
|
தொல்காப்பியத்துட் கண்ட தலைவன் - தலைவியர்
தி. சா. கங்காதரன், புதுச்சேரி(தொடர்ச்சி) 'நோயும் துன்பமும்... உரிய பாற்கிளவி' தலைவியைப் பிரிந்த காலை, கனவில் அவளைக் கண்டு விழித்து வருந்தலும் உண்டு (197). தலைவியினுடைய உயிர் நாணம் மடன் என்றிவற்றைக் காக்கும் பொறுப்புத் தலைவற்கும் உண்டு (201). தோழியோடு உரையாடுகையில் அவள் தனக்கு உதவுவாளோ மாட்டாளோ என்ற ஐயம் அவற்கு நிகழும் (238). 'ஐயக் கிளவி ஆடூஉவிற் குரித்தே', தலைவி கூறுவனவற்றுக்கெல்லாம் தான் மாறுபடப் பேசி, அதுபோது அவட்கு நிகழும் நிலைவேறுபாடு கண்டு அவன் மகிழ்வான். 'உயர்மொழிக் குரிய உறழும் கிளவி' (238) இயற்கைப்புணர்ச்சி இடந்தலைப்பாடு என்னுமிரண்டும் நிகழ்ந்தபின்னர். பாங்கற்கூட்டமும் தோழியிற்கூட்டமும் நிகழாமல் வைத்தே தலைவன் தலைவியை வரைந்துகோடலுமுண்டு. அவ்விரண்டு திறமும் பிறர்க்குப் புலனாகாமை நிகழ்வதால். அவ்விரண்டிடத்தும் இடைநின்று கூட்டுவாரின்றித் தலைவனும் தலைவியும் ஒருவர்க்கொருவர் தூதுவராதலுமுண்டு (119). 'காமக் கூட்டம் தனிமையிற் பொலிதலின் தன் சொற்களைத் தோழி மதிக்கிறாள் என்பதறிந்த பின்னரே தலைவன், தலைவியைத் தன்பாற் கூட்டுவிக்க அவளை வேண்டுவான் (128). 'அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது பகற்குறியினும் இரவுக்குறியினும் தலைவன் தலைவியைக் கண்டு மருவாமல் மீளலுறும் நிகழ்வு நிகழவும்பெறும் (134). அதுபோது அவற்குப் புலவியும் ஊடலும் நிகழ்தலும் உண்டு (156). தான் தவறினாள்போலத் தோழி பணிமொழி கூறி அவன் கோபத்தை மாற்றுவாள் (157). களவுக் காலத்தே தலைவன் தேர் யானை குதிரை முதலிய ஊர்ந்து தலைவியைக் காண வருதலுமுண்டு (212). வழியினது கடுமை, வழியிடை நேரக்கடவ தீங்குகள், தன்னுடற்கு வரும் ஊறு கண்டஞ்சும் அச்சம் முதலியன களவுக்காலத்தே தலைவனுக்கு யாண்டும் தோன்றமாட்டா (136). ('மறைந்த ஒழுக்கத்து... இல்லை' 135) களவுக்காலத்தே இடையிடை ஒருநாள் இருநாள் தன் ஏனைய வினை காரணமாகத் தலைவன் தலைவியைக் காண வாராமையுமுண்டு (111). 'இட்டுப் பிரியினும் அருமைசெய் தயர்ப்பினும்' திருமணத்திற்குப் பொருள் தேடி வருதற்பொருட்டாகப் பலநாள் அவளைப் பிரிந்து அவன் வேற்றூர்ச் சென்று மீடலுமுண்டு, அப்பிரிவிற்கு மிகுதியெல்லை இரண்டு திங்களே என்ப. (இறை. அ. 32) 'களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம் களவுக்காலத்தே தீய ஓரையிலும் நாளிலு முட்படத் தலைவன் தலைவியொடு மெய்யுறுபுணர்ச்சி மேவுதலுமுண்டு (135). 'மறைந்த ஒழுக்கத்து ...இல்லை' களவொழுக்கம் வெளிப்பட்ட பின்னரோ. வெளிப்படுவதன் முன்னரோ தலைவன் தலைவியை மணப்பான் (140) 'வெளிப்பட வரைதல் படாமை வரைதலென்று களவுக்காலத்தே, நாடுகாத்தற்கும். தன் வேந்துறு விழுமம் தாங்கிப் போரிடை உதவுவதற்கும், வரைவிடைவைத்துப் பொருள் தேடற்குமே தலைவியைப் பிரிந்து செல்வான், ஓதல் பகை தூது இவை பற்றிய பிரிவு களவுக்காலத்தே இல்லை. 'ஓதல் பகையே தூதிவை பிரிவே' (25) தலைவியை உடன்போக்கில் அழைத்துச்செல்லுமவன், அவள் தமரே வந்தெதிர்ப்பினும் தான் ஒருகாலும் அவளைக் கைவிடாமற் பேணும் உறுதியைச் சூளுரைத்து மொழிவான் (506 பேரா). 'இடைச்சுர மருங்கின் கிழவன் கிழத்தியொடு கற்புக்காலத்தே தலைவன் ஒரு வினை தொடங்குமுன்னர், நிகழ்ந்தவற்றை எடுத்துக்கூறி, நன்மை மிக்கிருப்பினே அதன் கண் ஈடுபடுவான்(44). 'நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே' பெரும்பான்மையும் தலைவியை அவள்குரவர் தனக்கு மந்திரமுறை நிகழ்ச்சியோடு கொடுப்பத் தான் முறையே மணத்தலும் (142). தலைவியோடு உடன்போக்கு நிகழ்த்த வேண்டிய குறையுள்வழி அவள்தமர் இன்றியே வைத்து மணத்தலும் (143) தலைவற்கு இயல்பு. 'கற்பெனப் படுவது கரணமொடு புணரக் தலைவன் தன்கிழத்தியின் சினத்தை அவளை இரந்தும் உணர்த்தியும் தணிப்பதற்குப் பல்லாற்றானும் முயல்வான், அதுபோதும் அவளுடன் நீங்கிற்றிலதேல், தலைவனுக்கும் ஊடல் தோன்றும் (156). 'உயர்ப்புவரை இறப்பினும் செயற்குறி பிழைப்பினும் (தொடரும்) |