உரிமைப்போர்

தமிழீழ விடுதலைக்கே உலகில் உள்ள
தமிழரெல்லாம் கிளர்ந்தெழுவீர் இனப்பற் றோடு
நமக்கென்று நாடுண்டா உலகில் எங்கும்
நாமிங்கே எண்கோடித் தமிழர் உள்ளோம்
எமக்கிருந்த உரிமையெல்லாம் பறிக்கப் பட்டே
ஏதிலிகள் ஆகிவிட்ட போதும் நாங்கள்
தமிழினத்தைத் தலைநிமிரச் செய்வ தற்குத்
தருக்குடனே உரிமைப்போர் நடத்து கின்றோம்.

புலம்பெயர்ந்த தமிழினத்தார் கிளர்ந்தெ ழுந்தால்
புரியவைத்து விடமுடியும் உலகிற் கெல்லாம்
நிலைமையினை விளக்கியுரை யாற்றும் இந்த
நிமிடத்தில் கூடஎதும் நடக்கக் கூடும்
சளைத்துவிடு வோம்என்று கனவு காணும்
சதிகாரச் சிங்களரை முறிய டிப்போம்
நலம்விழையும் நண்பர்காள் கைகொ டுங்கள்
நாங்களுங்கள் குருதியில்ஓர் கூறே யன்றோ?

எட்டப்பர் ஆகிவிட்ட சிலபேர் இங்கே
இனநலனை அடகுவைத்துப் பிழைக்கின் றார்கள்
முட்டாள்கள் என்றெம்மைக் கருது கின்றார்
முடிவினிலே ஏமாறப் போகின்றார்கள்
கட்டாயம் இவர்களையும் மூக்க றுத்துக்
காட்டிடுவர் சிங்களர்தம் இனப்பண் பாட்டைக்
கெட்டாலும் களமிறங்கிப் புறங்கொ டுக்கும்
கீழ்மையினை ஈழமக்கள் செய்ய மாட்டோம்

முப்படையும் முடுக்கிவிட்டுத் தமிழி னத்தை
முற்றிலுமாய் அழித்துவிடப் பார்க்கின் றார்கள்
அப்படியோர் நிலைமையிங்கு வருமே யானால்
அனைத்துலகத் தமிழினத்திற் கிழுக்கே யாகும்
தப்பிவிட முடியாதே இவர்க ளாலும்
தரைவான்க டற்படைகள் எமக்கும் உண்டே
எப்படியும் எவராலும் ஒடுக்கு தற்கே
இயலாதே ஈழமக்கள் உரிமைப் போரை!

-இரா. செம்பியன்

தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம்
மேட்டுப்பாளையம் சாலை, கொங்கம்பட்டு,
விழுப்புரம் மாவட்டம்-605105. பேசி 2699485