ஏரினும் நன்றால்... - சிறுகதை
பொறிஞர் அகன் ஐயர், மாத்தூர்(தொடர்ச்சி)

"வாங்க வாங்க... அன்பு... வேலு.... என்ன. இப்படிக் கூட்டமாய்....?" என்றேன் அன்பு என்னை ஆரத்தழுவிச் சிரித்தார் மகிழ்வோடு! வேலுவும் பிறரும் மகிழ்ச்சி பொங்க "ஐயா, நீங்க செய்த உதவியாலே நம்ம ஊரே மாறிப் போச்சுங்க !

குட்டையிலும், தடுப்பணைகளிலும் தண்ணீர் தேங்கி, கேணியெல்லாம் ஊற்றடிக்குதுங்க. நிலத்தை எல்லாம் உழுது, துவரை, உளுந்து, சோளம், கம்பு விதைச்சிட்டோமுங்க. தோட்டத்தைத் திருத்திக் கடலை, கதிர்ப்பூ விதைச்சிருக்கிறோமுங்க. கேணித் தண்ணியிலேயே பயிர் விளைஞ்சிடுங்க? எங்களுக்குத் தெய்வமா வந்து இப்படி உதவியிருக்கிறீங்க ஐயா. உங்களை நேரில் கண்டு நன்றி சொல்ல வந்தோமுங்க" என்றனர்! எனக்கு மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்தது. அவர்களை மலர்ச்சியோடு வரவேற்று வீட்டிற்குள் கூடத்தில் அமரச் செய்து, அவர்களோடு பேசிக்களித்தேன். அனைவருக்கும் காலை உணவளித்து மகிழ்ந்தேன். கயல்விழிக்கோ இருப்புக் கொள்ளவில்லை!

"நாளைக்கு நாங்கள் வந்து நேரில் பார்க்கப் போறோம், நீங்கள் சொல்வதை நேரில் கண்டால் தான் நான் நம்புவேன்" என்றார்!

"ஐயா ! கல்லறையிலேயிருந்து உயிர்த்து எழுந்த சேசு, தன்னோட அம்மாவுக்கும் தொண்டர்களுக்கும் காட்சி கொடுத்துப் பேசினாராம். அப்போது தோமையார் என்ற தொண்டர் அங்கில்லையாம். அவர் வந்தவுடன் 'சேசு உயிர்த்துவிட்டார், எங்களுக்குக் காட்சி கொடுத்தார், எங்களோடு பேசினார்' என்று சொன்னார்களாம். அதற்கு 'நானும் நேரில் கண்டு பேசித் தொட்டுப்பார்த்தால் தான் நீங்கள் சொல்லுவதை நான் நம்புவேன்' என்றாராம் தோமையார்! அதைப்போல இருக்குங்க நம்ம அம்மா சொல்லுறதும்" என்றார் அருளப்பன் என்ற கிறித்துவர் சிரித்தவாறே. எல்லோரும் மனம் விட்டுச் சிரித்தோம்.

மறுநாள் காலையிலேயே பனையூருக்குச் சென்றோம். ஊரே கூடி வரவேற்றது, எல்லோரும் ஓடைக்குச் சென்றோம். குட்டை, தடுப்பணைகள், மண்கரைகள் என, ஆர்வமுடன் சுற்றிப் பார்த்தோம். நான் நினைத் திருந்ததை விடச் சிறப்பாகவே மழைநீர் தேங்கியிருந்தது! உழவும் விதைப்பும் நடைபெற்றிருந்தன கேணி களிலும் ஓரளவு ஊற்றுநீர்த்தேக்கம்!

"என்னங்க... இடம் மாறி வந்துவிட்டோமா...? அன்று கண்ட அதே நிலமா இது..! ஆகா... அருமையாக இருக்குங்க" என்றவாறு, ஒரு தடுப்பணையின் மேல்நின்று குனிந்து, தேங்கியிருந்த மழைநீரைத் தன் கைகளால் அளைந்து சிறு குழந்தையைப் போல் மனம் பொங்கிச் சிரித்து மகிழ்ந்தார் கயல்!

"கண்ணாரக் கண்டு, மழைநீரைக் கையாலே அளைந்து பார்த்துத்தான் தோமையாரைப் போல நம்ம அம்மாவும் நம்புறாங்க" என்றார் அருளப்பன் சிரித்தவாறே!

"சேசு உயிர்த்தாரோ இல்லையோ.. ஆனால் மெய்யாகவே இந்த நிலம் உயிர்த்துவிட்டதுங்க" ஓடைக் கரைகளிலும் மரங்களை வளர்க்கலாமே என்றார்.

