புனைபாவை எனைப்பொருவ வனைகின் றாராம்
பொதுவிடத்தில் போட்டதனை எரிக்கின் றாராம்!
இனப்பகையைப் புலப்படுத்த இவ்வா றான
இழிவினையால் நெடும்பகையை வளர்ப்ப தேனோ?
அனைவருக்கும் புகலுகின்றேன் இராம னென்ற
அப்படியெப் பயலுமிங்கு வந்த தில்லை !
எனையெதிர்த்துப் பொருதெவனும் வென்ற தில்லை
இப்படியோர் நிகழ்வேதும் நிகழ்ந்த தில்லை
என்னருமைத் தமிழினமே இவற்றை எல்லாம்
எள்ளளவும் உண்மைஎன நம்பி டாதே
என்னுடலி லோடுகின்ற குருதி எல்லாம்
இனியதமிழ்ப் பண்பாடு மருவி யன்றோ?
என்னிலங்கை நகருக்குள் எமனென் றாலும்
எளிதாகப் புகுந்துவிட முடியுங் கொல்லோ?
அந்நிலையில் நானிருக்க வடக்கி ருந்தோர்
அறிவிலியோ? செருவிளைத்து மீண்டி ருப்பான்?
குமரிமுதல் இமயவரைக் குடுமி தொட்டோர்
குடையின்கீ ழாண்டிருந்த தமிழா நானுன்
அமைதியினைக் கண்டுமனம் குமுறு கின்றேன்
அவமானம் எனக்கில்லை யுனக்கே யாகும்.
நமைக்கண்டே இரிந்தோடும் நரிக ளங்கே
நடத்துகின்றார் வடநாட்டில் இராம லீலை
எனதுருவப் பாவையினைத் தீயி லிட்டே
எரிக்கின்றார் பார்த்துக்கொண் டிருக்கின் றாயே.