பள்ளிக்கூடங்களில் இலக்கணம்
வெறுக்கப்படுவதேன்?

முனைவர் ச. மாதவன், தஞ்சாவூர்

இன்றைய சூழலில் மொழிப்பாடம் என்றாலே அது மாணாக்கர்களுக்கு இனிமையான ஒன்றாக உள்ளது. ஆனால் அதில் இலக்கணத்திற்கு மட்டும் விதிவிலக்கு. ஒரு மொழியின் முழு ஆளுமையைப் பெற்றுள்ள இலக்கணம் என்பது இன்றியமையாததாக உள்ள நிலையில் இன்று பள்ளிக்கூடங்களில் இலக்கணம் ஏன் வெறுக்கப்படுகிறது? என்று ஆராய்ந்ததால் கீழ்க்காணும் காரணங்கள் விடையாகக் கிடைத்தன.

1. தொடக்க வகுப்பிலேயே இலக்கணத்தைக் கற்பிப்பது.

2. ஆசிரியரே இலக்கணப் பாடத்தைப் பற்றும் விருப்பமுமின்றி நடத்துவது.

3. மாணாக்கர்களுக்கு ஏற்ற கற்பிக்கும் முறையைக் கையாளாமல் கற்பிப்பது.

4. மொழிப் பாடத்துடனும் கட்டுரையுடனும் தொடர்புபடுத்திக் காட்டாமல் இலக்கணத்தினைத் தனிப்பாடமாகக் கற்பிப்பது.

5. பாடத்திட்டதிற்கு ஏற்ற சூழலுக்கு ஏற்ற விதிகளைக் கற்பிக்காமல் விதிகளை மனப்பாடம் செய்ய வற்புறுத்துவது.

6. எடுத்துக்காட்டுகளை மாணாக்கர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ற வகையிலும் அவர்களுக்குப் பிடித்தவற்றிலும் இருந்து கூறாமல் பழைய நூல்களில் உரையாசிரியர்கள் காட்டிய எடுத்துக்காட்டுகளையே கூறுவது.

7. மாணாக்கர்களை அவர்தம் வாக்கியத்திலேயே இலக்கணக்குறிப்பு முதலியவற்றை வழங்கிப் பயிற்றாதது.

8. இலக்கணத்தை ஒரு கருவியாகக் கருதாமல் அந்த அறிவைப் பெற்றிருப் பதே குறிக்கோளும் பயனும் என்று கருதுவது.

9. இலக்கணத்தில் எழுத்துப் பயிற்சியைத் தவிர்த்துக் கற்பிப்பது. விளையாட்டு. தனித்தனிப் பயிற்சி, மொழி பயிற்றாய்வுக்கூடம், கல்வி நுட்பவியல் முதலியவற்றைப் பயன்படுத்திக் கற்பிக்காதது.

10. இலக்கணம் கடினம் என்பது தவறானது என்பதை வலியுறுத்தி, இலக்கணம் புரிந்துகொள்ளும் விதத்தில் படித்தால் அதைவிட இனிமை யானதும், எளிமையானதும் வேறு இல்லை என்பதை விளக்காதது.

இக்காரணங்களால் இன்றைய பள்ளி மாணவர்கள் தாய்மொழியில் பிழை யின்றிப் பேசவும், எழுதவும், படிக்கவும் இயலாமல் மொழியைப் புறக்கணிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இயல்பான தமிழுக்கு இனிமையைப் பிரித்துக் கற்பிப்பதே இதற்குக் காரணம். தமிழையும் இனிமையையும் ஒன்றாக வைத்துக் கற்பிப்போமாக.