வினாதலும் விடுத்தலும்

1. சென்ற தெளிதமிழ்ப் பின் அட்டை 4 ஆம் பாடலின் 3 ஆம் அடியின் பின் அரையடி, படைத்தலைமை ஏற்பதனைத் தடுப்பவன் யார்? என்று உள்ளது. - காய்-காய்-மா தேமா என்ற அமைப்பிலான எண்சீர் விருத்தத்தில் (பாவலர் பண்ணை பக், 58) - காய்-காய்-கருவிளம்-மா என்று வரலாமா?
-மகிழன், விழுப்புரம்

காய்-காய்-கருவிளம்-மா என்று வருதல் கூடாது. அதைச்சீர் பிரித்து அச்சிடுவதில் ஏற்பட்ட தவறு அது.

படைத்தலைமை ஏற்பதனைத் தடுப்ப வன்யார்?

என்று சீர் பிரித்து அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இதில்-காய்-காய்-மா தேமா என்ற இலக்கணம் பிழை யாமையைக் காணலாம்.

2. அ) சென்ற இதழ் இரா. செம்பியன் அவர்களின் அறிவியல் சொல் ஒலி வடிவங்கள் என்ற கட்டுரையில் தன்நேரில்லா (ப.19) என்ற சொல்லைக் கண்டேன் தன்னேரில்லா என்றே இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். றன்னகரத்திற்கு மாறாகத் தந்நகரம் வரலாமா?

ஆ) தாமரையை ஆம்பல் என்று கூறலாமா? அதிகாலை மலர்வது ஆம்பல் என்று எழுதலாமா?

இ) ஆயா கடை வைப்பாங்க. இத்தொடரில் ஆயா விளிவடிவமா? விளிவடிவ மானால் அருகே ஆயா! என்று உணர்ச்சிக்குறி இடலாமா?

ஈ) கட்டிடம்=கட்டு+இடம். இது கட்டுதற்குரிய இடம் என்றுதான் பொருள்படும். (ப. 24) என்று கண்டேன். கட்டிய இடம், கட்டுகின்ற இடம், கட்டும் இடம் என்று வினைத்தொகையாகக் கொள்ளலாமா?
-ம. பாலன், கலிதீர்த்தாள்குப்பம்

அ) தன்+நேரில்லா என்பன புணர்ந்து வருவதுதான் தன்னேரில்லா என்பது. ன் என்ற எழுத்தை அடுத்து ந வரக்கூடாது. ஆனாலும் இக்காலத்தில் என்னாடு என்பதை என் நாடு என்று பிரித்துப் போடுகிறோம். அதுபோல் இங்கே தன் நேரில்லா மொழி என்று போடப்பட்டது.

ஆ) தாமரையை ஆம்பல் என்று கூறமுடியாது. ஆம்பல் என்பது அல்லி மலர்!,. இரவில் மலர்வது.

இ) ஆய் என்பது தாய், அதன் விளிவடிவமே ஆயா. இது இக்காலத்தில் பாட்டி, பணிப்பெண் முதலிய பொருள்களில் வழங்குகிறது. உணர்ச்சிக்குறி வினாக்குறி முதலியன தமிழுக்கு இன்றியமையாதவை அல்ல. அவை மேனாட்டார் தொடர்பால் தமிழுக்கு வந்தவை. இன்று பொருள்தெளிவு கருதிப் பயன்படுத்தப்படுகின்றன. அன்னாய் இவனொருவன் செய்தது காண்! என்றேனா, என்று சங்கப்பாடலிலேயே இன்று இக்குறிகள் சேர்த்து அச்சிடப்படுகின்றன, எனவே ஆயா! என்று எழுதுவதில் தவறில்லை.

ஈ) வினைத்தொகையாகவும் கொள்ளலாம்.

3. திரைப்படப் பாவலர் ஒருவர் ஒரு வார இதழில் அனா ஆவன்னா என்ற தலைப்பில் பாக்கள் எழுதிவந்தார். நான் ஆனா, ஆவன்னா என்று இருக்க வேண்டும் என்று நாலைந்து மடல்கள் எழுதின பிறகும் அனா. ஆவன்னா என்றே போடுகிறார்கள். அது சரிதானா எனத் தெரிவிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.
-கருணைச்சாமி, தேனி

