திருவள்ளுவர் படித்த கல்லூரி
பேராசிரியர் இரா. மதிவாணன்

திருவள்ளுவர் எந்தக் கல்லூரியில் படித்தார்? என விசயகாந்தனார் வினாத் தொடுத்துள்ளார். தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதற்காகத்தான் திராவிட இயக்கங்கள் தோன்றின. சற்றேனும் இனப்பற்றும் தன்மானமும் இல்லாமல் சூத்திரர்கள் என்னும் இழிவைப் பொறுத்துக் கொண்ட தமிழனைக் காட்டுமிராண்டி எனப் பெரியார் குறிப்பிட்டார். தமிழர் அனைவரையும் அவர் அவ்வாறு குறிப்பிடவில்லை. ஆரியத்துக்கு அடிபணிபவர் தம்மைத் தமிழர் என்றோ திராவிடர் என்றோ சொல்லிக்கொள்ள முடியாது என்பதே பெரியார் கருத்த., ஆரிய நாகரிகக் கலப்பை எதிர்த்துத் தமிழ்ப்பண்பாட்டை நிலைநாட்டிய திருவள்ளுவரைத் தமிழின மீட்பராகப் பெரியாரும் ஏற்றுக்கொண்டார்.

தே.மு.தி.க.வின் தலைவராகிய அண்ணன் விசயகாந்தனார் உள்ளத்தால் தூயவர். உண்மையான வரலாறு அவர் பார்வைக்கு வரவில்லை என்றேகருத வேண்டியுள்ளது. மொழி பண்பாடு வரலாறு மூன்றும் பிரிக்க முடியாதவை. இவற்றை ஒதுக்கிவிட்டு வாழ்வியலை மட்டும் அரசியலாக்கிக்கொண்டால் தமிழன் முன்னேறலாம். ஆனால் தமிழினம் உலக அரங்கில் தலைநிமிர முடியாது.

திருவள்ளுவர் ஒரு மதத்தை உண்டாக்கவில்லை. உலகமே வியக்கும் அறிவுச் செல்வத்தை விட்டுச் சென்றிருக்கிறார். புத்தர் இயேசு நபிநாயகம் போன்ற பெருமக்கள் உயர்ந்த அறநூல்களை விட்டுச் சென்றிருக்கின்றனர். இராமபிரான் விட்டுச் சென்ற அறநூல் எதுவுமில்லை. ஒருநூறு படங்களில் நடித்தால் கல்லாத மக்கள் மனத்தில் அவர் உருவம் பதிவாகிவிடுகிறது. ஒரு நடிகைக்குக் கூட ஒருவர் கோயில் கட்டினார். ஒரு கதையை ஓராயிரம் முறை சொன்னால் அது தெய்வத்தன்மை பெற்றுவிடுகிறது. அந்தக் கதை ஏழை எளிய மக்களின் ஏற்றத்திற்கு உதவுகிறதா அல்லது குறிப்பிட்ட மேட்டுக்குடியினரின் மேன்மைக்கு மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறதா என்பதுதான் உழைக்கும் பாட்டாளியின் கேள்வி.

