பாவலர் பரிசுதிட்டம்

பாவலர் பரிசுதிட்டம்-34இல் பரிசு பெற்றவர்

பெயர்:பெ. சயராமன்
புனைபெயர்:சிலம்பூர்க்கிழான்
பிறப்பு:15-9-1946, சிலம்பூர்,
அரியலூர் மாவட்டம்
தந்தை:நாட்டார் வ. பெரியசாமி
தாய்:மயிலம்மையார்
குடும்பத்தார்: ச. அருட்செல்வன் (மகன்),
ச. தமிழ்ச்செல்வி (மகள்),
அ. தமிழெழிலன் (பெயரன்),
அ. தமிழோசை (பெயர்த்தி)
கல்வித்தகுதி:புலவர், க. மு., கல். மு., மெய். மு.,
பெரியார் சிந்தனைப் பட்டயம்
பணி: தமிழாசிரியர் 23ஆண்டு,
தலைமையாசிரியர் 10ஆண்டு,
மாவட்டக் கல்வியலுவலர் 2ஆண்டு,
30-9-2004இல் பணி நிறைவு
படைப்பு: செந்தமிழ்ச்செல்வி, குறளாயம், தென்மொழி,
தமிழ்ச்சிட்டு, தெளிதமிழ், நற்றமிழ்,
வெல்லுந் தூயதமிழ், யாதுமூரே,
நமது தமிழாசிரியர் முதலிய இதழ்களில் மரபுபாக்களும்,
கட்டுரைகளும், இலக்கணக்குறிப்புகளும்.
முகவரி: 158, பாவாணர் பாசறை,
திரு. வி. க. நகர், கச்சிச் சாலை,
கள்ளக்குறிச்சி-606202
பாவலர் பரிசு திட்டம்-36
கலித்துறை

உரூபா 500 பரிசுபெறும் பாடல்:

1.எழுப தாயிரம் பேர்நம தினத்தவர் இறந்தார்!
அழுவ தால்வரும் பயனெதும் இனியிலை, அன்பால்
தொழுவ தால்பெறற் கிலைதமிழ் ஈழமும், துணிந்தே
எழுக! உலகுவாழ் தமிழர்கள் இலங்கையை எதிர்த்தே!
-பைந்தமிழ்ப்பாவலர் புலவர் சி. பெருந்தேவன், தவளக்குப்பம்

வெளியீட்டுக்குத் தேர்வு பெற்ற பாடல்கள் (வரிசைப்படி)

2.சிங்க ளச்சிறு நரிகளின் செருக்கினைச் சிதைத்தோன்
செங்க ளப்புலி யாந்தமிழ்ச் செல்வனை விரகால்
தங்கி டத்தினில் குண்டுகள் வீசியே தகர்த்தோர்
எங்கி ருப்பினும் இனியுயிர் வாழ்வரோ எளிதில்?
புலவர் மா. சு. மணி, திருக்கழுக்குன்றம்

3.தூய நந்தமி ழெழிலுட னென்றுமே துலங்கத்
தாயி னின்னுயிர் காப்பது போலதைத் தாங்கித்
தேயு முன்னமே பிறமொழிக் கலவையைச் சீராய்
நேய நெஞ்சுடன் நீக்கிடின் நம்மொழி நிலைக்கும்
ப. நீலா, புதுச்சேரி-13

4.உலக நாடுகள் ஒப்புதல் அளித்திடில் உடனே
கொலையி லங்கையர் கொடுவெறித் தாக்குதல் குலையும்
நிலவு நந்தமிழ்த் தம்பியர் ஆட்சியும் நிலைக்கும்
உலவு செந்தமிழ் மொழியுடன் நம்மினம் உயரும்
முனைவர் தமிழப்பன், சென்னை

5.எலியை மாய்த்துணல் எத்திவாழ் பூனைகட் கெளிதே
புலியை வேட்டுணும் பூனையும் உண்டெனில் புகல்வீர்
நலிதல் ஆயினும் நல்லுயிர் சாயினும் நடுங்காப்
புலிகள் வெல்வதும் பூனைகள் வீழ்வதும் பொய்யோ?
வே. ச. திருமாவளவன், புதுவை