எழுத்துகளை இப்போது அ, ஆ என்று சொல்லிக்கொடுக்கிறோம். திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஆனா. ஆவன்னா என்றோ, அஆனா, ஆவன்னா என்றோ சொல்லிக்கொடுப்பார்கள்,. அனா என்று சொல்ல மாட்டார்கள். அதனால்தான் உங்கள் மடலுக்குப்பின் அஃனா என்று ஒரு குறியைச் சேர்த்துப் போடுகிறார்கள் போலும். இத்தகைய குறியீட்டைத் தமிழில் பயன் படுத்துவதில்லை. அதனால், ஆனா, ஆவன்னா என்றே போடலாம். எழுத்துகளை இலக்கணநூல்களில் அ, காரம், கான், கரம் ஆகிய சாரியைகள் தந்து குறிப்பிடுவர், (நன். 126) ஆனால் உலக வழக்கில்னா, அன்னா என்ற சாரியை சேர்த்துச் சொல்வார்கள். ஆன, ஏன என்ற சாரியைகளை மயிலைநாதர் நன்னூல் (125) உரையில் குறிப்பிடுகிறார். ஏன என்ற சாரியையை அஃகேனம் என்பதில் காண்கிறோம். அஆனா என்பதில் உள்ள ஆனா என்பது ஆன என்பதன் மருவிய வடிவம் போலும்.

4. அ) நாள்கள், நாட்கள் என்று இரண்டு முறையிலும் எழுதுகின்றனர். இதற்கு இலக்கணவிதி இருக்கிறதா? இலக்கியச்சான்று தருக.

ஆ) வேண்டும், வேண்டாம், வேண்டா இச்சொற்களைப் பிரித்துக் காட்டி இலக்கணக் குறிப்பும் தருக. வேண்டாம் என்பது தவறா? எப்படி?

இ) தலைவன் என்பதையும் தலையன் என்பதையும் தலை+அன் என்று பிரித்தல் சரியாகுமா?
-இரா. செந்தாமரை, நிரவி

அ) ஒவ்வொரு சொற்புணர்ச்சிக்கும் விதி கூற வேண்டும் என்றால் இலக்கணநூல் அளவில்லாமல் விரியும். அதனால் இன்றியமையாத சில முடிவுகளே கூறப்படும். 'சொன்னவற்றைக் கொண்டு சொல்லாதவற்றுக்குரிய விதிகளை உய்த்துணர்ந்து கொள்க' என்கிறார் நன்னூலார்.

இதற்கிது முடிபென்று எஞ்சாது யாவும்
விதிப்பள வின்மையின் விதித்தவற் றியலான்
வகுத்துரையாதவும் வகுத்தனர் கொளலே (நன். 257)

என்கிறார். விகுதிப் புணர்ச்சிக்கு நன்னூல்,

விகுதி பதம் சாரியை உருபு அனைத்தினும்
உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பனகொளலே (நன், 254)

என்று மட்டும் பொதுவாக இலக்கணம் கூறுகிறது. இது தவிரக் கள் விகுதி பெயர்களுடன் எப்படிப்புணரும் என்பதற்குத் தனிவிதி கூறப்படவில்லை. இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்ற நெறி நின்று இத்தகைய புணர்ச்சிகளை முன்னோர் எப்படி எழுதினரோ அதையே இலக்கணமாகக் கொள்ளவேண்டும்.

பெயர்களுடன் கள் விகுதி புணரும் போது புலிகள், பூனைகள், மாடுகள், எஃகுகள், கசடுகள், குண்டுகள், நாய்கள், ஊர்கள், நூல்கள், கோள்கள், மான்கள், தூண்கள் என இயல்பாகவே புணருகின்றன, (வருமொழிக் ககரம் மிகவில்லை. நிலைமொழி ஈறுகள் திரியவில்லை) அது போலவே நாள்கள் என்று இயல்பாக வருதலே மரபு என்று கொள்ளவேண்டும்.

வாள்+பெரிது= வாள்பெரிது என்று இயல்பாகவும், முள்+பெரிது= முட்பெரிது என்று திரிந்தும் வருவது போல் நாள்+கள்=நாள்கள் என்றும், முள்+கள்=முட்கள் என்றும் வருவது, (நாள்-நெடிலையும், முள் தனிக்குறிலையும் அடுத்துவரும்) எழுத்தமைப்புக் காரணமாக. இதிலிருந்து, கள் விகுதி மற்ற அல்வழிப் புணர்ச்சிகளைப் போலவே புணரும் என்று கொள்ளவேண்டும். நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது (பெரியபுராணம்-திருநாளைப். 22) என்பதை இதற்கு இலக்கியச் சான்றாகக் கொள்ளலாம்.

