமை' யைக் காப்பாற்றி வருகிறது. இதற்குக் காரணமான, 'ஆங்கிலவழிக் கல்வியே வேண்டும்' என்னும் மக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், ஆங்கில வழி மழலையர் பள்ளி உட்பட அனைத்தையுமே நன்கொடையாகத் தந்து 'நல்ல' பெயர் எடுத்து வரும் புதுவை அரசும் இதை எண்ணிப்பார்ப்பது நல்லது. ![]() |