6.சோழ மன்னரின் கொடியினைப் பெயரெனச் சொல்லும்
வேழ மாமத விலங்கினை ஒத்தநல் வீரர்
வாழ வேண்டிய நாளினில் வலிந்துயிர் ஈவோர்
ஈழ மாமறத் திண்ணிய ரலாதுமற் றெவரே?
தழலெழில், விழுப்புரம்

7.பாடு பட்டுநாம் பண்புடன் வாழ்வதின் பயனாய்
நாடு மோங்குமே வளம்பெறும் நலம்பெறும் நாமும்
கேடு வந்திடா நிலையினை யடைகுவோம் கிளர்ந்தே
பீடு மேலுறும் பெருமைகள் யாவுமே பெறுவோம்!
ப. வனிதா, நெய்வேலி

8.குண்டு பெய்வதால் நீங்குமோ வுலகினில் குறைகள்?
விண்டு வீறுகொண் டெழுவதால் தீருமோ வினைகள்?
என்று கொல்வெறி முற்றிலு மழியுமோ இறைவா
அன்று நாமெலாம் அமைதியின் பயன்களை யடைவோம்!
பாவலர் பொன். பசுபதி, புதுச்சேரி-13

9.ஒன்று கூடிநின் றயலவர் ஆட்சியை ஒழித்தோம்
இன்று நம்மவர் ஆள்கிறார் ஆவதும் என்னாம்?
ஒன்றி லாயினும் உறுபயன் கண்டதும் உண்டா?
கண்ட கொள்ளையர் கொழித்திடு நிலமெனக் கண்டோம்
கலைமாமணி கோவி. கலியபெருமாள், அரியாங்குப்பம்

10.அருவி யூற்றென அருந்தமிழ்ச் செல்வனா லழுதே
உருகி நின்றதா லுருகுமோ கொள்கைதா னுயிரும்
கருகிப் போனதா லீழமும் கருகிடா தின்னும்
பெருகிச் சேர்வராம் பெருந்தமிழ்ச் செல்வரும் பின்னே!
கலைமாமணி புலவர் பூங்கொடி பராங்குசம், புதுச்சேரி

11.என்று காணுவம் தமிழனுக் கென்றொரு நாடும்?
இன்று நாளையென் றேங்குவ தாற்பய னில்லை!
ஒன்று கூடுவம். தமிழரின் தாயக மொன்றை
வென்றெ டுத்திட முந்துக முந்துக தமிழா!
பொறிஞர் கு. ம. சுப்பிரமணியன், திருச்சி

12.வாழு மித்தமிழ் மாந்தரால் நம்மொழி வளமை
ஆழு கின்றதே ஆழ்கடற் கடியினில்õ அயலார்
பாழு மாசெனப் பரப்புகி றார்மொழி பலவும்!
தாழு மிந்நிலை தடுத்திட வாவிளந் தமிழா!
மு. திருவாணன், திண்டுக்கல்

13.இன்று நந்தமிழ் இருந்திடு நிலையது நலமோ?
அன்று செந்தமிழ் அனைத்திலுஞ் சிறந்தது மிலையோ?
என்று பைந்தமிழ் எதிலுமென் றிருந்திட லெனவோ?
ஒன்று பட்டுநாம் ஒருவழி சமைத்திடல் தகுமே!
புலவர் வ. சிவசங்கரன், திருக்கழுக்குன்றம்

14.தன்னி னக்கொலை தடுத்திடக் கொல்படை தாரார்
கொண்ட கொள்கையை விற்றுயிர் வளர்த்திடும் கொடியர்
உண்டு நம்மிடம் சிலரென உணர்ந்திடின் உலகோர்
கண்டு பூசுவர் கூட்டமாய் முகத்தினில் கரியை!
சு. சொக்கலிங்கம், புதுச்சேரி-8

15.உலகி லெங்குமே நடந்திராச் செயலென உமிழும்
நிலையில் தாழ்ந்தது நீள்புகழ்த் தமிழகம், நினைத்தால்
கலங்கு கின்றதெம் உள்ளமே புயல்தொடு கலம்போல்.
கலைஞர் செந்தமிழ் ஆர்வலர்ச் சிறையிடல் கறையே
புலவர் கி. த. பச்சையப்பன், சென்னை-81

கருத்தூன்றுக

1. சென்ற இதழ்ப் பாவலர் பரிசுதிட்டம்-36இல் கேட்கப்பட்டது கலித்துறை. இதில் அடிதோறும்

அ) -மா கூவிளம் -விளம் -விளம் -மா என்று ஐந்து சீர்கள் அமையும்.