"அடுத்துக் கட்டாயமாகச் செய்ய வேண்டிய வேலையே அதுதானே ! ஓடையின் ஓரங்களில் நொச்சி, ஆடா தோடை, பூவரசு, ஆவாரை, குமரி (சோற்றுக் கற்றாழை), சவுக்கு போன்றவற்றை வளர்க்க வேண்டும். மழைநீர் ஓடிவந்து தேங்கும் போது

நீரில் கரைந்துவரும் மண்ணெல்லாம் படிந்து படிந்து, ஓர் ஐந்தாறு ஆண்டுகளில் ஓடைகளின் படுகையின் சரிவும், நிலத்தின் சரிவும் குறைந்துவிடும். சரிவு குறைந்தால் நீரோட்டத்தின் விசையும் குறையும், மண் அரிப்பும் குறையுமே! நாளடைவில் ஓடைகள் தூர்ந்து, நிலத்திணை அரண்களாக நிலத்தைக் காக்கத் தொடங்கிடுமே! ஓடைக்குள் எவரும், எக்காரணத்தாலும் மண்ணைத் தோண்டவே கூடாது! ஓடைகளைத் தூரெடுக்கக் கூடவே கூடாது!

ஆனால் ஒவ்வோர் ஆண்டும் கோடையில் குட்டையைத் தூரெடுக்க வேண்டும் இல்லாவிட்டால் வண்டல் படிந்து படிந்து குட்டை தூர்ந்து விடுமே! தூரெடுத்த வண்டலைத் தோட்ட நிலங்களில் பரவலாகப் போட்டால் நெல்லும் விளையுமே ! ஒவ்வொரு கேணி நீரிலும், ஒரு குழி நிலத்தில் நெல்லும், மீதி நிலத்தில் தோட்டப் பயிரும் என விளைவிக்கலாம்.

குட்டைக்குள் எவ்வித மரங்களையும் வளர்க்கவே கூடாது! மரங்களை வளர்த்தால் தூரெடுக்க இயலாதே. ஆனால் குட்டைக்கரையின் கீழே, உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் 25 அடிக்கொரு மரக்கன்றை நட்டு வளர்க்க வேண்டும். தம்பி.. வேலு.. கிட்டே வாங்க. குட்டைக்கு நிலம் கொடுத்த நீங்கள் அண்ணன் தம்பி ஐவரும், குட்டைக் கரையை ஐந்து சமப் பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொருவரும் ஒரு பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். தேமா (இனிப்புமா), புளிமா (புளிப்புமா), கூவிளம்(வில்வம்), கருவிளம் (விளா), நெல்லி, கடு, தான்றி, நாவல், அத்தி, வேம்பு, புன்கன், புளி - முதலிய 12 வகை மரக்கன்றுகளை ஒவ்வொருவருக்கும் நான் தருவேன். அவரவர் பகுதியில் அவற்றை நட்டு வளர்த்து வர வேண்டும். அவை பயன்தரும் போது, காய்-கனி-வித்து-இலை-பட்டை என அனைத்தும் உங்களுக்கே உரிமை ! அவற்றை நம் ஊருக்குள்ளேயே விற்க வேண்டும். மீந்தவற்றை வெளிச்சந்தையில் விற்கலாம். குட்டைப் பராமரிப்பு, தூரெடுத்தல், மரங்களைப் பேணிவளர்த்தல் ஆகியன உங்கள் கடமை ! உங்களுக்கு உடன்பாடுதானே..." என்றேன்.

"மிக அருமையான திட்டம், சுற்றுச் சூழலும் செப்பமுறும்! உண்ணவும், மருந்துக்கும் ஆகும்! விற்பனைத் தொகையும் கிடைக்கும்! கரும்பையும் கொடுத்து தின்னக் கூலியையும் கொடுக்கும்போது கசக்குமா? ஆனால் உழுதல்-எருவிடுதல்-களை நீக்கல் நீர்பாய்ச்சல் ஆகியனவற்றைவிடப், பாதுகாத்து வளர்த்தலே மிகமிகத் தலையானது.

ஏரினும் நன்றால் எருவிடுதல், கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு - (1038) என்று, மிகக் கூர்ந்த பட்டறிவுபெற்ற உழவனைப் போன்று நம் திருவள்ளுவப் பேராசான் கூறியுள்ளாரே ! அதனால் பாதுகாப்பாக, ஆடு மாடு மேயாமல் நோய், நொடி தாக்காமல் நீரின்றிக் காயாமல், மிக மிகக் கவனமாகக் கடனாற்றல் வேண்டும்" என்றார் ஆசிரியப் பெருந்தகை அன்பு!

"நல்ல விதமாய்ப் பாதுகாப்போமுங்க ஐயா" என்றனர் எல்லோரும் துடிப்போடு! நான் கயலை நோக்கினேன் கனிவாக !

"வீட்டுக்குப் போய்.... அங்கே வைத்துக்கொள்ளுகிறேன் உங்களுக்குப் பாராட்டுக் கடனை" என விழிக் குறிப்பால் புலப்படுத்திக் குறும்புச் சிரிப்பொன்றைத் தன்னிதழ்களில் தோற்றினாள் என் அன்புக் கயல்விழி! நான் உவந்து நின்றேன்!

( முற்றியது )