மனம் திறந்த மடல்கள்
புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி.

ஈழத்தமிழர்கட்குத் தமிழக அரசு குரல் கொடுத்தால் எவன் நம்மைத் தட்டிக் கேட்கமுடியும் என்கிறார் துணையாசிரியர். தமிழ்ச்செல்வனின் இழப்பிற்கு முதல்வர் விடுத்த இரங்கற்பாவிற்கே எதிரணி ஜெ. யும் கூட்டணியிலுள்ள இளங்கோவனும் ஓலமிடுகிறார்கள். முழுமூச்சாக இறங்கினால் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணம் நிறைவேறும் வண்ணம் ஆட்சிக் கலைப்புக்கூட நேரலாமன்றோ! கலைஞர் சூடுகண்ட பூனையல்லவா! எனினும் ஆட்சிபோனால் போகட்டும் என்று செயல்படவேண்டும் என்பதே நம் விழைவு. தமிழரை அழிக்கக்கூடிய படைக்கருவிகள் அளிப்பது, கோடிகள் கொட்டிக் கொடுப்பது ஆகியன நடுவணரசின் நயவஞ்சகச் செயல்களே! அவற்றைக் கண்டிக்கும் உரிமையும் வாய்ப்பும் தமிழக அரசுக்கு இருக்கிற தென்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில் ஆட்சியாளரை ஆட்டிப்படைக்கும் ஆற்றல் கொண்ட நாற்பது உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் நாட்டை நம்பியல்லவா நடுவண் அரசே காய் நகர்த்துகிறது.

இராமமூர்த்தி, அதிகாரப்பட்டி

ஈழத் தமிழர் நிலையில் உண்மையை உணர்ந்து கொள்ளமுடியாத நடுவண் அரசோ, மாநில அரசோ அரசியல்வாதிகளோ இல்லை. இந்நிலையில் ஒரு தெளிவான முடிவினை எடுத்து வடநாட்டு மக்கள் வாழும் பங்களாதேசுக்கு உதவியதுபோல் உதவ ஏன் மனம் வரவில்லை? ஓர் இன அழிவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும், அழிக்கத் துணைபோவதும் எந்த வகையில் முறைமை? இரா.செம்பியன், இரா. திருமுருகன் ஆகியோரின் பாக்களைப் படித்த பின்பும் உணராதவர்கள் மாந்தர்களே அல்லர்.

பொறிஞர் அகன் ஐயர்

அன்பு இலதனை சிறுகதையைப் பாராட்டியுள்ள திருலோக்கி ஞானசேகரன் அவர்களுக்கு நன்றி! என் வாழ்வில் நான் எதிர்கொண்ட உண்மை நிகழ்வு களின் ஒரு கூறே அக்கதைக் கருவாம்! ஒலிவடிவங்கள் வரிவடிவங்கள் குறித்துச் செம்பியன் ஐயர், ஆழ்ந்த ஆய்வுக்கருத்துக்களைக் கூறியுள்ளார். தமிழியச்செம்மல் 29.9.07 இல் மறைந்த சோதிப்பிரகாசம் எனக்கு எழுதிய பலமடல்களில், செம்பியன் ஐயரின் கருத்தையே பதிவுசெய்துள்ளார்.