ஆ) முதற் சீராகக் குறில்ஈற்று மாச்சீரே வரும்.

இ) விளம் வரும் இடங்களில் மாங்காய் அருகி வருவதுண்டு.

ஈ) அடிதோறும் 5ஆம் சீர்களில் மோனை அமையும்.

உ) நான்கடியும் ஓர் எதுகை பெறும்.

இவ்வகைக் கலித்துறைகள் சிந்தாமணி, சூளாமணி, வளையாபதி, நீலகேசி, கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய நூல்களில் காணப்படுகின்றன. கம்பன் கலித்துறைகளில் இவ்வகையே மிகுதி.

1. இவ்வகையில் முதல் சீர் மாச்சீர் என்றாலும் அது குறில் ஈற்று மா வாகவே இருக்கவேண்டும். இப்படியின்றித் தமிழே, தமிழ்நா முதலிய நெடிலீற்று மாச்சீர்களைச் சிலர் பெய்திருந்தனர்.

2. அடிதோறும் இரண்டாம் சீராகக் கூவிளம் மட்டுமே வர வேண்டும். இவ்வாறின்றிச் சிலர் சேர்த்துள்ள சீர்கள் தமிழனின், பிறந்திடு, உருப்பட, நடத்திட, அறிந்திட, அமைதியை, நிலைத்திடும், துணிவினை, உயிரென, தருக்கராம், விரைந்து, விடுதலை, களத்தினில், பிணமென முதலியன.

3. அடிதோறும் 2, 3, 4 ஆம் இடங்களில் மாச்சீர் வரலாகாது. அங்கே மலைபோல் . விழவும். செய்தல், தமிழர் என்ற சீர்களைச் சிலர் பெய்திருந்தனர்.

4. 1, 5ஆம் சீர்களில் மோனை அமையவேண்டும் என்பதைப் பலர் கருத்தில் கொள்ளவில்லை.

5. விரும்புவதே, நீயிலையே என்பன போன்ற விளங்காய்ச்சீர்கள் இப்பாவகையில் எங்கும் வருதல் கூடாது.

6. லமேகேட்டும் என்பது போல் குறில்நெடிலாகிய நிரையசையில் தொடங்கும் புளிமாங்காய்ச் சீர்கள் ஓசையைக் கெடுக்கும்.

7. புணர்ச்சியில் சீர் சிதையும் தொடர்கள், அன்று ஆண்டநல், அழிவது அறமோ, அரசு ஒப்பி, விரும்பு அன்பை, கரும்பு உண்மை, மலிந்து இன்னும், ஆடு இன்பம்.

8. ஒற்று மிகவேண்டிய இடங்கள்: நன்றென செல்வமே, இயற்றி தன்னை, நசுக்க புகைக்குள். தடுத்திட கொல்படை முதலியன.

9. தருமபு ரிதனிலே என்பது போன்ற வகையுளிகள் விரும்பத்தக்கன அல்ல.

10. மலர்ந்ததோ பாக்களும் என்பது எண்வழு.

11. விலக்கியிருக்க வேண்டிய வடசொற்கள்: அற்பன் (கீழ்மகன்) மனிதன் (மாந்தன்) அண்டம் (வெளி) முண்டம் (குறையுடல், அறிவிலி)

பாவலர் பரிசுதிட்டம் - 37

உருவாக வேண்டும் உனக்கொருநா டென்றால்
பிரிவாக வாழும் பிழைப்போக்கை நீக்கு!
பிரிவாக வாழ்தல் பெருமையெனக் கொண்டால்
விரைவாக உன்னினமும் வேரோடு மாயும்!
மேலான உன்மொழியும் வேரோடு மாயும்! - இரா. தி.

மேற்கண்ட பாடலின் யாப்பமைப்பை உன்னித்து நோக்கி அதன் யாப்பமைப்பை அறிந்து அவ்வகையில் இக்காலப் பொருளமைய ஒரு பாடலைச் சிறப்பாகப் படைத்து. சிலை உ0 (4. 1. 2008)க்குள் விடுக்க.