நூல் நிறை

பாலும் சோறும்: ஆசிரியர்: முனைவர் தமிழப்பன். வெளியீடு: உலகத் தமிழ் நூலக அறக்கட்டளை, 2.11, இராமசாமி தெரு, தியாகராயநகர், சென்னை -17, பக்கம். 96, விலை உரூ. 70.

பெரியவர்களுக்குப் பாடல்நூல் எழுதுவதை விடச் சின்னஞ்சிறார்க்குப் பாடல் நூல் எழுதுவது மிக மிகக் கடினம். ஏனெனில், சிறார் நூல் இயற்றுபவர் அந்தச் சிறார் நிலைக்குத் தாமும் மாறவேண்டும். அவர்களின் மனவயலில் எந்த எந்த விதைகளை ஊன்ற வேண்டும் என்பதை நன்கு தெரிந்தெடுத்து எளிய சொற்களில் இனிய இசையில் குழைத்து ஊன்றவேண்டும்.

இந்தச் சிறார் பாடல் நூலில் ஆசிரியர் மேற்கூறிய அனைத்து முறைகளையும் கையாண்டு வெற்றி கண்டுள்ளார். சிறிய சிறிய பாடல்கள், பக்கம் அனைத்திலும் பாடலுக்கேற்ற படங்கள், நல்ல நல்ல கருத்துக்கள், என்று நூலை நிரப்பியுள்ளார். எதுகைகள், மோனைகள், அத்தை, மெத்தை, நத்தை போன்ற சுவையூட்டும் இயைபுத் தொடைகள் எல்லாம் நூலில் துள்ளாட்டம் போடுகின்றன. எட்டு எட்டு எட்டு இமயத்தை நீ எட்டு என்பதுபோன்ற இனிய பாடல்கள் நூல் முழுவதும் நிரம்பி வழிகின்றன. சிறார்களுக்கேற்ற இனிய கருத்துக் கருவூலம்.
-புலவர் அரங்க. நடராசன்.