ஆ) 1. வேண்டு என்ற பகுதிக்கு விரும்பு என்பது பொருள், அதனோடு செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதியாகிய உம். சேர்ந்து. அவன் வேண்டும் , அவள் வேண்டும், அது வேண்டும், அவை வேண்டும் என்று வரும்.

2. அதே பகுதியுடன் உம் என்னும் வியங்கோள் விகுதி சேர்ந்து வேண்டும் என்ற சொல் வேண்டுக என்ற வியங்கோட் பொருளில் ஐம்பால் மூவிடங்களிலும் வரும். ஓஒதல் வேண்டும் (குறள் 633) வியங்கோள். தவிர்தலை விரும்புக அதாவது தவிர்க, (ஓஒதல் வேண்டும் என்ற தொடர் இங்கு ஒரு சொல்லாய் நின்றது). நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (குறள் 960) வேண்டும் = வேண்டுக. நலத்தை விரும்பினால் நாணுடைமையை விரும்புக என்பது கருத்து.

இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் (தொல். சொல்.33)

இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்
கின்னென் சாரியை இன்மை வேண்டும் (தொல். புண. 29)

என்ற இடங்களில் வருவனவும் இத்தகைய வியங்கோள்களே.

வேண்டா என்பதிலும் வேண்டு பகுதியே. ஆனால் இங்கே ஆ-எதிர்மறை. விரும்பற்க என்ற எதிர்மறைப் பொருளில் வருகிறது. வேண்டா என்பதே இறுதியில் மூக்கொலி மிகுந்து உலக வழக்கில் வேண்டாம் என்று வழங்கு கிறது. முற்கால உலகநீதிப் பதிப்புகளில் வேண்டா என்ற வடிவமே உள்ளது. இக்காலப் பதிப்புகளில்தான் அது வேண்டாம் என்று மாறியிருக்கிறது.

வேண்டாம் என்பது இலக்கிய வழக்குக்கு ஏலாது என்று கூறலாம். பேச்சு வழக்கில் அதைப் பிழையெனல் சரியன்று.

இ) சொற்களில் பகுதி விகுதி முதலிய உறுப்புகள் புணர்ச்சி விதிப்படிப் புணர்ந்தமைவதில்லை. தலை, கலை, புலை என்ற ஒத்த ஈற்றுப் பகுதிகள் அன் விகுதியோடு கூடி வரின் முறையே தலைவன், கலைஞன், புலையன் என்றும், புலை என்பது இகர விகுதியோடு கூடி வரின் புலைச்சி என்றும் ஆகும். இவையனைத்தும் இ ஈ ஐ வழி யவ்வும் என்ற புணர்ச்சி விதிப்படி அமையவில்லை. இவை இப்படி வருவதுதான் மரபு. இவற்றின் பகுதி விகுதிகளைப் பகுத்து, இடை நின்ற வ், ஞ், ச் என்பவற்றைப் பெயரிடை நிலை என்று கொள்ளவேண்டும் என்று, இவற்றின் அமைப்புக்கு ஏற்றபடி

இலக்கியம் கண்டதற் கிலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்து இடைநின்றதை
வினைப்பெய ரல்பெயர்க்கு இடைநிலை எனலே (நன். 141)

என்றார் நன்னூலார். தலைவன் என்பது முதல்வன் என்று பொருள் தருவது. தலையன் என்பது தலையை உடையவன் என்று பொருள் தருவது. இவ்விரண்டு சொற்களுக்குமே தலை என்பதே பகுதி. அன் என்பதே விகுதி. எனினும் முதற் பொருளில் வ் தான் இடைநிலை. இரண்டாம் பொருளில் ய் தான் இடைநிலை.

5. பழைய சிந்துப் பாடலில் யான் தாப்புலி பாட வல்லேனல்லேன் என்னும் தொடர் வருகின்றது தாப்புலி என்பது பழைய பாவகை என்று அகரமுதலிகள் கூறுகின்றன. அஃது எவ்வகைப்பா? அதன் அமைப்பு முறைகள் யாவை?
-நா. தண்டபானி, அம்பல்