இதைக் கருத்தில் கொண்டே பொது நலனுக்காக அமைக்கப்படும் சேதுக் கால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்கள் மதப்போர்வையணிந்து தடைசெய்ய வேண்டாம் என்பதற்காகக் கலைஞர் இராமரைப் பற்றிய உண்மை வரலாற்றைச் சொல்ல நேர்ந்தது. அதற்கு நேரடியான மறுமொழி சொல்லலாம். அப்படியில்லாமல் திருவள்ளுவர் படித்த கல்லூரியின் முகவரி கேட்பது பொருத்தமாக இருக்காது. திருக்குறளை ஊன்றிப் படித்தால் அந்த முகவரியைத் தெரிந்து கொள்ளலாம். அரசியலையும் பொருளியலையும் பேசவந்த திருவள்ளுவர் பொருளதிகாரத்தில் இறைமாட்சிக்கு அடுத்த முதல் தலைப்பாகக் கல்வியை வைத்திருக்கிறார். நாட்டில் படிக்காதவர்களே இருத்தலாகாது எனும் நிலை உருவாக வேண்டும் என்பதால் கல்லாமையை அதற்கடுத்து வைத்திருக்கிறார். கல்லாத மக்கள் ஒருசிலர் இருந்தாலும் அவர்களுக்கும் கேள்வி வாயிலாக (கதை நாடகம் இலக்கியம்) அறிவுச் செல்வம் எட்ட வேண்டும் என்பதற்காகக் கேள்வியை அதன்பின் வரிசைப்படுத்தினார். பொதுமக்கள் நூற்றுக்கு நூறு கல்வி கற்க வேண்டும் எனும் உயர்ந்த கருத்து சமற்கிருத நூல்கள் எவற்றிலும் மருந்துக்குக் கூட காணமுடியாது.

மலையில் வாழ்ந்த குறமகள் இளவெயினியும் மட்பாண்டம் செய்யும் குயமகள் வெண்ணிக்குயத்தியும் பாண்டியன் தமிழ்க்கழகத்தில் புறநானூறு பாடிய புலவர்களாக வீற்றிருக்க முடிந்தது என்றால் அது கல்லூரிக் கல்வி யாலா அல்லது திண்ணைப் பள்ளிக்கூட மேம்போக்கு எழுத்தறிவாலா என்று நினைத்துப்பார்க்கவேண்டும். பாரத இராமாயணக் காலங்களில் கல்வியறிவு பொதுமக்களுக்குத் தடைசெய்யப்பட்டது. கல்வி கற்று மெய்யுணர்வு (ஞானம்) பெறத் தவம் செய்த கீழ்க்குலத்துச் சம்புகனை இராமன் கொன்றுவிட்டான். சம்புகன் அணுக்குண்டா செய்தான்? மற்றச் சாதிகள் முன்னேறக் கூடாது என்பதில் இராமன் அக்கறை காட்டினான். வால்மீகியின் கதையை உள்ளபடி எடுத்துச்சொன்னால் எரிச்சல் கொள்வது ஏன்? என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி.

உயர்கல்வி

திருமணம் செய்து கொண்ட பிறகு கூட உயர்கல்வி கற்பதற்காக ஒரு தமிழன் மூன்றாண்டுகள் மனைவியைப் பிரிந்து செல்லலாம் என்று தொல்காப் பியம் கூறுகிறது. பல நாடுகளுக்குச் செல்லுங்கள் பல புதிய நூல்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இறக்கும் வரை படித்துக்கொண்டே இருங்கள் என்னும் கருத்தை,

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு

என்னும் குறளில் திருவள்ளுவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். வெறும் திண்ணைப்பள்ளிக்கூடத்தோடு தமிழ்ப்படிப்பு நிற்கவில்லை. கணிதம் வானநூல். கட்டடக்கலை, மருத்துவம் என மிகவும் விரிந்த பல துறைக்கல்வி வளர்ந் திருந்த காலம் அது. 64 கலைகள் பாடத்திட்டமாக நிலவியதைப் புத்தரின் வரலாற்றிலும் காணமுடிகிறது. சட்டாம்பிள்ளைக் கல்விமுறை ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் நன்கு செயற்படுவது கண்டு வெள்ளைக்காரர்களும் அக்காலத்தில் அதை இங்கிலாந்தில் செயற்படுத்தினார்கள். சோழர்களின் நிலஅளவை முறைகளின் நுட்பம் கண்டு ஆங்கிலேயர் வியப்பால் வாயடைத் துப்போயினர். உயர்கல்விக்காகத் தமிழ்நாட்டில் மூன்றாண்டுக்காலம் ஒதுக்கப் பட்டிருந்தது. அதுதான் திருவள்ளுவர் படித்த கல்லூரி.

( தொடரும் )