தெலுங்குமொழி யூப்ரூவாம்! தெலுங்கினத்தார் யூதர்!
திரிப்பதற்குத் தமிழ்த்தொடைதான் விரிந்ததுவோ கூறீர்!
நலங்குமொழி. மன்றல்பாட் டொப்பாரி, என்றும்
நாகரிகம், பண்பாடு கலைமாட்சி தன்னுள்
துலங்குமொழி தெலுங்குமொழி! தமிழ்பெற்ற பிள்ளை!
சுந்தரனார் களிதெலுங்கும் என்றிசைத்த பாங்கை,
இலங்குமொழிக் குடும்பத்தைக் கோனய்யாக் கூட்டம்
இருந்தாய்க! தெலுங்கெங்கள் குடும்பமொழி காணீர்
விழியிரண்டு பார்த்திடலாம்! நோக்கிங்கே ஒன்றே!
வினையாற்றல் பலவாகும் உணர்வூட்டல் மூளை!
வழியிரண்டாம் அறவாழ்வில் இறப்பொன்றே ஆகும்!
வகைப்பட்ட உறுப்புகளால் உடல்ஒன்றே அன்றோ!
மொழியிரண்டு மூன்றல்ல! தமிழுடனே ஐந்தாய்
முதலான தமிழொன்றே தாயாகும்! இங்கே
மொழியிரண்டுங் கெட்டாராய் யூதமொழி ஆய்வால்
முரண்பட்டார் கோனய்யா! தெலுங்குதமிழ்ச் சேயே!