செங்கோன் தரைச்செலவு என்ற நூலாலும் உரையாலும் தாப்புலி என்னும் ஒரு பழம் பாவகை இருந்ததாகத் தெரிகிறது என்கிறது அபிதானசிந்தாமணி, செங்கோன் என்ற தமிழ் நாட்டரசன் இடைச்சங்க காலத்தில் இருந்தவன் என்றும், அவன் படைஎழுச்சியைப் பற்றிய இந்நூலைப் பாடியவர் முதலூழித் தனியூர்ச் சேத்தன் என்ற புலவர் என்றும் அந்நூல் கூறுகிறது. தாப்புலி என்பது வலிமை மிக்க புலி என்ற பொருளில் புறப்பொருள் மாலையும் தாப்புலி ஒப்பத் தலைக் கொண்டான் (2. 10) என்று கூறுகிறது. தாப்புலியைப் பற்றி வேறு எதுவும் தெரியவில்லை. எந்த யாப்பிலக்கண நூலிலும் அதன் இலக்கணம் இருப்பதாகத் தெரிய வில்லை. தெரிந்தோர் தெரிவிக்குமாறு அன்பு கூர்ந்து வேண்டுகிறேன்.

6. அ) நேரிசை அகவற்பாவின் ஈற்றயலடி மச்சீராய் அமையவேண்டும் என்னும் விதியுண்டா? அவ்வீற்றயலடியை எவ்வாறு அமைத்தல் சிறப்பு?

ஆ) தாலாட்டுப் பாட்டை எந்த யாப்பில் பாடவேண்டும்? எந்த யாப்பிலும் பாடலாம் என்றால் எந்த யாப்பில் பாடினால் செவிக்கு இனிமையாய் இருக்கும்?
-புலவர் வீ. வில்வநாதன், க. மு., வெங்காலூர்

அ) நேரிசையாகவற்பாவின் ஈற்றயலடியாகிய சிந்தடி பற்றி ஏதும் விதியிருப்பதாகத் தெரியவில்லை. மற்ற அடிகளைப்போல் அதிலும் 1. 3 ஆம் சீர்களில் மோன வருவது சிறப்பு என்பதைக் கூறவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

ஆ) தாலாட்டுகள் பெரும்பாலும் வெண்டளை கலந்து வரும் ஈரடிக் கண்ணிப்பாவில் பாடப்படுகின்றன. இது சிந்துப்பா வகைகளில் அடங்கும்.

7. மடங்கல் தெளிதமிழ் இதழில் மனம் திறந்த மடலாகப் பாவலர் சிலம்பூர்க் கிழான், விடுத்துள்ள இரண்டு எண்சீர்விருத்தங்களிலும் அடிதோறும் நான்காம் சீர்களில் தமிழை, உதவி, தொடுத்தார், அறியும், கெடுக்கும் எனும் புளிமா வரும் சொற்களைக் கையாண்டுள்ளதுபற்றித் தெளிவுபடுத்தவும். தேமா தான் வரவேண்டுமெனச் சிலர் கூறுகிறார்கள்
-புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி

காய் மூன்று மா ஒன்று கலந்த அடி இரட்டும் என்ற அமைப்பிலான எண்சீர் மண்டிலத்தில் மாச்சீர் வருமிடங்களில் தேமாவே வருமாறு சிலர் விரும்பி எழுதுவதுண்டு. புளிமாவே வருமாறு சிலர் எழுதுவதுண்டு. அப்படியும் வரலாம். இரு மாக்களும் கலந்தும் வரலாம். அங்கே மாச்சீர் வரவேண்டு மென்பதுதான் இலக்கணம். சிலம்பூரார் பாடல்களில் புளிமாக்கள்மட்டும் வரவில்லை. இருமாக்களும் கலந்தே வருகின்றன. காத்து, அந்நாள், ஆதி, தோன்றி, கண்ணாய், செய்தார், போட்டு, தக்கை, நாடும் எனப்ப பல தேமாச் சீர்கள் வருகின்றன.

8. திரிகடுகம், திரிபாலா சூரணம் என மூன்று என்பதைக் குறித்துத் 'திரி' வருகின்றதே! இந்தத் திரி ஆங்கிலத் திரி அன்றுதானே? இவற்றின் செவ்வையான தமிழ் வழக்குகளைத் தெரிவிக்கவேண்டுகிறேன்.
-பொறிஞர் அகன், மாத்தூர்

ஆங்கிலமன்று. சமற்கிருதம். இதற்குத் தமிழ் மூன்று தான் திரிகரணம், திரிபுவனம், திரிலோசனம் முதலிய வடசொற்கள் முறையே முக்கருவி, மூவுலகு, முக்கண் முதலிய செந்தமிழ்ச் சொற்களாவது காண்க.